விழுந்தேன்

"மகேசனுக்கு ஒரே சிந்தனை, காதல் கதை, கவிதை, எழுத வேண்டும்.
எப்படி திடிரென்று அவருக்கு இந்த சிந்தனை வந்தது?

இளம் வயதில் இவருக்கு காதலிக்க நேரமில்லை!. படிப்பு, வேலை, என்று இருந்துவிட்டார்.

சொந்தத்தில் அம்மா, அப்பா, பார்த்த பெண்ணை மணந்து கொண்டார். இரண்டு குழந்தைகளும் ஆயிற்று.

ஓடி, ஓடி உழைத்து அந்த இரண்டு குழந்தைகளையும் ஆளாக்கி, நல்லபடியாக செட்டிலும் செய்து விட்டார்.

இதற்கு இடையில் அவ்வப்போது சிறு சிறு கதை, கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்புவதையும் வழக்கமாகி இருந்தார்.ஒரு சில படைப்புகள் வெளியாகியும் இருந்தன.

இதில்தான் இப்போது காதல் கதை, கவிதை, எழுதும் 'திடீர் ஆசை'!

நேற்று பார்க்கில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது 'கலாட்டா கண்ணப்பன்' அவனை அப்படித்தான் அழைப்பர், தன் கவிதைகளையும் எழுத்தையும் கேலி செய்து கொண்டிருந்தான், நண்பர்களும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

உடனே அவன் 'காதல் கதை, கவிதை எழுதப்பா! அப்போதுதான் நீ மேலும், மேலும் 'shine' ஆக முடியும்'! என்று கூறி சிரிக்க, அனைவரும் சிரித்தனர். அதிலிருந்து தான் இந்த சிந்தனை.
யோசித்தார், ஆனால் ஒன்றும் புரியவில்லை.

' படீர்' என்ற சத்தம் 'அம்மா' என்று ஒரு அலறல்! எழுந்து ஓடிச்சென்று பார்த்தார், அங்கே மனைவி லட்சுமி பாத்ரூமில் விழுந்து கிடந்தாள்.

'கால் வழிக்கிடுச்சுங்க' என்றாள்.
உடனே அவளை மெதுவாக தூக்கி சோபாவில் அமர செய்தார். 'வலிக்குதுங்க! வலிக்குதுங்க!' என்று அவள் கதற, வெளியே ஓடி சென்று ஒரு ஆட்டோவை பிடித்து அங்கிருந்து டாக்டர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்,

வழியெல்லாம் ஒரே 'அம்மா வலிக்குது', 'அப்பா வலிக்குது'! என்று அழுகை.

டாக்டர் செக்-அப் செய்த பின்பு விழுந்ததில் முதுகிலோ, இடுப்பிலோ லேசாக அடிபட்டிருக்கலாம், பெரிதாக பயப்பட ஒன்றும் இல்லை என்று கூறினார். அதற்குள் லக்ஷ்மி திடீரென்று மயக்கம் ஆகிவிட, இவருக்கு ஒரே பதற்றமும், கவலையும், வந்து விட்டது.

'பாருங்க என் மனைவி!' என்று அலறினார். 'கவலைப்படாதீங்க, மகேசன் நான் பார்க்கிறேன்' என்று சொல்லி, அவரை அங்கேயை படுக்க வைத்து டாக்டர் செக்-அப்பை தொடர்ந்தார்.

'என் மனைவிக்கு என்ன ஆபத்து', எனக்கு ஒன்றுமே புரியவில்லையே' என உளற தொடங்கினார். டாக்டர் சொல்வது எதுவுமே, அவர் காதுகளில் விழவில்லை.

முகம் முழுவதும் ஈரமாகி விட்டது. அப்போதுதான் அவருக்கு தெரிந்தது, தான் அழுது கொண்டு இருக்கிறோம் என்று.

அந்த அறுபது வயது மகேசன்,
இன்று தான் முதல் முதலாய்,
காதலில் விழுந்தார் (உணர்ந்தார்). "

-------

எழுதியவர் : (20-Jul-21, 4:47 pm)
சேர்த்தது : Lakshya
Tanglish : vizunthEn
பார்வை : 147

மேலே