தூரிகை
சில நாட்களாகத் தனது வீட்டின் கூரையில் இரவு நேரத்தில் சண்டை. புதியதாகத் திருமணம் ஆன தம்பதிகளா எனத் தெரியவில்லை. வீட்டைச் சுற்றி பூனைகள் இருந்தும் இந்த எலிகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. தூங்கும் நேரத்தில் கால் விரல்களில் கடியும் வாங்கியதால் புலம்பிக்கொண்டிருந்தான் ஜீவிதன்.
படிப்பு குறைவுதான். முடியும் வரை படித்து விட்டு, வீட்டின் அருகில் உள்ள நடுத்தர பேரங்காடியில் வேலை செய்கிறான். சேர்ந்தது என்னவோ, அங்கே வேலை செய்த சத்தியா என்பவளை நெருங்க. ஆனால், தனக்குக் கல்யாணம் என சொல்லிவிட்டு எங்கேயோ சென்றுவிட்டாள்.
" டேய் ஜீவி, வேல முடிஞ்சதும் சாப்ட்டு போவோம் " ஜீவியின் நண்பன் ராஜ்.
" ஒகே " என சொல்லிவிட்டு 'shutter' அனைத்தையும் இழுத்து மூடினர்.
" ரெண்டு தோச ணே!!..டேய் உனக்கு?" என ராஜ் ஜீவிதனிடம் கேட்க...
" இருடா.. சொல்றேன் " என மௌனமாக தனது குளிர்பானத்தைக் கிண்டி கொண்டிருந்தான் ஜீவிதன்.
" இன்னும் எத்தன நாளைக்கு இங்க வேல செய்றது ராஜ்?".
" நானும் அததான் யோசிக்கிறேன். மோட்டர கூட வாங்க முடில" சலித்துக்கொண்டான் ராஜ்.
" மிலிட்டிரில சேரனும்னு ஆச. அம்மாதான் விடல. எனக்கும் முடி வளர்க்கனும்னு ஆச" ஜீவிதன்.
" முடி வளர்துக்குட்டு 'army officer ' ஆகப் போரியா?, சின்ன வயசுல 'Rambo' அதிகம் பார்ப்பியோ? " ராஜ்.
தோசையும் வர, " அண்ணே, பொரிச்ச கோழி போட்டு சோறு பிரட்டிடுங்க " பசிக்கத் தொடங்கிய ஜீவிதன் உணவைக் கூறிவிட்டு குளிர்பாணத்தைப் பருகிணான்.
" இந்த தோச மாதிரிதான் வாழ்க. தோச நல்லா இருந்தா சட்னி நல்லா இருக்காது. சில நேரத்தில கடைக்காது. சட்னி சூப்பரா இருந்தா தோச நல்லா இருக்காது. ' adjust' பண்ணிதான் வாழனும். நீ எதுக்கும் ஆர்மி வேலைக்கு எழுதி போடு. நானும் படிக்கலாம்னு இருக்கேன். ' friends' ரொம்ப பேரு வேல செஞ்சுகிட்டே படிக்கிறானுங்க. என்னா, ரெண்டும் ஒத்து வரனும் " என தோசைத் தத்துவத்தை சட்னியுடன் விளக்கினான் ராஜ்.
சாப்பிட்டதும் பணம் கட்டிவிட்டு வீடு அடைந்தார்கள். தங்களின் வீடுகளும் அருகில் தான் உள்ளன. பள்ளி நண்பர்கள். காலத்தின் தேவை அவர்களைப் பிரிக்கப் போகின்றது. குளித்து விட்டு மெத்தையில். தன் வாழ்கை அந்த பேரங்காடியிலேதான் இருப்பது போல் தோன்றியது ஜீவிதனுக்கு. காலையில் இருந்து இரவு வரை. ஆண்களாக இருப்பதால், பலசரக்கு ஊர்தி கொண்டுவரும் பொருள்களை அடுக்கி முடிக்க உயிர் போகும். பண்டிகை காலம் என்றால் சொல்லவா வேண்டும்? இளம் வயதில் பணத்தின் தேவை அவ்வளவாக இருக்காது. காலம் கடக்க, அதன் பசி அடங்காது. நல்ல வேலை என்பதே அதிகமான சம்பளமும், குறைந்த வேலையும் தானே?
இருவரும் ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் வேலையை விட்டனர். ராஜ் முழு நேரமாகப் படிக்க தூரமாகச் சென்று விட்டான். அம்மாவின் அன்றாட அர்சனையால், தனது ' military' ஆசை போரில் தோல்வி கண்டது. தற்போது வேறு வேலைக்குப் போகலாம் என ஒவ்வொரு நாலும் கடந்தது.
