உலகத் தந்தையர் தினம் - வாழ்க்கைக் கல்வி

"உலகத் தந்தையர் தினம்!"

தந்தையுடன் தானும் பாதி என்றிருக்கும் அன்னையருக்கும்,
மாதொரு பாகனாக இருக்கும் தந்தையருக்கும்
அவர்தம் தந்தைதாய் அனைவருக்கும்,
மனமார்ந்து, சிரம் தாழ்ந்து, தாள் பணிந்து,
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!
தந்தையை மக்கள் வாழ்த்துவதா!!

******************************************************************
"வாழ்க்கைக் கல்வி"

எம்குழந்தைக் காலம்முதல் இந்நாள் வரையில்,
எம்தந்தை யும்தாயும் எங்கட் கென்றும்,
எப்போதும் எமையிருத்திப் பாடம் சொல்லி
எழுதுவெனச் சொன்னதிலை ஏட்டுக் கல்வி,
என்றெதையும் தந்ததில்லை இந்நாள் வரையில்!!
அறிவுரைகள் சொன்னதில்லை!
அறவுரைகள் சொன்னதில்லை!
புத்தகங்க ளைத்தந்து படிக்கச் சொன்ன தில்லை!
மற்றவர்க ளைக்காட்டிப் பாடம் சொன்ன தில்லை!
தாய்த்தமிழைக் கற்பித்த தென்றும் இல்லை!
தரணிமொழி யென்றெதையும் சொன்னார் இல்லை!
அயல் மொழியைக் கைப்பற்றவில்லை!
அயல் மோகம் பின்பற்றவில்லை!
செய்யத் தக்கதுதெனப் பட்டியல் இட்டதிலை!
செய்யத் தகாததெனப் பட்டியல் இட்டதிலை!
பள்ளிப் பாடங்கள் சொல்லித் தந்ததிலை!
பாடும் முறைகள் சொல்லித் தநததிலை!
உண்ணும் முறையைச் சொல்லித் தநததிலை!
உடுக்கும் முறையைச் சொல்லித் தந்ததிலை!
உறங்கும் முறையைப் புகட்டியதிலை!
விழிக்கும் பொழுதைக் காட்டியதிலை!
நல்லவற்றைச் சுட்டியதிலை!
அல்லனவற்றையும் சுட்டியதிலை!
நல்லவர்தம்மைக் கூட்டியதிலை!
அல்லவர்தம்மைக் காட்டியதிலை!
ஆனால்,
மேற்சொன்ன ஒவ்வொன்றையும்,
வாய்ச்சொல்லால் சொல்லிக் கொண்டிராமல்,
தாம் தாமாகவே முன்னின்று இவற்றை எல்லாம்
நாங்கள் பிறந்த நாளில் இருந்து
எங்களுக்குச்
"செய்து காட்டி வாழ்ந்தார்கள்!"
தாய்க்கோழி,
குஞ்சுகளுக்கு,
தின்னத் தக்ககவற்றை மட்டும்,
முதலில்,
தான் தின்று காட்டும்!
தின்னத் தகாதவற்றைக் காட்டிக் கொண்டிராது!!
அப்படியே அவள் செயலை
அணுவளவும் பிசகாது
தாம் செய்யும் குஞ்சுகள் போல,
தட்டாது யாம் செய்தோம்!
தாய்தந்தை செய்தவற்றை
ஏனென்று கேட்காமல்,
தவறாமல் யாம் செய்தோம்!
தவறாமல் யாம் செய்வோம்!
தாய்தந்தை யுடன்வீட்டில் வாழ்ந்தம் என்றால்,
தனியாகப் பாடம்பெறத் தேவை இல்லை!
தம்நலனைக் கைவிட்டு எல்லா நாளும்;
எம்நலனைக் கைக்கொண்ட பெற்றோர்தானே,
எடுத்துக் காட்டாய் வாழ்ந்தார் எங்கள் முன்னே!
கலைமகளும் அவள்துணையும் உயிர்கட் கெல்லாம்,
கரையில்லாத் திறன்தம்மை நிறைத்தல் போலே!!
அதனால்,
இயல்பாக எதைக்கண்டும் மலைத்ததில்லை;
இயலாது என்றெதையும் விடுத்ததில்லை!
எதைநாங்கள் தொட்டாலும் துலங்கும் வண்ணம்;
எமக்கீந்தார் எம்பெற்றோர் வாழ்க்கைக் கல்வி!
அதனால்,
எம்குழந்தைக் காலம்முதல் இந்நாள் வரையில்,
எம்தந்தை யும்தாயும், எங்கட் கென்றும்,
எப்போதும் எமையிருத்திப் பாடம் சொல்லி
எழுதுவெனச் சொன்னதிலை ஏட்டுக் கல்வி,
என்றெதையும் தந்ததில்லை இந்நாள் வரையில்!!
இவ்வாறே தாய்தந்தை உலகில் எல்லாம்;
இருக்கவென வேண்டுகிறோம் எந்தை தாயைை!!
******************************************************************

எழுதியவர் : சந்திர மௌலீஸ்வரன் மகி (செல (21-Jun-21, 10:18 am)
பார்வை : 20

மேலே