நானும் உன் போல்தான்
![](https://eluthu.com/images/loading.gif)
நண்பனே!
உன் முகத்தில்
ஏனிந்த சோகம்?
எனக்குத் தெரியும்!
நீ
காதல் வலையில் விழுந்திருப்பாய்!
அவளால்
உன் சிந்தனைக்கு
சிறகு முளைத்திருக்கும்.
அவள் கண்கள் சொன்னவை
உன் காகிதத்தில்
கவிதைகளாய் மலர்ந்திருக்கும்.
கடற்கரை மணலுக்கும்
பூங்கா மலர்களுக்கும் மட்டுமே
உங்கள் காதல் தெரிந்திருக்கும்.
அவள்
விரல்களின் ஸ்பரிசத்தில்
உலகையே மறந்திருப்பாய் !
உன்னைப்போல் அதிர்ஷ்டசாலி
யாரும் இல்லை என்று
நினைத்திருப்பாய்!
திடீரென் ஒரு நாள் ...
ஒரு சொட்டுக் கண்ணீருடன்
அவள் சொன்ன வார்த்தைகள்
உன்னை
இடியாகத் தாக்கியிருக்கும்!
அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு
அமைதியாய் அழுதிருப்பாய்!
அவள் உதடுகள் உச்சரித்தது
உன் உள்ளத்தில் இன்னமும் இருக்கும் .
அவளது கரையான் நினைவுகள்
உன் இதயத்தை அரித்திருக்கும்!
துயர அலைகள்
உன் தூக்கத்தை கெடுத்திருக்கும்!
என்ன சரிதானே?
ஏனிந்த ஆச்சர்யம்?
இவையெல்லாம் எனக்கு
எப்படித் தெரியும் என்றா?
நண்பனே!
நானும் உன் போல்தான்.