அவள் நினைவே சங்கீதம்
அவள் நினைவே சங்கீதம்
வானத்து நிலவை
ஏந்துகிறேன்
என்
இருகரங்களால்!
இரவல் ஒளிகேட்டு
இரந்து நிற்கிறது
ஞாயிறும் அவள் முக ஒளிகண்டு!
சிதறிய அவள் துளிப் புன்னகையும்
முளைவிட்டு நிற்கிறது
பால்வெளியில் புது விண்மீனாய்!
பஞ்சுவிரலின்
அவள் ஒவ்வொரு தீண்டலும்
ஆனந்தக் கடலுக்குள்
ஓர் அதிசயத் தீவை எனக்கென எழுப்புவதாய்!
அவள் குரல்கேட்டு
என் செவிப்பறைகள்
இழைக்கின்றன இசைக்கோட்டைக்கே
புதுஉருவை!
என் கரம் பற்றிய
அவள் நடைகள்
என் ஆயுளை
நீட்டித்து எழுதும்
எழுத்தாணி ஆகின்றன
காலத்தின் கரங்களில்!
என் உயிரின்
வேர் தொட்டுப் பாயும்
குருதி ஓட்டத்தின்
நடை ஆகிப் போகிறது
அவள் நினைவு!
என் நிகழ்காலத்தை
தன் தலை சுமத்தி
நகர்த்திச் செல்கிறது
என் பிஞ்சுமகள் அவள்
எதிர்காலம்!
S.UMADEVI