மௌனமே வாழ்க்கையாய்
நாங்கள் எப்போதும்
மௌனமாகவே இருக்கின்றோம்
எங்களுக்கு வயதாகிவிட்டது
பிரியமுடன் பேசுவதற்குப்
பிள்ளைகளுக்கு நேரமில்லை
அனுபவங்களை பேசித்தீர்க்க
அருமை நட்புகள் அருகிலில்லை
உரிமையோடு சண்டையிட
உறவுகளும் வருவதில்லை
நீதிக்கதைகளை நெகிழ்ந்து கேட்க
பேரன், பேத்திகளுக்கு பொறுமையில்லை
அலைபேசி மட்டும் இருக்கிறது
அழைப்புகள் எதுவுமில்லை
தொலைக்காட்சியுண்டு - அதற்கு
வாய்மட்டும் உண்டு காதுகளில்லை
கூண்டுகளில் கதவிற்குள்
கிளிகளுக்கு சுதந்திரமில்லை
வயோதிகத்தின் விளிம்புகளில்
வார்த்தைகளுக்கு விடுதலையில்லை
ஏங்கித்தவிக்கும் எங்களுக்கு
பேசுவதற்கு சங்கதியில்லாமலில்லை
கேட்பதற்குத்தான் சந்ததியில்லை
எங்களுக்கு வயதாகிவிட்டது
நாங்கள் இப்போதும்
மௌனமாகவே இருக்கின்றோம்