இனிக்கும் கலாம்

இனிக்கும் கலாம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

புனிதம் புவிக்கு உன் பிறப்பில்
மனிதம் நடந்ததுன் வழித்தடத்தில்...
பணியில் சிறுமை பாராத
இனிமை என்றும் உன்சிரிப்பு..

செய்தித்தாளும் உன் கையில்
சிதறும் போது அழுதிருக்கும்
உன்னை செய்தி ஆக்கிய பின்
உன்னத நிலையை அடைந்திருக்கும்...

மண்ணைப் பார்த்தே வளம் தேடும்
மனிதர் கூட்டம் பலர் வாழ
விண்ணைத் பார்த்த உன் பார்வை
வியக்க வைத்தது அயல்நாட்டை...

கனவை நனவாய் உருவாக்க
நினைவை கன வென்று நீயுரைத்தாய்
உழைப்பில் என்றும் பணக்காரன்
பணப்பை அறியா தனக்காரன்...

ஏவுகணைகள் உன் கையால்
ஏவிக்கொண்டதில் பெருமை கொள்ளும்
கலாம் உந்தன் செயற்கைக்கோளால்
கலங்கி இருக்கும் எட்டுக் கோளும்...

ஆக்சிஜன் இன்றியும் எரிந்திருக்கும்
அக்கினிச் சிறகங்கு பறந்திருக்கும்
மாணவனாகவே வாழ்வதற்க்கென்று
மணமுடிக்காமல் வாழ்ந்திருக்கின்றாய்....

நூற்றுக்கணக்கில் விருதுகளோ
போற்றிக் கொண்டன உனையடைந்து
குடியரசுத்தலைவர் பதவி வந்து
முடிசூட்டிக் கொண்டது மனமுவந்து...

வல்லரசாக ஆக நீயும் தான்
வருடம் ஒன்றை நிர்ணயித்தாய்
எல்லை எதுவென்று உணராமல்
இன்னும் நாங்கள் நடக்கின்றோம்...

திறந்த மனதாய் நீயிருந்தாய்
பிறந்த பலனை அடந்துவிட்டாய்
இறந்த பின்பும் இனிப்புத் தர
உறங்கும் இடம்கூட பேக்கரும்பே....

க.செல்வராசு.
கபிலக்குறிச்சி.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

எழுதியவர் : க.செல்வராசு (16-Oct-21, 4:04 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : inikkum kalaam
பார்வை : 70

மேலே