சுண்டலோ சுண்டல்
சுண்டல் என்றாலே நவராத்திரி நினைவு பலருக்கும் வரும். நவராத்திரியும் சுண்டலும் நகமும் சதையும் போல பிரிக்க முடியாதவை.
நவராத்திரியின்போது நாளுக்கு ஒரு பிரசாதம் செய்ய வேண்டும். அதில் முக்கிய இடம் வகிப்பது சுண்டல். கொத்துக் கடலை சுண்டல், வெள்ளை கொண்டக்கடலை சுண்டல், கறுப்பு கொண்டைக்கடலை சுண்டல், பாசிப்பருப்பு சுண்டல், பயத்தம்பருப்பு சுண்டல், கொள்ளு சுண்டல், காராமணி சுண்டல், பச்சை வேர்க் கடலை சுண்டல், மக்காச்சோள சுண்டல், மசாலா சோயா பீன்ஸ் சுண்டல், பட்டாணி சுண்டல், முளை கட்டிய வெந்தய சுண்டல், ராஜ்மா சுண்டல், மாங்கா தேங்கா பட்டாணி சுண்டல், நவதானிய சுண்டல்,கோதுமை சுண்டல், பயறு சுண்டல், பட்டர் பீன்ஸ் சுண்டல், மொச்சை சுண்டல் இப்படி 30 வகை சுண்டல்கள் இருப்பதாகக் கேள்வி. இது தவிர ஸ்வீட் சுண்டல் வகைகளும் உண்டு,
நவராத்திரி முக்கியமாக பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை என்பதால் . தினமும் வீட்டுப்பெண்கள் மற்ற வீட்டுப் பெண்களை தங்கள் வீட்டு நவராத்திரிக்கு அழைப்பார்கள். பெண்களும் அழைப்பை ஏற்று அழைத்தவர்களை கௌரவப்படுத்துவார்கள், ஒவ்வொருவரும் வெவ்வேறு நாட்களில் கூப்பிடுவார்கள், ஆகையால் நம் வீட்டுப்பெண்கள அவர்கள் போக வேண்டிய வீடுகளுக்கு ஏற்ப, ஒரு சாயந்திரத்தில் மூன்று அல்லது நான்கு வீடுகளோ அதற்கு மேம்பட்ட வீடுகளுக்கோ போய் சுண்டல் பிரசாதம் வாங்கி வருவது வழக்கம். அப்போது வெரைடி, வெரைடியாக் சுண்டல் கிடைக்கும். அவர்கள் அத்தனையையும் சாப்பிட முடியாதாகையால் அவர்கள் சாப்பிட்டது போக மீதி சுண்டல்களை வீட்டிற்குக் கொண்டு வருவார்கள். வீட்டில் பெண்களும், குழந்தைகளும், மற்ற வீடுகளுக்கு செல்வதால், ஆண்கள் ஆபீசிலிருந்து வந்து வீட்டைக் காவல் காக்க வேண்டி இருக்கும், அப்படி இரண்டு மணி நேரம் தனியாக விடப்பட்ட ஆண்களுக்கு பெண்கள் கொண்டு வரும் பலதரப்பட்ட சுண்டல்களும் ஒரு பெரிய வரப்பிரசாதம். அதை ஒரு கை பார்க்கும் ஆண்கள் மறுநாள் அஜீரணம் போன்ற சுண்டல் சம்பந்தப்பட்ட சில அசௌகரியங்களை சந்திக்க நேரும். ஆனா. வெரைடி இருக்கிறது என்பதற்காக, காஞ்ச மாடு கம்புலே புகுந்த மாதிரி இல்லாம, கணக்காய் சாப்பிடுபவர்களுக்கு இந்த ஒன்பது நாட்களும் கொண்டாட்டம்தான். சில சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலே ஒரே வகையான சுண்டல் இருப்பதும் உண்டு. அப்போது ஒரு குறிப்பிட்ட சுண்டல் அளவுக்கு அதிகமாகவே சேரும். அதை அளவோடு நிறுத்திக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்தான்.
சுண்டல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், அதை அளவோடு. தின்றால், உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.
அதைப பற்றி விவரமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே அடைப் புக்குறிக்குள் கொடுத்து இருப்பவைகளை படிக்கவும். இன்றேல் அதை விட்டு விட்டு அடைப்புக் குறி. A-B க்கு அப்பால் சென்று படிக்கவும். ரொம்ப நீளமா………க எழிதிவிட்டேன் என்று சொல்ல வேண்டாம்.
