கல்வி என்பதே கனவாய்

கல்வி சேனல்ல பாடம் நடத்துறோங்க
பாத்து படிச்சுக்கோங்க ....
பள்ளிக்கூட வாத்தியாரு
தண்டோரா தான் போடுறாரு ...

கலைஞர் தாத்தா தந்த டிவி அத
கஞ்சிக்கு வேணுமுன்னு வித்துட்டாரு எங்கப்பா...
கஞ்சிக்கு கஷ்டப்படும் நாங்க எல்லாம்
கல்வி சேனல் பார்ப்பதுவும்
எப்படியோ ...

கடைக்கார அக்காவுக்கு கைக்குள்ள ஸ்கூலு
கங்காணி வீட்டு அண்ணனுக்கு கம்ப்யூட்டர்ல ஸ்கூலு
கஞ்சிக்கு கஷ்டப்படும் எங்களுக்கு ???...

பள்ளிக்கூடம் இல்லையில்ல
பண்ணையார் வீட்டு வேலைக்கு
வாரியான்னு கேக்கும் அம்மா ...

தம்பிக்கு பால் வாங்க காசுவேணும்,
தனியா கஷ்டப்படும் எனக்கு
துணையா இருக்குமுன்னு
கஷ்டத்த சொல்லும் அப்பா ...

சோத்துக்காக ஸ்கூல் போகும்
எங்களுக்கு , இப்போ சோத்துக்கே வழியில்ல ...
வருஷம் ரெண்டு ஆச்சு
வாத்தியாரு முகம் கூட மறந்துடிச்சு ...
வாங்கி வச்ச புத்தகப்பை
எடுக்காம கிழிஞ்சிடுச்சு ...

வயல் வேலைக்கு போகும் போது
வழியில பாத்த வகுப்பு தோழன்
வாழ்க்கை இப்படியே போகிடுமான்னு
வருத்தமா கேட்ட வார்த்தை
வலியா வந்துடுச்சு ...

பள்ளிக்கூடம் போகவில்லை
பரிட்சையும் எழுதவில்லை
பாஸுன்னு சொல்லிட்டாங்க ...
பக்கத்துக்கு வீட்டு அக்கா
பத்தாவது பாஸுன்னு சந்தோசம்
பட்டாங்க ...

படிக்காம பாஸாகி என்ன பண்ண
படிச்சு பாஸான எதிர்வீட்டு அக்காவே
மேற்கொண்டு படிக்காம , ஏதோ ஒரு வீட்டுக்கு
எடுபிடி வேலை செய்ய போறாங்க ...

எதுவுமே படிக்காம ,
எழுத படிக்க தெரியாம எத்தனாவது
பாஸாகி என்ன பண்ண ...

படிச்சு கலெக்டர் ஆகி
என் குடும்பம் கஷ்டம் தீர்ப்பேன்னு
கண்ட கனவெல்லாம் கண்ண நிறைக்குதிப்போ ...

கடல் கடந்து வந்த கொரோனா
இப்போ எங்க கல்வியிலும்
கரையானா கலந்துடுச்சே ...

கஷ்டப்பட்டு படிச்சாக்க
காசுக்கு கஷ்டமில்லைன்னு
கணக்கு வாத்தியார் சொன்னாரு ...
வாத்தியாருக்கு தெரியாதோ
படிக்கவே காசு அது வேணும்னு ...

கஞ்சிக்கு கஷ்டப்படும் எங்களுக்கு
கல்வி என்பதுவே கனவாதன் போகிடுமே
பள்ளிக்கூடம் தொறக்கலானா !!!...

இவன்
மகேஸ்வரன்.கோ ( மகோ)
+91-98438 12650
கோவை -35

எழுதியவர் : மகேஸ்வரன்.கோ ( மகோ) (1-Jul-21, 11:54 am)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 51

மேலே