நல்லறங் கேட்டதனால் ஆய பயன் - அறநெறிச்சாரம் 11

நேரிசை வெண்பா

காட்சி யொழுக்கொடு ஞானந் தலைநின்று
மாட்சி மனைவாழ்தல் அன்றியும் - மீட்சியில்
வீட்டுலகம் எய்தல் எனவிரண்டே நல்லறங்
கேட்டதனால் ஆய பயன் 11

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

சிறந்த அறநூல்களை கேட்பதனால் உண்டாகும் பயன்களாவன அறிவு ஒழுக்கங்களோடு பெருமை பொருந்திய இல்லறத்தில் வாழ்தலும், அதுவேயன்றி ஞானத்தால் சிறந்து மீளுதலில்லாத வீடுபேற்றினையடைதலும் ஆகிய இரண்டே ஆகும்.

குறிப்பு:

மனை வாழ்க்கையும் வீடுபேறுமாகிய இரண்டுமே அறங்கேட்டதனாலாய பயனாம்.

மேற்கண்ட பத்துப்பாக்களும் இந்நூற்குப் பொதுவாகிய இன்றியமையா நான்கினையும் விளக்குகின்றமையாற் பாயிரமாயின.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Sep-21, 10:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே