அழகு

அழகு
பாவலர் கருமலைத்தமிழாழன்

சோலைக்குப் பூவழகு ; நீல வானை
சொக்கவைக்கும் நிலவழகு ; செம்மை பூசும்
காலைக்குக் கதிரழகு ; கிராமத் திற்குக்
கரும்பச்சை வயலழகு ; இல்லத் திற்கு
மாலையிட்ட நல்மனையாள் அழகு ; தூய்மை
மனங்கள்தாம் மாந்தர்க்கழகு ; ஓங்கு யர்ந்த
ஆலைகளே நாட்டழகு ; வளத்தைக் கூட்டும்
அருந்தொழில்கள் உழைப்பிற்கே அழகைச் சேர்க்கும் !

புல்லிற்குப் பனிமுத்தே அழகு ; தேனே
புறவழகுப் பூவிற்கு அழகு ; நிற்கும்
கல்மலையே பூமிக்கு அழகு ; அந்தக்
கல்மலைக்கு வெண்முகிலே அழகு ; பாட்டின்
பல்சுவைக்கோ உவமைகளே அழகு ; நேயம்
பதிந்தநெஞ்சே மாந்தர்க்கு அழகு ; நாட்டைப்
பல்வகையில் உயர்த்துகின்ற உழைப்பின் மூலம்
படைக்கின்ற தொழில்வளமே அழகாம் என்றும் !

மலையளவு பொன்னிருந்தும் உழைக்கா விட்டால்
மணலளவு பொன்கூடத் தங்கி டாது
அலையலையாய்த் தோல்விவந்து வீழ்த்தும் போதும்
அடுத்தடுத்து நாம்முயன்றால் தழுவும் வெற்றி
தலையான அறிவியலைப் பயன்ப டுத்தித்
தரமான தொழில்வளத்தைப் பெருக்கு விப்போம்
நிலையாக நாமுழைத்தால் தொழிலில் நாடும்
நிமிர்ந்துநிற்கும் ; அழகாகப் பொலியும் வாழ்வே !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (11-Oct-21, 12:58 pm)
பார்வை : 108

மேலே