கூரையில் எலிகளின் சண்டை அவப்போது நடக்கும். அதனை கொல்ல தனக்கு மனம் இல்லை. வாழப் போராடும் உயிர்கள் தானே என்று விட்டுவிடுவான்.
அம்மா மற்றும் தங்கையுடனும் ஒரே வீட்டில் இருப்பதால், தங்க இடமும் உணவுக்கும் சிக்கலில்லை. இருந்தாலும் இதர செலவிற்குக் கையிருப்பு பணம் கரைவதால் வேலை தேடல் அதிகம் தேவைப்பட்டது. ஆனால், நிலைக்காத இந்த வேலைகளில் தனக்கு சேர ஆர்வம் இருப்பதில்லை. அருகில் நண்பனும் இல்லாததால் எங்கும் அதிகம் செல்வதும் இல்லை.
ஒரு நாள்....
" ஜீவி... ஜீவி.. இந்த ரௌவுக்கைய தச்சிடேன். போய் கொடுத்துடுடா. சீக்கிரமா வேனுமா. வீட்டுக்கு பெய்ண்ட் அடிப்பார்ல ராஜன் 'uncle', அவர் வீடுதான் " என அம்மா அன்பாக ஆணையிட...
சரி கொஞ்சம் நடக்கலாம் என ராஜன் வீட்டை அடைந்தான் ஜீவிதன்.
" அக்கா...அக்கா " என அழைக்க ராஜன் தான் வந்தார்.
" என்னப்பா? ஓ.. ரவுக்கையா? அக்கா குளிக்குது " என தன்னிடம் துணியை வாங்கினார்.
ஆச்சரியமாக காவலாளி சீருடையில் இருந்தார்.
" பெய்ண்ட் அடிக்க போறது லே? " என ஜீவிதன் ராஜனிடம் வினவினான்.
" இருக்கும் தம்பி. காலையில பெய்ண்ட் அடிப்பேன். நைட் ல ' guard' வேல. ரெண்டையும் ஓட்டனும். அப்பதான் சமாளிக்க முடியும் " என்றார் ராஜன்.
" நீ இப்ப என்ன செய்ற?" என ராஜன் கேட்க
" வேல இல்ல ண... தேடிகிட்டு இருக்கேன்" ஜீவிதன் தயங்கி பதில் அளிக்க,
" பரவால, எங்கூட வா. பெய்ண்ட் வேல செய். எனக்கும் ஆள் தேவ படுது. எவனும் ரொம்ப நாள் நிக்க மாட்டுரானுங்க. அழுக்கான வேல. வெயில். பெய்ண்ட் நாத்தம். தூசி. இப்ப உள்ள பையனுங்களுக்கு 'straight' ஆ 'tie' கட்டிகிட்டு 'air-cond' வேலைக்குப் போகனும். அப்பரம் வேர்க்கலனு 'gym' கு போகனும்". சின்ன வயசுல வேர்க வேர்க உழைக்கனும் தம்பி. அப்பதான் உடம்பு நிக்கும். சரியா? நாளைக்கு 7 மணிக்கி வந்துடு" என ராஜன் வேலை மனுவை கொடுக்க...
" சரின. வந்துடிறன் " என ஜீவிதன் தலையாட்ட, வேகமாக நடந்து சென்றார் ராஜன்.
நல்ல அழுக்கான சட்டையை தேடி வைத்துக் கொண்டான். ராஜனிடம் கிடைத்த வேலையைப் பற்றி அம்மாவிடம் சொல்லிவிட்டு , நல்ல பெரிய புட்டியில் நீர் அடைத்துத் தருமபடி அம்மாவிடம் கூறி விட்டு மகிழ்ச்சியாகப் படுக்கச் சென்றான்.
விடிந்ததும் ராஜன் வீட்டை அடைந்தான். சிறிது நேரத்தில் ராஜனும் வந்து விட, இருவரும் அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று வேலையைத் தொடங்கினர். ராஜனிடம் நிறைய யுக்திகளைக் கற்று கொண்டான். சில காலம் சென்று சுயமாகவே ஒரு வீட்டை முழுவதும் சாயம் பூச பழகி விட்டான். தான் போடும் உடைகள், பூசும் வர்ணங்கள் பட்டு பல வர்ணங்களில் அங்கும் இங்குமாய் காட்சியளிக்க, புதிய இராணுவ உடைப்போல் காட்சியளித்தது.
சிலர், ஜீவிதனையும் தனியாக வீட்டிற்கு வர்ணம் பூச அழைக்கத் தொடங்கினர்.
தன் தூரிகையால் பலரின் கனவுகளை , வர்ணத்தால் நிஜமாக்கிக் கொண்டிருந்தான் ஜீவிதன்.