கோடை காலத்து மழை

பருத்தித்துறையில் தோட்டங்கள் என்றதும் பசுமையான நினைவுகளை சுமந்து வரும் ஊரான தம்பசிட்டியில்,

அதிகாலை வேளையில் வழமை போலவே எழுந்து கொண்டார் பசுபதி. காலைகடன்களை முடித்துக் கொண்டு,

"மெய்யேப்பா... தேத்தண்ணியை தாறீரே... இண்டைக்கு கத்தரி, மிளகாய்க்கு தண்ணி விடுற நாள்... இப்பவே போனால் தான் வெயில் ஏற முதல்ல தண்ணி விட்டுட்டு வந்திடலாம்..." பசுபதி

"இந்த பொரியரிசி உருண்டைய வாயில போட்டுட்டு தேத்தண்ணியை குடியுங்கோ... வெறும் வயித்தில காஞ்சாலும் அது வேற வருத்தங்களை கொண்டு வந்திடும்..." தேநீருடன் சாப்பிடுவதற்கு பொரி அரிசி மாவில் தேங்காய் பூ போட்டு உருண்டையாய் குழைத்து பிடித்திருந்தார் பாக்கியம்.

'இன்று வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மாலை வேளையில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது....' தென்றல் FM இல் வானிலை அறிக்கை போய்க்கொண்டிருந்தது.

"மாரி காலத்திலேயே உவங்கள் எண்டைக்கு மழை பெய்யும் என்றாங்களோ அண்டைக்கு மழை பெய்யாது... அதுவும் இப்போ இந்த கோடை காலத்தில் சொல்லவா வேண்டும்..." - பசுபதி

"நேற்று அச்சுவேலி, கோப்பாய், யாழ்ப்பாணம் எல்லாம் நல்ல மழையாம். எங்களுக்கு தான் மாசக் கணக்கில விளையாட்டு காட்டிக்கொண்டு இருக்குது..." பாக்கியம் கூறினார்.

"இப்ப புகையிலை அறுவடை காலம். உவங்கள் தான் பிள்ளையாருக்கு தேங்காய் உடைச்சு மழைய வரவிடாமல் செய்திருப்பாங்கள் போல... உந்த தேசமெல்லாம் பெய்கிற மழை இங்கே மட்டும் தானே இல்லை..."

"வல்லைக்கு அங்கால நல்ல மழையாம்... இங்கால வரத்தான் பஞ்சிப்படுகுது..." - பாக்கியம்

"அண்டைக்கு ஒரு நாள் நெல்லியடி சிக்னல் லைட்டில் நிற்கும் போது பார்த்தன்... நாலைஞ்சு லாண்ட்மாஸ்டர், கெண்டர் வாகனங்களில் புகையிலை அறுவடை செய்து இங்கால தான் கொண்டு வந்தவங்கள்...." மகன் பிரதீப் எழுந்து வந்து தாயின் அருகில் அமர்ந்தான்.

"அடேய் பிரதீப்... இந்த வாட்டர் பம்ப் அ கிணற்றடிக்கு கொண்டு போகோனும். ஒரு கைபிடிக்கிறீயே..." என்றவாறு எழுந்தார்.

தகப்பனும் மகனுமாக தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை கிணற்றடியில் வைத்து பூட்டி தோட்டத்துக்கு நீர் இறைக்கத் தொடங்கினார் பசுபதி

தோட்டத்தினையே நம்பி வாழ்க்கையை கொண்டு செல்லும் பசுபதி, பாக்கியம், பிரதீப், அமுதா என ஒரு சிறிய அழகிய குடும்பம். மழையை நம்பி விவசாயம் செய்த காலம் போய் கிண்ணற்று நீரில் விவசாயம் பார்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

மதியத்துக்கு சற்று முன்னதாக தோட்டத்தில் இருந்து களைத்துப் போய் வந்தார் பசுபதி. தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை கழட்டி உதறிவிட்டு விறாந்தையில் விரித்து 'அப்பனே பிள்ளையாரப்பா...' என்றவாறு படுத்துக் கொண்டார்.

"என்னப்பா இறைச்சு முடிஞ்சுதே..." - பாக்கியம்

"எங்க முடியிறது. பாதிக்கு தான் பாத்தி மாறினன். கிணத்தில தண்ணி முடிஞ்சு போச்சு... பின்னேரத்துக்கு ஊறிட்டென்றால் பார்ப்போம்.... இல்லாட்டிக்கு நாளை காலையில் தான் இறைக்கோனும்..." பசுபதி

"அட... இந்த மழையை நம்பி பிரயோசனம் இல்லை. பாழாப் போன மழை...." என்றவாறு மதிய உணவு தயார்படுத்தலில் மும்முரமாக சுழண்டு கொண்டிருந்தார்.


மதிய உணவை முடித்துக் கொண்டு வெளி விறாந்தையில் ஒரு குட்டித்தூக்கத்தில் இருந்த பசுபதியை எழுப்பியது வீட்டு தகரத்தில் விழுந்த தென்னோலையின் சத்தம்.

கண்விழித்தவருக்கு இருட்டி விட்டிருந்ததை பார்த்து ஆச்சரியம். 'இப்போ தானே படுத்தேன். அதற்குள் இரவாகிவிட்டதா' என யோசித்தவாறே கடிகாரத்தை பார்த்தவருக்கு அது மூன்று மணிக்கே ஐந்து நிமிடங்கள் இருப்பதாக காட்டியது. அப்போது தான் உணர்ந்தார் இது மழை இருட்டு என்று.

ஆம், வானம் எங்கும் மழை மேகம் சூழ்ந்திருந்தது. சில்லென்ற குளிரான காற்று தேகத்தை தழுவி சென்றது. காற்றின் வேகமும் சற்றே அதிகரித்திருந்தது.

"இஞ்சாரப்பா.... மழை வரும் போல இருக்கு... விறகுகள் ஏதும் எடுத்து உள்ளுக்க போடனுமே..." - மனைவிக்கு குரல் கொடுத்தார் பசுபதி.

"என்ன இந்த மனுசன் தூங்கவிடாமல் கத்துது..." என்று புலம்பிக்கொண்டே வெளியில் வந்த மனைவி பாக்கியம்

"என்னப்பா... இப்பிடி இருட்டி கிடக்கு. மாரி காலம் மாதிரி..." என கூறியவர் காற்றாட விரித்திருந்த தலைமுடியை சுருட்டி கொண்டையை போட்டுக் கொண்டார்.

"காலையில் அடிச்ச வெயிலுக்கு நினைச்சனான் பின்னேரத்துக்கு மழை வரும் போல தான் என்று..." கூறிய பசுபதி

"இண்டைக்கு வெளுத்து வாங்க தான் போகுது போல. அந்த விறகுகளை உள்ளுக்க எடுத்து போடட்டே..." - என மனைவியை பார்த்து கேட்டார்.

"இல்லை நான் எடுத்து போடுறன்... பின்னுக்கு இருக்கிற தென்னம் பொச்சு மட்டை பேக்கை கொஞ்சம் எடுத்துக் கொண்டு வாறியளே.... நல்லா காஞ்ச தென்னம் பொச்சு. நனைஞ்சிடப் போகுது..." பசுபதிக்கு கூறிய பாக்கியம்

"பிள்ளை... கொடியில காயிற உடுப்புக்களை எடுங்கோ பிள்ளை..." என மகள் அமுதாவுக்கு கட்டளையிட்டாள்

"அண்ணாவை தட்டிவிடு பிள்ளை. மோட்டர் பைக் வெளியில நிற்குது... உள்ளுக்க எடுத்து விடச்சொல்லு..." - அடுத்தடுத்து கட்டளைகள் பிறப்பித்து சுழண்டு கொண்டிருந்தார் பாக்கியம்.

