வேள்வாய் கவட்டை நெறி - பழமொழி நானூறு 6
நேரிசை வெண்பா
ஈனுலகத் தாயின் இசைபெறூஉம் அஃதிறந்
தேனுலகத் தாயின் இனிததூஉம் - தானொருவன்
நாள்வாயும் நல்லறஞ் செய்வாற் கிரண்டுலகும்
வேள்வாய் கவட்டை நெறி. 6
- பழமொழி நானூறு
பொருளுரை:
அறஞ் செய்கின்ற ஒருவன் இவ்வுலகில் வாழும் முறையினால், அதை ஆராய்வோமாயின் புகழினைப் பெறுவான். இவ்வுலகினின்றும் நீங்கி மறுமை யுலகத்திற்கு சென்றானானாலும் அவ்வுலகமும் இனிதாக ஆகும்.
ஆதலின், நாள்தோறும் நன்மையைப் பயக்கும் அறங்களைச் செய்கின்றவனுக்கு இம்மை, மறுமை எனப்படுகின்ற இரண்டுலகின் இன்பமும் கவட்டை நெறியில் அமைந்த கலியாண நிகழ்வுகளையும் சென்று மகிழ்வதற்கு ஒப்பாகும்.
கருத்து:
தொடர்ந்து அறம் செய்து வருவதால் இம்மை மறுமை இன்பங்களை அடைய முடியும் என்பதால், அறத்தினை நாள்தோறும் செய்க என்று அறிவுறுத்தப்படுகிறது.
விளக்கம்:
'இனிது அதுவும்' என்றது மறுமை இன்பத்தையும் அடைவான் என்பதைக் குறிக்கின்றது.
ஒரு காரியங் கருதி ஒருவன் ஓர் ஊருக்குச் செல்லுகின்றான். அவ்வூருக்கு இரண்டு வழிகள் உள்ளன. அவ்விரண்டு வழிகளிலும் அவன் செல்ல வேண்டிய திருமணங்கள் நடைபெறுகின்றன. அவன், ஒருவழியே சென்று ஒன்றினையும், திரும்பி வந்து மற்றொரு வழியே சென்று மற்றொன்றனையும் கண்டு இன்புறுகின்றான். அதுபோல, அறஞ் செய்வானும் இரண்டு இன்பங்களையும் அடைவான். இது 'இரண்டுலகும் வேள்வாய் கவட்டை நெறி' யெனப்பட்டது.
'வேள்வாய் கவட்டை நெறி' என்பது பழமொழி.