உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா – நாலடியார் 104

இன்னிசை வெண்பா

உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா
பெறற்பா லனையவும் அன்னவாம்; மாரி
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல் 104

- பழவினை, நாலடியார்

பொருளுரை:

உருத்து வருந் தீவினைகளை நீக்குதல் சான்றோர்க்கும் ஆகாது; அங்ஙனமே அடைந்தின்புறற்குரிய நன்மைகளும் அப்பெரியோர்களால் தடை செய்தற்குரியன அல்லவாம்;

மழை பெய்யாதொழியின் அதனைப் பெய்விப்பாருமில்லை; மிகப் பெய்யின் அதனைத் தணிப்பாருமில்லை.

கருத்து:

இருவினைகளும் பொருந்தியே தீருமாதலின், தீவினைகளை நீக்கி நல்வினைகளைச் செய்தல் இன்றியமையாததாகும்.

விளக்கம்:

உறுவர் - தக்கோர். தீவினைகளை ஒப்பவே தவறாது வந்து பொருந்துவவான என்றற்கு 'அனையவும்' எனப்பட்டது.

தருவாரும் தணிப்பாருமென்னும் உம்மைகள் ஒன்றையொன்று தழீஇ நின்றன.

ஆற்றலாகிய வினையின் விளைவு அமையினன்றி மாரி தருவாருமில்லை, தணிப்பாருமில்லை என்பது கருத்தாகக் கொள்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-21, 9:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே