வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவண தெய்த இருதலையும் எய்தும் – நாலடியார் 114
இன்னிசை வெண்பா
வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவண தெய்த இருதலையும் எய்தும்
நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்
தடுவது போலுந் துயர். 114
- மெய்ம்மை, நாலடியார்
பொருளுரை:
குற்றமில்லாத உலகத்தில் இன்றியமையாதனவாய்ப் பொருந்திய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று உறுதிப் பொருள்களுள் நடுவில் நின்றதான ‘பொருள்' என்பதை ஒருவன் அடைய அது காரணமாக அதன் இருபக்கத்தனவான ‘அறம்' ‘இன்பம்' என்னும் இரண்டையும் அவன் அடைவான், அவ்வாறு நடுவில் நின்றதான செல்வப்பொருளை அடையாதவன் கொல்லன் உலையில் இட்டு இரும்பைக் காய்ச்சுவது போலும் வறுமைத் துன்பத்தை அடைந்து நைவன்.
கருத்து:
தக்கோர்க்குப் பொருள் ஏனையெல்லா அறங்களையும் நல்கும்.
விளக்கம்:
அறமுதலா உறுதிப் பொருள்களை நாடும் நல்லோரை நினைந்து ‘வடுவிலாவையம்' எனப்பட்டது.
மூன்றறங்கள் கூறினார், இவற்றின் விடுதலை வீடாகலின் மன்னியவென்னும் நிலைபேற்று மொழியாற் கூறியது;
இவற்றின் பேறு பல பிறவிகளிலுந் தொடர்தலின் என்க. ஒன்றன் படர்க்கையாதலின்1 எய்தும் என்னுஞ் செய்யுமென் முற்று வந்தது.