ஈந்தருளும் மாண்புடை யாரையே மண்ணும் உயர்விண்ணும் மாண்பு புரியும் - உரம், தருமதீபிகை 872

நேரிசை வெண்பா

மாந்தர் பலகோடி மன்னி யிருந்தாலும்
வேந்தர் பலபேர் விளங்கினும் - ஈந்தருளும்
மாண்புடை யாரையே மண்ணும் உயர்விண்ணும்
மாண்பு புரியும் மதித்து! 872

- உரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பலகோடி மக்கள் உலகில் உலாவியிருந்தாலும், பெரிய அரசர்கள் பெருமையாய் விளங்கி நின்றாலும், பிறர்க்கு இரங்கி உதவும் உபகாரிகளையே எவரும் உவந்து மதித்துப் புகழ்ந்து போற்றுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்; அந்த மதிப்பை மாண்போடு பெறுக என்பதாம்.

எல்லாரும் மனிதராய்த் தோன்றினாலும் அவருள் நல்ல நீர்மையாளர் சிலரே என்றும் சீர்மையாளராய்ச் சிறந்து விளங்குகின்றார். அவரையே உலகம் கூர்மையாக உவந்து நோக்கிப் புகழ்ந்து பேசி எவ்வழியும் விழைந்து போற்றி வருகின்றது.

மாந்தருள் வேந்தர் சிறந்தவர்; பூமியை ஆளும் தலைமையோடு அவர் மகிமையாய்ப் போந்துள்ளார்; ஆனாலும் தரும சீலங்களைத் தழுவி ஒழுகிச் சீவர்களுக்கு இதமாய் உபகாரங்களைச் செய்தபோதுதான் அவர் சீர்த்தியாளராய்ச் சிறந்து விளங்குகின்றார். அரிய செயல்வழியே பெரியநலங்கள் பெருகுகின்றன.

இதம், ஈகை, உதவி, உபகாரம் என்னும் மொழிகள் எவர்க்கும் உவகை தருகின்றன. ஆருயிர்கட்கு ஆதரவாயுள்ளமையால் ஈகையை யாவரும் ஆவலோடு ஓகை மீதூர்ந்து போற்றுகின்றனர். இனிமை சுரந்தவழி தனி மகிமை சிறந்து வருகிறது.

காமகேனு, கற்பகம், கார்மேகம், கனிமரம் என இனிய பொருள்களோடு இணைத்து உபகாரிகளை உயர்ந்தோர் புகழ்ந்து போற்றி வருவது இயலுரிமையாய் வந்துள்ளது. பிறர் இன்பமாய் இனிது வாழ அன்பு செய்து அருள்பவராதலால் உபகாரிகள் உலகம் புகழ ஒளிபெற்று நின்றுள்ளார். பயனுடையவர் யாண்டும் வியனாக வியந்து பாராட்டப்படுகின்றார்.

பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் 216 ஒப்புரவறிதல்

நல்ல நீர்மையாளனிடம் செல்வம் சேரின் இனிய கனிமரம் ஊர் நடுவே பழுத்து நிற்பது போலாம் என உபகாரி நிலையைத் தேவர் இவ்வாறு.உணர்த்தியுள்ளார். ஊரார் யாவருமவனை நயந்து வியந்து உவந்து போற்றுவர் என்பதை இதனால் உணர்ந்து கொள்ளுகிறோம். உதவியாளனை உலகம் வாழ்த்தி வருகிறது.

நேரிசை வெண்பா

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 29 நல்வழி

பழுத்த மரம் பறவைகளுக்கு ஆதரவாயிருத்தல் போல் பழுத்த உபகாரி உலக மக்களுக்கு ஆதரவளித்து அருளுகிறானென இது உணர்த்தியுள்ளது. நல்ல உபகாரியை ஊரார் மட்டுமன்று உலகத்தார் எல்லாருமே உவந்து கொண்டாடுவர் என ஒளவையார் செவ்வையாய் விளக்கி இவ்வாறு கூறியிருக்கின்றார்.

யாண்டும் தன்னலமே நாடியுழலும் மனித இனத்தில் பிறர்க்கு நலமாய் உதவி புரிவார் மிகவும் அரியர். அந்த அருமையிலிருந்து அருமையாய்ப் பிறந்த பெரிய மகிமையாளராதலால் உபகாரிகளை யாவரும் பெருமையாய் மதித்து யாண்டும் உரிமையோடு புகழ்கின்றனர். செய்யும் இதம் தெய்வ பதம் ஆகிறது.

உயிர்களுக்கு உதவி செய்பவர் உயிர்க்கு உயிரான பரமனது பிரியத்தையும் அருளையும் எளிதே பெறுகின்றனர்.

The most acceptable service of God is doing good to man. - Benjamin

கடவுளுக்கு மிகவும் பிரியமான செயல் மனிதனுக்கு நன்மை செய்வதே என்னும் இது இங்கே உன்னியுணரவுரியது.

The hands that help are holier than the lips that pray. - R.G.Ingersall

தேவனைத் துதிக்கிற வாயை விடச் சீவனுக்கு உதவி செய்கிற கைகள் மிகவும் பரிசுத்தமுடையன என இங்கர்சால் என்பவர் இங்ஙனம் கூறியுள்ளார். உயிர்களின் துயர் களைவது உயர் பரமாம்.

உதவி நிலை உயர்ந்த தலைமையாய் ஒளி பெறுகின்றது. உள்ளம் இரங்கி உதவுகின்றவனை வள்ளல் என வையம் வாழ்த்தி வருகிறது. யாரும் அவனிடம் பேரன்பு புரிந்து வருகின்றனர்.

ஒல்லையூர் என்னும் ஊரில் சாத்தன் என்ற பேருடைய செல்வன் ஒருவன் இருந்தான். நல்ல உபகாரி. எல்லாருக்கும் இதம்செய்து வந்தான். இரவலர் சிலர் இவனால் புரவலராயினர். வண்மையோடு திண்மையிலும் இவன் சிறந்து விளங்கினான். தாளாண்மை, தோளாண்மை, வாளாண்மை, வேளாண்மை முதலிய ஆண்மைகள் மேன்மை எய்தியிருந்தமையால் வேந்தரும் இவனை விழைந்து வியந்து வந்தனர். யாவருக்கும் பேருபகாரியாய் இசையோடு வாழ்ந்து வந்த இவனது வாழ்நாள் முடிந்தது. இறந்து போனான். இவனது பிரிவை நினைந்த ஊரும் நாடும் ஒருங்கே வருந்தின. கீரத்தனார் என்னும் புலவர் இவனுடைய நெருங்கிய நண்பர்களுள் ஒருவர். இவன் இறந்து போனதை அறிந்து அவர் பெரிதும் பரிந்து வருந்தினார். ஒல்லையூரை நோக்கி அல்லலோடு வந்தார். காட்டு வழிகளில் முல்லைக் கொடிகள் நன்கு பூத்திருந்தன. யாரும் பறிப்பாரின்றி மலர்ந்து விரிந்திருந்த அம்மலர்களை நோக்கி இக்குலமகனுடைய நிலைமைகளையெல்லாம் நினைந்துருகி அவர் மறுகிப் பாடினார். அயலே காண்க.

இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான்; பாடினி அணியாள்;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே - கீரத்தனார்

இக்க உபகாரி மாய்ந்த பொழுது அந்த நாட்டு மக்கள் துக்கம் படிந்திருந்த நிலையை இப்பாட்டு நன்கு காட்டியுள்ளது. முல்லைக் கொடியைப் பார்த்து தம் உள்ளத் துயரைப் புலவர் வெளிப்படுத்தியுள்ள இதில் இந்த வள்ளலுடைய நீர்மை சீர்மைகளைக் கூர்மையாய் ஓர்ந்து நாம் தேர்ந்து கொள்ளுகிறோம்.

மனித சமுதாயத்தில் உபகாரி புனிதமாய் மகிமை பெறுகின்றான்; உலகம் அவனைத் திலகமாய் உவந்து கொண்டாடி வருகிறது. மன்னுயிர்க்கு இதம் செய்து உன்னுயிரை நீ உயர்த்திக் கொள்க. அவ்வாறு உயரின் எவ்வழியும் திவ்விய இன்பமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Aug-21, 11:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே