முனியாதார் முன்னிய செய்யுந் திரு – நான்மணிக்கடிகை 39

இன்னிசை வெண்பா

கண்டதே செய்பவாங் கம்மியர்; உண்டெனக்
கேட்டதே செய்ப புலனாள்வார்; – வேட்ட
இனியவே செய்ப அமைந்தார் – முனியாதார்
முன்னிய செய்யுந் திரு. 39

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

கம்மாளர் தாங்கண்ட பொருள் போன்றவற்றையே செய்வர்;

அறிவை ஆளும் பேரறிஞர் பயனுண்டு எனக் கேள்வியால் தெளிந்தவற்றையே செய்வர்;

நல்லியல்புகளமைந்த சான்றோர் பிறர் விரும்பிய இனிமையாயின வற்றையே செய்வர்;

திருமகள் யாரையுஞ் சினவாத பெரியோர்கள் எண்ணியவற்றையே முடித்து வைக்கும்.

விளக்கவுரை:

ஆம்: ஆசை, கம்மியர் - தொழில் செய்வோர், அவர் கன்னார், கொல்லர், சிற்பர், தச்சர், தட்டார் எனப் பலவகைப்படுவர். புலன் - அறிவு. ‘முன்னிய வென்' பதற்குத் தேற்றேகாரங் கூட்டிப் பொருளுரைத்துக் கொள்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-21, 10:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே