மனித வடிவில் மந்திகள் - ஆசிரியப்பா
ஒழுகிசை அகவல் ஓசை உடைய
இணைக்குறள் ஆசிரியப்பா
மனிதரின் வடிவில் மந்திகள் இணைந்தே
நிமிர்ந்து நடந்து போகுது
வயிறு புடைக்க தின்றதால்
மிகுந்தியாய் கொழுப்பு உடலில் சேர்ந்ததே --- (1)
சேர்ந்த கொழுப்பையும் கரைக்கவே தினசரி
காலையில் நடையினை பழக்குது
நடக்கும் பயிற்சியை முடித்ததும்
அதிகமாய் கொழுத்த உணவை உண்ணுதே --- (2)
அளவிலா மனதின் பெரிய ஆசையால்
அழுத்தமும் அதிகமாய் ஆகுது
அதனையும் குறைக்கவே மருந்தினை
அளவிலும் அதிகமாய் தினமும் கொள்ளுதே --- (3)
இயலா நிலையினை அடைந்தபின் பெரியதாய்
இம்சையில் தினமுமே உழலுது
இளமையில் உழைக்கா நிலையினால்
இரும்பு உடலும் நோயினால் சிதைந்ததே --- (4)
உகந்த உரியக் கால நிலையிலே
உரியதைச் செய்தல் நன்மையே
உள்ள நேரம் போனபின்
எல்லை இல்லா பலவகை வலிவருமே --- (5)
------ நன்னாடன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
