அழகியல் நூறு நூல் ஆசிரியர் தமிழ்மாமணி இலக்கியன் நூல் மதிப்புரை கவிஞர் இராஇரவி

அழகியல் நூறு!

நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்!

நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி!

வெளியீடு : தமிழ்மகள் பதிப்பகம், எண் 16,
15ஆவது குறுக்குத் தெரு, அண்ணா நகர், புதுச்சேரி – 605 005. பக்கங்கள் : 40. விலை : ரூ.50.
******
நூல் ஆசிரியர் கவிஞர் தமிழ்மாமணி இலக்கியன் அவர்கள் புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர். மரபுக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர். பல நூல்கள் எழுதியவர். 76 அகவை தொடக்கத்தில் இந்நூலை வெளியிட்டுள்ளார். தமிழ்மாமணி துரைமாலிறையன் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார். வழக்கறிஞர் எசு. சுப்ரமணியம் மதிப்புரை வழங்கி உள்ளார்.
‘அழகியல் நூறு’ கவிதை நூல் மரபுக்கவிதை விருந்து என்றே சொல்ல வேண்டும். அழகியலை அழகிய தமிழ்ச்சொற்கள் கொண்டு தித்திக்கும் கவிதைகளாக யாத்துள்ளார். தமிழின் பெருமையை உணர்த்தும் விதமான சொல்லாட்சி. நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று.
செடிகளின் சிரிப்போ, தோன்றும்
செம்மலர் விரிப்பே எங்கும்
கடிமணம் காட்டி நம்மைக்
கவர்ந்திடும் வரவேற் கும்மே
கொடியிடை யார்போல் பூத்த
கொடிபடர்ந் தெங்கும் நிற்கும்
செடிகொடி மரங்கள் எல்லாம்
தென்றலாய் புரியும் ஆடல்!
மரபுக்கவிதைகளின் மூலம் செடி கொடிகளை நம் மனக்கண்ணில் காட்சிப்படுத்தி காற்றுக்கு அவை ஆடும் ஆட்டத்தையும் உணர்த்தி வெற்றி பெறுகின்றார் தமிழ்மாமணி இலக்கியன். ‘தமிழ்மாமணி இலக்கியன்’ என்பது புனைப்பெயர் மட்டுமல்ல, காரணப் பெயராகவும் அமைந்து விட்டது. இலக்கணம் மாறாமல் இலக்கியம் வடித்து உள்ளார். ‘அழகியல் நூறு’ நூல் முழுவதும் அழகியலை மிக அழகாக எடுத்து இயம்பி உள்ளார்.
அழகிய கடலே! இன்பம்
அளித்திடும் கடலே வாழி
பழகிட நீ தான் நல்ல
பண்புள நண்பன் என்றும்
முழங்கிடும் உன்றன் பாட்டு
முடங்கிய தமிழ ருக்கு
வழங்கிடும் புத்துணர்ச்சி
வாழிய கடலே என்றும்!
புதுவையில் கடல் உண்டு. கடலுக்கு நேரடியாகச் சென்று, கடலை ரசித்து வடித்த பாடல் என்றே சொல்ல வேண்டும். ‘அலையின் ஓசையை ரசித்து, கடலை நண்பனாக நினைத்து முடங்கிய தமிழருக்கு புத்துணர்ச்சி தரும் கடலே’ என்று வாழ்த்திய விதம் அருமை. கடற்கரையில் அமர்ந்து அலைகள் மாறி மாறி வரும் அழகை ரசிப்பது தனி சுகம். அந்த சுகத்தை இக்கவிதை தந்து விட்டது. பாராட்டுகள்.
கிழக்கெழும் விடியல் வெள்ளி
கிளர்ச்சியை ஊட்டும் நெஞ்சில்
அழகினில் வையம் தோற்கும்
அறிஞரின் நெஞ்சம் போல
வழங்கிடும் ஒளியின் வீச்சை
வண்ணங்கள் புதுமை காட்டும்
