வீறுகொண்டு எழு

பணிச்சுமையை தோளில் சுமந்து
குடும்பச் சுமையை மனதில் சுமக்கும்
உரவு கொண்ட பெண்ணே..
வீறுகொண்டு எழு!!
அவமதிக்கப்படும் இடத்தில்
ஆணித்தனமாகச் சொல்_உன்
இச்சைக்கு நான் ஆளில்லை என்று..
உன் கடைக்கண் பார்வையில்
கருகட்டும் அவனது எண்ணங்கள்!
அழுகை துடைத்து எறிந்தால்
ஆடவர் திமிரும் அடங்கிவிடும்
உரவு கொண்ட பெண்ணே
வீறுகொண்டு எழு!!
பாவை கொடிகளை _உன் பார்வைக்குள் அடக்கி வைக்க நினைப்பது சரியா..?
மலர் சூடும் மங்கையை_ உன்
மனக்கோட்டுக்குள் கொண்டு வர
முயல்வது முறையா..?
பச்சிளம் பதுமைகளை உனக்கு சாதகமாக பலிகடா ஆக்குவதா..?
உரவு கொண்ட பெண்ணே
வீறு கொண்டு எழு!!
உன்னை பத்து மாதம் சுமந்து பெற்றவளும் பெண்ணே..
தொப்புள்கொடி உறவு வழி வந்தவளும் உனது சகோதரியே..
உன்னுடன் பயின்றவளும் உனது தோழியே...
ஆனால்
உன்னுடன் பணிபுரியும் மங்கையை மட்டும் துச்சமாக எண்ணுவது ஏனோ..?
நீ கொடுக்கும் உயர்பதவியா?
உன்னிடம் இருக்கும் பணபலமா?
இல்லை யார் கேட்பார் என்ற குருட்டுத் தைரியமா?
அதிகாரம் இருக்கிறது என்ற ஆணவமா?
இல்லை ஆணாதிக்க எண்ணத்திலா?
மங்கை என்றால் உன் மடி சாய்வாள் என்று நினைத்தாயோ?
இல்லை தொட்டவுடன் சுருங்கிவிடும் தொட்டால்சிணுங்கி என்று நினைத்தாயோ?
நீ மாறு..
இல்லை அவள் மாறுவாள் காளியாக...
வலியது மட்டுமே உயிர் பிழைக்கும்
விதி என்று தேங்கிவிடாமல்
உரவு கொண்ட பெண்ணே
வீறுகொண்டு எழு!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (17-Jun-21, 1:40 pm)
Tanglish : veerukondu elu
பார்வை : 66

மேலே