அப்பா

ஒரு அன்னைக்கு பத்து மாதம் பிரசவ காலம்
ஒரு தந்தையின் பிரசவ காலம் ஆயுள் காலம்
அன்னை என்பவள் மரம் போல
தந்தை என்பவர் வேர் போல
மரத்தை அனைவரும் போற்றுகின்றோம்
வேர் ஒன்று இருப்பதை மறந்து விட்டோம்
வேர் என்ற ஒன்று இல்லை என்றால்
மரம் என்ற ஒன்று எங்கே வாழும்
வேர் செய்யும் தியாகம் தெரிவதில்லை
வேர் படும் வலிகள் அறிவதில்லை
எத்தனை தியாகம் செய்தாலும்
எத்தனை வலிதான் பட்டாலும்
வெளியில் தெரியாது வேர் தியாகம்
அன்னை பிரசவம் போன்ற உயிர்த் தியாகம்
வாழ்வில் நான் உயர அனுதினமும் உழைத்தாய்
அம்மா இருந்தாலும் நீயும் தான் என் தாய்
பட்டினி கண்டதில்லை நீ இருந்த வரையில்
நீதானே என்றென்றும் தியாகத்தின் புதையல்



உன் பங்கு உணவையும் எனக்கு ஊட்டி மகிழ்ந்தாய்
பாசத்தில் கர்ணனாக என்றென்றும் திகழ்ந்தாய்
நீ இருக்கும் வரை மதித்ததில்லை உன்னை
அதனால் தான் தவிக்கவிட்டு பிரிந்தாயோ என்னை
நீ சென்ற பிறகே உன் தியாகம் அறிந்தேன்
உன்னை பிரிந்த வருத்தத்தில் அனுதினமும் அழுதேன்
போதுமப்பா வந்துவிடு தவிக்கிறேன் உன் பிள்ளை
மரணம் என்ற ஒன்று உனக்கு என்றும் இல்லை
என் மனதில் நிறைந்தவனே வந்துவிடு விரைந்து
உன் நினைவை பிரதிபலிக்கும் இக்கவி தானே விருந்து
தந்தையர் தின வாழ்த்துக்கள் நவில்கின்றேன் இன்று
தினந்தோறும் பார்க்கிறேன் நீ எங்கே எங்கே என்று.
- இராம.ஆனந்தன்.


என்னுடைய தந்தை அமரர் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கும், என் தந்தையைப் போல என் மேல் அன்பு செலுத்தும் என்னுடைய உடன்பிறவா உடன்பிறப்புகளுக்கும் என்னுடைய இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று பூரண ஆரோக்கியமும் மனம் நிறைந்த சந்தோஷமும் உங்கள் வாழ்வினிலே திகழ எல்லாம் வல்ல இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் - இராம.ஆனந்தன்

எழுதியவர் : இராம.ஆனந்தன் (28-Jun-21, 9:24 am)
சேர்த்தது : Rama Anandan
Tanglish : appa
பார்வை : 2291

மேலே