தமிழினில் தெறித்த துண்டோ
தண்கதிர்க் குஞ்சோ அஃது.
காலையில் எழுந்து அமர்ந்து விடியலை உற்றுநோக்கி வடித்த கவிதை நன்று. கவிதை வரிகளில் உண்மை இருப்பதால் சுவை அதிகமாகி விடுகிறாது. உவமையும் அருமை. அறிஞரின் நெஞ்சம் போல வழங்கிடும் ஒளியின் வீச்சை, கதிரவனின் ஒளியை ரசித்து, ருசித்து யாத்த கவிதை நன்று. இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி விட்டனர். காலையில் எழுந்து விடியலை ரசிக்க நேரமோ, பொறுமையோ, ரசனையோ இருப்பதில்லை. அப்படிப்-பட்டவர்கள் இக்கவிதையின் மூலமாகவாவது விடியலை ரசிக்கட்டும்.
மான்விழி என்று போற்றி
தேன்மொழி என்றும் அன்னார்
செப்பிடும் மொழியைச் சொல்வார்
கூன்பிறை தானே மங்கை
குறையிலா நெற்றி என்பார்
வான்நிலா என்றும் பெண்ணின்
வான்முகம் தன்னைச் சொல்வார்
தமிழ்மாமணி இலக்கியன் எழுபதைக் கடந்த இளைஞர் என்றே சொல்ல வேண்டும். அழகிய பெண்ணை அழகிய வைர வரிகளில் வர்ணிக்கும் அழகை விவரிக்க வார்த்தை இல்லை. மான்விழி, தேன்மொழி, வான்நிலா என உவமைகளின் மூலம் உணர்த்திடும் அழகு, அழகோ அழகு. அழகியல் பாடுவதும் தனிக்கலை. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் போல கவிதைகளில் அழகியலை விதைகள் போல விதைத்து உள்ளார். பாராட்டுகள்.
தனித்தமிழ் போன்ற காற்று
தண்மலை உலவும் காற்று
கனிக்குலை மோதும் சூழ்ந்த
கழைப்புதர் அசைக்கும் அள்ளிப்
பனிமலர் மணத்தை வீசும்
பசுங்கொடி, செடிகள் தாவித்
தனியொரு நலனைச் சேர்க்கும்
தவழ்ந்திடு காற்றே வாழி!
‘தனித்தமிழ் போன்ற காற்று’. சொல்லாட்சியைப் பாருங்கள். காற்றை வாழ்த்தும் போது தனித்தமிழ் போன்ற காற்று என்கிறார். தனித்தமிழ் உண்மையில் இனிக்கும். புதுவைத் தமிழர்களும் பெரும்பாலானோர், ஈழத்தமிழர்கள் போலவே தனித்தமிழ் பேசுவதிலும் வல்லவர்கள். கவிஞர் என்று கூட எழுதுவதில்லை. பாவலர் என்றே எழுதுவார்கள். தென்றலை வாழ்த்தும் போதும், நல்ல தமிழில் நல்ல உவமைகளுடன் வாழ்த்திய அழகியல் சிறப்பு.
கோட்டையே கொள்கைப் பாடே
கொடிகட்டி ஆண்ட மன்னர்
பாட்டையில் தமிழர் வந்தோர்
பாழ்படச் செய்கை ஏற்றுக்
கோட்டையை விட்டார் பின்னாள்
குழுமிய லானார், மாற்றார்
வேட்டையில் மாட்டி மண்ணும்
மானமும் இழந்தார் இங்கே!
அழகியல் பாடி வருகையில் உள்ளக் குமுறலையும் வடித்து விட்டார். ஆண்ட பரம்பரைத் தமிழன் வந்தாரை வாழவிட்டு கோட்டை விட்ட குமுறலையும் நன்கு பதிவு செய்துள்ளார். மரபுக்கவிதை விருந்து, அறுசுவை விருந்து, அழகியல் விருந்து மறக்க முடியாத விருந்து.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (10-Jul-21, 2:38 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 48

சிறந்த கட்டுரைகள்

மேலே