வெள்ளை என்பது இருட்டே நூல் ஆசிரியர் எம்பி கனிவேல் நூல் அணிந்துரை கவிஞர் இரா இரவி
வெள்ளை என்பது இருட்டே!
நூல் ஆசிரியர் : எம்.பி. கனிவேல் !
நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி!
நூல் ஆசிரியர் கவிஞர் எம்.பி. கனிவேல் ஓர் உழவர். உழவுத்தொழில் புரியும் படைப்பாளி. முதல் படைப்பு இது. நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. சிந்திக்க வைத்தது. புதுக்கவிதைகள் கொஞ்சம், ஹைக்கூ கவிதைகள் நிறைய உள்ளன. உரத்த சிந்தனையின் வெளிப்பாடாக படைப்புகள் உள்ளன. பதச்சோறாக சில படைப்புகள்.
இரவுகள்
ஒவ்வொருவராலும் வெவ்வெறு
விதமாய் உணரப்படுகிறது இரவு
இரவின் இருள் சூரியனால் விலகுகிறது
சமூகத்தின் இருள் எதனால் விலகும் ?
இரவு பற்றி பல்வேறு விதமாக சிந்தித்து நீண்ட கவிதை எழுதி உள்ளார். கடைசி இரண்டு வரிகள் முத்தாய்ப்பு.
மண்ணெல்லாம் விசம்
வலியால் நெளிகிறது
மண்புழு!
மண் எல்லாம் நஞ்சாகி விட்டது என்று வேதனையோடு உணர்த்தி உள்ளார். நூல் ஆசிரியர் உழவர் என்பதால் உணர்ந்து எழுதிய ஹைக்கூ நன்று. பூச்சி மருந்து தெளித்து தெளித்து மண் எல்லாம் நஞ்சாகி விட்டது என்பது உண்மையே. இயற்கை உழவு தான் மண்ணிற்கும் மனிதர்களுக்கும் நன்றி.
புரியாத மொழி
வாசிக்கப்படாத கவிதை
மழலை கிறுக்கல்!
வாடகை வீட்டில் மிக கவனமாக இருக்க வேண்டும். சுவற்றில் கிறுக்கல் கூடாது என்று குழந்தைகளை மிரட்டி வைத்து இருப்போம். சொந்த வீட்டிலும் அனுமதிப்பதில்லை. அவர்களின் கிறுக்கல்களை ரசனையோடு ரசித்தால் நவீன ஓவியமாகவே இருக்கும்.
கவலையற்ற அரசியல்வாதிகளின்
தூண்டில் புழுக்கள்
இலவசங்கள்!
வாக்களிக்க பணம் வழங்கும் அவலம் தமிழகத்தில் அரங்கேறி அவமானமாகி வருகின்றது. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்று மார் தட்டினோம். இன்று வாக்களிக்க பணம் வழங்கும் அவலத்தால் தமிழகத்திற்கு தலைகுனிவு.
திரைகடலோடி
சிறைப்படலானான்
தமிழக மீனவன்!
‘திரைகடலோடி திரவியம் தேடி’ என்று பொன்மொழி உண்டு. ஆனால் தமிழக மீனவர்கள் கடலில் பயணித்தால் கடலில் ஏதடா எல்லை, வீசும் காற்றால் கடந்துவிட்டால் சிறைப்பிடிக்கும் கொடுமைக்கு முடிவுகட்ட முடியவில்லை. சுண்டைக்காய் நாடு இலங்கை தமிழக மீனவர்களைக் கொடுமைப்படுத்தி வருகிறான்.
முல்லைத் தீவோ
கச்சத் தீவோ
கொல்லப்படுவது தமிழனே!
இலங்கை இராணுவம் இதயமின்றி தமிழர்களைத் தாக்குவது, வலையை அறுப்பது, படகுகளைப் பறிப்பது, சேதப்-படுத்துவது அடாவடித்தனம் செய்வதை தடுக்க, கண்டிக்க நாதி இல்லை என்பதே உண்மை.
சனியினிடமிருந்து தப்பித்தார்
அரசியல்வாதிகளிடம் மாட்டிக் கொண்டார்
பிள்ளையார்!
பிள்ளையார் சதுர்த்தி காலங்களில் பிள்ளையார் சிலைகளை வைத்து மதமோதல்களை உருவாக்கி வரும் மத அரசியல்வாதிகளை எள்ளல் சுவையுடன் கண்டித்தது சிறப்பு.
ஒற்றுமை வலிமையானது
உணர்த்தியது
காதலியின் பின்னல் சடை!
‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’. ஒற்றுமையே சிறப்பு என்பதை காதலியின் சடையை உவமையாக்கி உணர்த்திய ஹைக்கூ நன்று.
மகன் காக்கைகளுக்கு வைத்தான்
பிண்டச் சோறு
பட்டினியால் செத்தார் அப்பா!
இருக்கும்போது பெற்றோர்களை கவனிக்காமல் விட்டுவிட்டு, இறந்தபின்னர் பளிங்கு கல்லறை கட்டுவது, சுவரொட்டி அடிப்பது, திதி கொடுப்பது என்று அமர்க்களம் செய்திடும் போலி மனிதர்கள் மலிந்துவிட்ட காலமிது. அவர்களது தலையில் கொட்டு வைக்கும்வண்ணம் வடித்த ஹைக்கூ நன்று.
ஏட்டுச் சுரைக்காய்
நாட்டிற்கு உதவாது
அரசியல்வாதிகளின் அறிக்கை!
அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை பறைசாற்றிட அறிக்கைகள் விடுவதோடு சரி. ஒரு பயனும் விளைவதில்லை என்ற நாட்டுநடப்பை உணர்த்திய ஹைக்கூ நன்று.
பிட்டுக்கு சுமந்த மண்
துட்டுக்கு சுமக்கப்படுகிறது
நூறு நாள் வேலையில்!
கிராமத்து ஏழைகளின் வறுமை போக்க, பசி போக்க வாழ்வாதாரமாக விளங்குவது நூறு நாள் வேலை. இந்த வேலைகளின் மூலம் கிராமத்தின் தரம் உயர்வதும் உண்மை. ஆனால் அதற்கும் ஒன்றிய அரசு நிதியை வழங்காமல் இத்திட்டத்தை நீர்த்துப்போக வழிவகை செய்து வருகின்றனர்.
பெற்ற சுதந்திரத்தை
பேணி காக்கவில்லை யெனினும்
போணி ஆக்காமல் இருங்கள்!
பொதுத்துறைகளை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து வருகின்றனர். விமான நிலையம் தனியாருக்கு விற்பனை. தொடரியிலும் தனியாருக்கு அனுமதி. நாட்டையே விலைபேசி விற்று விடுவார்களோ? என அஞ்ச வேண்டி உள்ளது. பேணி, போணி என சொல் விளையாட்டில் நாட்டு நடப்பை உணர்த்தியது சிறப்பு.
தீக்கதிர், வண்ணக்கதிர், பயணம், நம் உரத்த சிந்தனை, ஏழைதாசன், புதிய ஆசிரியன், வைகறை உள்ளிட்ட பல்வேறு சிற்றிதழ்களில் நூலாசிரியரின் படைப்புகளைப் படித்து இருக்கிறேன். மொத்தமாக நூலாக கண்டதில் மகிழ்ச்சி. பாராட்டுகள், தொடர்ந்து எழுதுங்கள்