"என்னனை இப்பிடி இருட்டிப்போய் இருக்கு..." என்றவாறு கொடியில் காய்ந்து கொண்டிருந்த உடுப்புக்களை எடுத்தாள் அமுதா

மகன் பிரதீப்பும் வெளியில் வந்து பைக்கை எடுத்து உள்ளே விட்டுட்டு விறகுகளை உள்ளே அடுக்க அம்மாவுக்கு கூடமாட உதவி செய்தான்.

சில்லென்று அடித்துக் கொண்டிருந்த குளிர்ந்த தென்றல் தேகத்தை உரசுகையில் உலகை மறக்கச் செய்தது. கூடவே காற்றில் அள்ளி வீசிய மண்வாசனையும் ஆளை மயக்கியது. தும்பி பூச்சி வட்டமடித்துக் கொண்டிருந்தது.

'மேகம் கறுக்குது மழை வரப் பாக்குது வீசியடிக்குது காத்து... மழைக் காத்து...' அமுதா பாடிக்கொண்டிருந்தாள்

"மெய்யேப்பா... போன வருச மழைக்கு சொன்னனான். பெரிய அறையில் கூரை ஓட்டை கொஞ்சம் சரி செய்யச் சொல்லி... இந்தா இந்தா என்று இன்னமும் சரி செய்தபாடில்லை..." என கணவனை கடிந்து கொண்டவள்

"பிள்ளை பெரிய அறைக்குள்ள ஒழுகிற இடத்தில மேசையை இழுத்துப் போட்டு பெரிய கிண்ணியை வைச்சுவிடு..." மகளுக்கு கூறிவிட்டு மீண்டும் பசுபதியை பார்த்தார்.

"இந்த முறை சரி உதை ஒருக்கா மணியன் ட சொல்லி பாருங்கோப்பா... சரியா அவள் படிக்கிற மேசைக்கு மேல தான் ஒழுகும்..." - பாக்கியம்

"சரி சரி... நான் பார்க்கிறன்..." என்றவர்

"பிள்ளையாரப்பா... உனக்கு தேங்காய் உடைக்கிறேன். இண்டைக்கு சரி மழை அடிச்சுக் கொட்டோனும். இந்த பயிர் பத்தாளை எல்லாம் செழிக்கோனும்... எத்தனைக்கு என்று தான் கிணற்று தண்ணீரை இறைக்கிறது...." - பசுபதி பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டார்.

"பார்த்து பார்த்து நட்ட உந்த தென்னம்பிள்ளை எல்லாம் தண்ணி இல்லாமல் வாடிக் கருகி போகுது. ஒரு மழை பெய்திச்சென்றால் அதோட உசும்பிடும் எல்லாம்...." மனைவி பாக்கியம்.

"ஓமனை... நானும் நாலைஞ்சு செவ்வரத்தை, ரோசா எல்லாம் கொண்டு வந்து நட்டனான். ஒன்றும் எழும்புதில்லைனை..." - அமுதா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியவள்

லேசாக தூறல் விழ தொடங்கியிருந்தது.

"இண்டைக்கு மழையில் நல்லா ஆசை தீர நனையோனும்..." அவளின் நீண்ட நாள் ஆசை.

"விசரே உனக்கு... கன நாளுக்கு பிறகு பெய்கிற மழையில் நனைஞ்சா காய்ச்சல், சளி என்று வருத்தங்கள் தான் வரும்... பிறகு எனக்கு கரைச்சல் தரவேண்டாம்." தாய் கூறினார்

"அம்மா... இந்த பூனைக்குட்டிக்கு பின்னுக்கு விறகு அட்டாளைக்கு மேல சாக்கை போட்டு விட்டுவிடட்டே...." - பூனைக் குட்டியை கொஞ்சிக்கொண்டு கேட்டாள் அமுதா

"ஓம் பிள்ளை... பாவம் பயந்திடும் தான்... அதுக்காக வீட்டுக்குள்ள விட்டால் பீச்சி விட்டுடும்... விறகு அட்டாளைக்கு மேலே என்றால் நனையாது..." அம்மா

"அண்ணோய்... பேஸ்புக் ல ஸ்டேட்டஸ் போடவில்லையா... 'யன்னல் ஓரம், சுடச் சுட தேநீர், இளையராஜா பாட்டு, சோவென மழை' என்று...." அவனை கலாய்த்தாள் அமுதா

"அது சரி... இப்ப என்ன செய்திட்டு இருக்கிறன் என்று தெரியுது தானே... மழை வருது என்றால் முதல்ல வீட்டு வேலைகளை பார்க்கோனும்..." - நக்கலாய் சொன்னான் பிரதீப்

"அட நீ வேற அண்ணா... உங்க பேஸ்புக் ல ஸ்டேட்டஸ் போடுறவங்கள் எல்லாம் உண்மையையே போடுறாங்கள்... சும்மா அடிச்சு விடுறது தானே... காசா பணமா..." - அமுதா

"அட மறந்தே போனன் தம்பி... கிணத்துக்க தண்ணி இல்லை என்று அப்பா சொன்னவர். பார் தம்பி... தண்ணி ஊறியிருந்தால் மோட்டரை போட்டு தொட்டியை நிரப்பிவிடனும்... குறுக்காலபோவர் மழை பெய்ஞ்சா கரண்டை கட் பண்ணிப் போடுவாங்கள்..." அடுத்த ஆணை வரவும்,

"நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்கள் அம்மா... போன் அ சார்ஜ் ல போட மறந்திட்டன். கரண்ட் போனால் அவ்வளவு தான்..." - அமுதா எழுந்து அறையினுள் ஓடினாள்.

"அமுதா என்ரயையும் ஒருக்கா போட்டுவிடு..." வெளியில் இருந்து பிரதீப்.

"தூரத்தில இடி முழக்கம் வேற கேட்குது... மழையை உப்பிடியே கொண்டு போயிடும் போல தான் இருக்குது...." - பசுபதி வேதனைப்பட்டார்.

"இல்லை இல்லை... இண்டைக்கு அடிச்சு ஊத்த தான் போகுது..." பாக்கியம் நம்பிக்கையோடு இருந்தார்.



பசுபதியின் வீட்டிலிருந்து ஒரு எட்டு வீடு தள்ளி,

"அடேய்... பரமா, கிளியன், சாந்தன்... சீக்கிரம் ஓடி வாங்கடா... மழை வரப் போகிற மாதிரி இருக்கு..." சிற்றம்பலத்தார் குரல் வைத்தார்.

மூவரும் விரைந்து வந்தனர்.

"இந்த பாழாய் போன மழை வந்திடும் போல இருக்கு. பரமன், நீ வெளியில் காயப்போட்ட புகையிலை எல்லாவற்றையும் வீட்டுக்குள்ள கொண்டு போய் போடு... நீங்கள் இரண்டு பேரும் பெரிய தரப்பாழைக் கொண்டு வந்து மூடக்கூடிவற்றை மூடி காற்றுக்கு பறக்காமல் இருக்க பாரத்தை வையுங்கோ..."

மூவரும் விரைந்து செயல்பட்டனர்.

"பிள்ளையாரப்பா... மழையை வரவிட்டுடாத... உனக்கு தேங்காய் உடைக்கிறன். மழை வந்தால் எல்லாம் பாழாய் போயிடும்... கஷ்டப்பட்டு அறுவடை செய்து கொண்டு வந்த புகையிலை... நனைஞ்சா அவ்வளவு தான்..." கூறிக்கொண்டே சிற்றம்பலத்தாரும் கூட உதவி செய்து விரைவுபடுத்தினார்.

வருணபகவான் தன் கடமையை செய்தார்.


- பெல்ழி

எழுதியவர் : பெல்ழி (29-Jul-21, 12:54 pm)
பார்வை : 459

மேலே