நதிக்கரை நினைவுகள்

இதயமெனும் நதிக்கரையில் நடக்கையில்
ஊற்றெடுத்தது ஊறிக்கிடந்த நினைவுகள் !
நெருங்கும் வயோதிகம் நெருடல் ஏற்பட்டது
சுருங்கும் ஆயுளும் சுற்றறிக்கை அனுப்பியது !

அரைக்கால்​ சட்டையுடன் அரட்டையடித்தது
​அறியாதவயதில் ஆலயத்தைச் சுற்றிவந்தது !
புரியாத நிலையில் வடமொழிபடம் பார்த்தது
​இந்தித் திணிப்பு எதிர்ப்பில் பங்கேற்றது ​!

அகவை பதின்மூன்றில் சிந்தனைகள் மாறியது
ஆழ்ந்து நோக்கும் பகுத்தறிவுடன் சிந்தித்தது
அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்தது
அடுத்தவர் நலன் அவசியமென நினைத்தது !

​நினைவில் வந்தது முதல்வகுப்பு ஆசிரியை ​
பாடமெடுத்த எனது ​கல்லூரி பேராசிரியரை !
இடையில் நிகழ்ந்த இயற்கை வினோதங்கள்
இளமைக் காலத்து பயமறியா செயல்களை !

முதல்வேலை முதல்நாள் படபடக்கச் சென்றது
​மாற்றிடம் விரும்பி வங்கியில் சேர்ந்தது !
​விருப்ப ஓய்வில் விருப்பமின்றி வெளிவந்தது
அடுத்த வேலையில் ஐந்தாண்டு இருந்தது !

பற்பல விழாக்களில் கலந்துக் கொண்டது
சோக நிகழ்வுகள் சோர்வடையச் செய்தது !
மாறிய சூழ்நிலை மாற்றத்தைக் கொடுத்தது
நலமில்லா உடலுடன் நாட்களை நகர்த்தியது !

​நினைவுகள் உணர்வில் கலந்த நிலையில்
கழியவுள்ளக் காலமும் கரைந்து போகுது ​!
அந்தநாள் ஞாபகங்கள் அடிக்கடி வருகிறது
உள்ளவரை உள்ளமும் நிச்சயம் மறவாது !

மாற்றங்கள் நிகழ்ந்தும் மாறாத மனநிலை
தோற்றம் மாறியும் தேயாத என்சிந்தனை !
ஏற்றங்கள் கண்டும் தெளிவடையா சமூகம்
வற்றாத வளமுடன் நற்றமிழாய் வாழ்கவே !


பழனி குமார்
21.10.2021

எழுதியவர் : பழனி குமார் (21-Oct-21, 7:00 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 302

மேலே