புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - பழமொழி நானூறு 5

நேரிசை வெண்பா

புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர! பொதுமக்கட்(கு) ஆகாதே
பாம்பறியும் பாம்பின கால். 5

- பழமொழி நானூறு

பொருளுரை:

நன்மை மிகுந்த அழகிய நீர்வளம் நிரம்பிய ஊரனே! பாம்பினுடைய கால்களைத் தமக்கு இனமாகிய பாம்புகளே அறியுந் தன்மையுடையன. அதுபோல், அறிவிற் சிறந்தவர்களை அறிவினால் தெரிந்துகொள்ளும் திறம் அவர்கள் போன்ற அறிவிற் சிறந்தவர்களுக்கே விளங்கும்; கல்வியறிவு இல்லாதவர்களுக்கு விளங்காது.

கருத்து:

கற்றோர் பெருமையைக் கற்றோர் அறிவார்.

விளக்கம்:.பொது, சிறப்பின்மைக் கருத்தில் வந்தது.

'பாம்பின் கால்களைப் பாம்புகளே அறியும்.' இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Oct-21, 9:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 1034

மேலே