கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத்தவர் – நல்வழி 29
நேரிசை வெண்பா
மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 29
- நல்வழி
பொருளுரை:
மரம் பழுத்திருந்தால் (இப் பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர் அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை;
கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல் போல ஒளிக்காமற் கொடுப்பாராயின் உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.
கருத்து:
கொடையாளர்க்கு எல்லாரும் தாமே உறவினராவார்.
விளக்கம்:
ஒரு மரம் பழுத்தால் அது பறவைகளையோ, மனிதர்களையோ கூவி அழைக்க வேண்டிய அவசியமில்லை,
அது போல் அமுதசுரபி போல் அடுத்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் கேட்டதை கொடுக்கும் வள்ளல்களுக்கு அனைவருமே உறவினர். (கொடுக்கும் வரை தான் உறவு)