இதயங்கள் வாழ்த்தும் இவ்வுலகம் போற்றும்
விளையும் பயிர் முளையிலே தெரியுமென
தழைக்கும் உறவை தளிர்கள் உரைக்குது !
வளரும் பருவத்தில் இணைந்த இதயங்கள்
வளர்ந்த பின்னரும் பிரியாத உள்ளங்கள் !
சிந்திக்கும் பார்வையுடன் நோக்கும் விழிகள்
சிந்திடும் புன்னகையுடன் மழலை அருகில் !
மாறிவிட்ட சமூகத்தில் மாற்றங்கள் ஏராளம்
மாறுபட்ட சிந்தனைகள் சிந்தையில் தேக்கம்
மாறிடாத வழக்கத்தால் மனங்களில் ஏக்கம் !
மாற்றிட நினைக்குது வளர்கிற தலைமுறை
மாற்றுவர் நிச்சயம் நம்புகிறது சமுதாயம்
மாற்றங்கள் நிகழ்ந்தால் மகிழ்வர் மக்களும்!
பிஞ்சுகள் உள்ளத்தில் வஞ்சகம் இருக்காது
சாதிமத பேதங்கள் துளியளவும் தெரியாது !
தாய்மொழி பற்றுடன் தனித்துவம் வெளிப்பட
பகுத்தறிவு வளர்த்தால் பகலவனை தொடலாம் !
இலக்கினை வகுத்து இடையறாது உழைத்தால்
இதயங்கள் வாழ்த்தும் ! இவ்வுலகம் போற்றும் !
பழனி குமார்
( படத்தில் உள்ளவர்கள் : -
சக்தி கிரியா , சம்யுக்தா )