************************
A மகாத்மியம்
சுண்டலில் ப்ரௌன், வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன. அதில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவது ப்ரௌன் நிற சுண்டல் தான். இந்த சுண்டலில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. பழுப்பு நிற சுண்டலில் கொழுப்பு குறைவு மற்றும் நார்ச்சத்துக்கள் , வைட்டமின்கள் , சுண்டல்னிமச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. வேகவைக்க பட்ட சுண்டலுடன் தண்ணீர் குடிப்பதன மூலம் பசி கட்டுக்குள் வரும்.நோய் எதிர்ப்பு சக்தி சுண்டலில் அதிகபடியான அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது.
சுருக்கமாக கூறவேண்டும் எனில் பழுப்பு நிற சுண்டல் நமது உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக திகழ்கிறது.
இதில் சியானிடின், பைடோநியூட்ரியன்ட் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், ஆந்தோசயனின் மற்றும் டெலிபிண்டின் போன்ற பல சத்துக்கள் நிறைந்து உள்ளது.
பழுப்பு நிற சுண்டல் இரத்த நாளங்களை பாதுகாப்பதுடன் இரத்தத்தில் உள்ள விஷத்தன்மையினை அதிகரிக்காமல் பாதுகாக்கின்றது.
இதன் மூரமாக இதயத்தின் ஆரோக்கியம் உறுதிசெய்யபடுகிறது.பழுப்பு நிற சுண்டலில் மெக்னீசியம் கணிசமான அளவிலும் மற்றும் போலேட் உள்ளது.
போலேட் ஹோமோசைஸ்டீன் அளவினை குறைக்கிறது, இதன் மூலம் தமனிகளின் வீக்கம், பக்கவாதம்,மாரடைப்பு ஆகியவற்றினால் ஏற்படுகின்ற தமனிகளின் சுருக்கதினை குறைக்கின்றது.
கொழுப்பை குறைக்க உதவுகிறது சுண்டல். இதில் உள்ள கரையக்கூடிய பைபர் நமது உடலில் உள்ள பித்த அமிலங்களின் அளவினை குறைத்து அவை உடலால் உறிஞ்சப்படுவதினை தடுக்கின்றது, இதன் மூலமாக உடலில் உள்ள கொழுப்பின் அளவானது கட்டுப்படுத்தப்படுகிறது.
தினசரி 3/4 கப் சுண்டல் சாப்பிடு வருவதன் மூலமாக உடலில் உள்ள மொத்த கொழுப்புகளின் கிளிசரைடுகளை குறைக்கின்றது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை பழுப்பு நிற சுண்டல் குறைக்கிறது.
சுண்டலில் உள்ள கரையக்கூடிய பைபர் இரத்தம் சர்க்கரை உறிஞ்சுவதினையும் மற்றும் வெளியிடுவதினையும் கட்டுப்படுத்துகின்றது.
அதுமட்டுல்லாமல் குறைவான க்ளெசெமிக் அளவினை கொண்ட சுண்டல் நமது உடலில் மெதுவாக செரிமானம் அடையும் ஆகவே பசியின்மையினை கட்டுப்படுத்தும்.
இது சர்க்கரையின் அளவினை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். தினசரி 1/2 கப் சுண்டல் என தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் ஒரே வாரத்தில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு இயல்பு நிலைக்கு வரும்.
முடி வளர்ச்சிக்கு பழுப்பு நிற சுண்டலில் வைட்டமின் பி6 மற்றும் ஜிங்க் சத்துக்கள் உள்ளன.
இரண்டு சத்துக்களும் முடியின் ஆரோக்கியத்தினை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றது.
பழுப்பு நிற சுண்டல் உங்கள் முடியின் வலிமையை அதிகரித்து முடி நீளமாக வளர உதவுகின்றது.
முடியின் நிறத்தினை பாதுகாக்கிறது. பழுப்பு நிற சுண்டலில் உள்ள புரோட்டின் மற்றும் மக்னீசியம் முடியின் நிறத்தை பாதுகாக்கிறது அதாவது முடியின் நிறம் கபழுப்பு நிறமாக மாறாமல் தடுக்கின்றது.)
*************************B
இப்பொழுது அனேகமாக அனைவருக்கும் போன் வசதி வந்து விட்டதால் சுண்டலுக்கான டயம்டேபிளையும், ஒவ்வொருவர் விசிட் செய்வதற்கான நாட்களையும், நேரத்தையும் முன்னமேயே பேசித்தீர்த்துக்கொள்வார்கள். இதனால், பல குழப்பங்களையும் ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம்.
நவராத்திரிக்கு வருபவர்களை பாடச்சொல்லி கேட்டுக்கொள்வார்கள். இது பலகுழந்தைகளுடைய பாடும் திறமையையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்தவும், குழந்தைகளின் கூச்சத்தைப் போக்கவும் பயன்படுகிறது.
நவராத்திரி கொலு பொம்மைகள் பெரும்பாலும் நம் புராண இதிஹாஸங்களையே சார்ந்து இருப்பதால் குழந்தைகளுக்கு நம் பண்பாடு கலாசாரம் இவற்றைப்பற்றித் தெரிந்து கொள்ள உதவுகின்றன. இன்றைய இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் அப்பீல் ஆகும்படியான சில மாடர்ன் ஐடங்களும், சில தலைவர்களின் பொம்மைகளும், சீசனுக்கு ஏற்ற சில பொம்மைகளும்( உதரணம்- அத்தி வரதர் பொம்மைகள்) கிடைக்கும்.அதே சமயத்தில் எத்தனை விதவிதமான சுண்டல்கள் இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. தவிர பொம்மை செய்யும் கலைக்கு இது பெரும் ஆதரவு அளித்து பல ஏழை கலைஞர்களுக்கு வாழ்வளிக்கிறது.
அமெரிக்காவிலும் நம் இந்தியர்கள், குறிப்பாக தமிழ், கேரள, கர்நாடக, ஆந்திர மக்கள் இதை நம் ஊரில் கொண்டாடுவது போலவே கொண்டாடுகிறார்கள். ஆனால் ஒரு வித்தியாசம். அமெரிக்காவில் வீட்டு ஆண்களும் கொலுவுக்கு அழைக்கப்பட்டு வெறும் சுண்டலோடு இல்லாமல், சில வகை கலவை சாதங்களையும், சிப்ஸ் போன்றவையையும், ஸ்வீட், பாயசம் இவற்றுடனும் சேர்த்து ஒரு டின்னராகவே கொடுத்து விடுகின்றனர்.
அந்த நாட்களில் எங்கள் ஊரில் எங்கள் வீட்டில் இருந்த பெரிய சைஸில் ராமர், சீதா, லட்சுமணசமேத அனுமானுடன் கூடிய முத்து மற்றும் விலை உயர்ந்த பவழம் போன்ற கற்கள் பதித்த ஒரு தஞ்சாவூர் சித்திரம் இருந்தது. ஆண்டுக்கு ஒரு முறை ஶ்ரீராம நவமி அன்று அதற்கு விசேஷ பூஜைகள் செய்து அதற்கு எங்கள் உறவினர்கள், மற்றும்குடும்ப நண்பர்கள் சுமார் நூறு பேரை அழைத்து பூஜை முடிந்த உடன் ஒவ்வொருவருக்கும் கொத்துக்கடலை சுண்டல் பிரசாதத்துடன், நீர்மோர், பானகம் கொடுத்து, ஆளுக்கு ஒரு தென்னம் விசிறியை கொடுப்பதை அந்த ஊரில் எங்கள் பெற்றோர்கள் இருந்த வரை செய்து கொண்டு இருந்தார்கள்.சில வீடுகளில் நடக்கும் பஜனைகள் முடிந்த உடன் சுண்டல் கொடுப்பார்கள். ஆனால் நவராத்திரி அப்போது கிடைப்பது போல் வெரைடிகள் எல்லாம் அப்போது கிடைக்காது.
நவராத்திரி தவிர பல கோயில்களில் சில பூஜைகள் முடிந்த பிறகும், சில பஜனைகளுக்குப் பிறகும், சில காலட்சேபங்களுக்குப்பிறகும் சுண்டல் பிரச்சாதமாக கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது, சிலர் தங்கள் வேண்டுதலுக்குப் பிறகு சுண்டலை பிரசாதமாக கோயிலுக்கு வந்து இருக்கும் அனைவருக்குமே வினியோகிப்பர். எவ்வளவுதான் இருந்தாலும் நவராத்திரியும், சுண்டலும் போல் அவை ஆகாது.
நவராத்திரியின் போது, மயிலை கபாலீசுவரர் கோயிலில் அமர்க்களமான கொலு வைக்கப்பட்டு விமரிசையாக கொண்டாடப்படும். அங்கே அந்த ஒன்பது இரவும் பல பிரபலங்களும் தங்கள் பாட்டுக்கச்சேரியை நிகழ்த்துவார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு சுண்டல் தரமாட்டார்கள்.
மயிலை வடக்கு மாடவீதியே கோலாகலமாக இருக்கும் அந்த வீதியின் இருபுறமும் பெரும்பாலான பகுதிகளில் பொம்மைக் கடைகள் இருக்கும். அவர்கள் அதை கலை நயத்துடன் வியாபாரத்துக்காக அடுக்கி வைத்திருக்கும் அழகே அழகு. அதனால் அந்த தெருவே நவராத்திரி கொலுவைக் கொண்டாடுவது போல் காணப்படும்.இதை நான் சென்னையில் இருந்தபோதும், இருக்கும்போதும் ஒரு தடவை கூட தவறவிட்டதே இல்லை. இந்த ஆண்டு அக்காட்சிகளை காண இயலாமல் போய்விட்டது. ஒரு வேளை மாஸ்க் அணிந்த பொம்மைகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்து இருக்குமோ?
ஆனால் கோவிலை சுற்றியுள்ள கையேந்தி பவன்களில் சுண்டல் மாத்திரம் இன்றி பஜ்ஜி, போண்டோ போன்ற இதர வகை ஸ்நாக்ஸுக்கும் கொண்டாட்டம்தான்.
சென்னையில் எனக்குத் தெரிந்த நாட்களில் இருந்து பீச்சில் தேங்காய், மாங்காய் பட்டாணி விற்பது என்பது சென்னைக்கும், அதன பீச்சுக்கும் ஒரு பெருமை சேர்க்கும் விஷயமாக ஆகிவிட்டது. நவராத்திரி சுண்டலைக் காட்டிலும் இந்த பீச் சுண்டல் வருடம் பூராவும் மாலை நேரங்களில் பீச்சில் கிடைப்பதால் இது பீச்சின் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறது. நான் முதல் முதலாக சென்னையின் ஸ்தல புராணத்தைக்கேட்டு. இந்த சுண்டலின் மகிமையால் ஈர்க்கப்பட்டு சென்னையை காதலிக்க ஆரம்பித்தேன். அது இன்று வரையில் தொடருகிறது. பீச்சில் இந்த சுண்டல் சாப்பிடாதவர்கள் சென்னையை முழுவதாக பார்த்ததாகவே கொள்ள முடியாது என்ற அளவிற்கு இந்த சுண்டல் கோயில் பிரசாத, மற்றும் நவராத்திரி சுண்டலையும் பின்னுக்குத்தள்ளும் அளவிற்கு பிரபலம் அடைந்து இருக்கிறது.
.
சுண்ட வைப்பதால் சுண்டல் என்ற பெயர் வந்ததாகத்தெரிகிறது. ஆனால் இதன் தோற்றம் கிமு 8500-7500 என்று தெரிகிறது. இது மத்தியதரைக்கடல் நாடுகளிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் பல உருவ மாற்றங்கள் பெற்றதாக தெரிகிறது. சுண்டலின் திவ்ய சரித்திரம் நம் தலையையே கிறு கிறுக்க வைப்பதால் அதற்குள் புகுந்து நாம் அவஸ்தைப்படாமல், அதை சாப்பிடும் இன்பத்தை மாத்திரம் பெறுவோம். இந்தியாவிலும் அந்த சமயத்தில் சுண்டல் வகைகள் குடியேறி இருக்கலாம் என்று தெரிகிறது. நமக்கு ராமாயணத்திலோ, மகாபாரதத்திலோ இதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. ஆங்கிலத்திலும் இதற்கான சரியான வார்த்தை இல்லை. இல்லாததனால் சுண்டல் என்ற வார்த்தை பிழைத்தது.
சுண்டல் என்று பெயர் வரக்காரணம் வேறு ஏதாவது உண்டா, சுண்டலுக்கும் கிண்டலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா, சுண்டலுக்கும் சுரண்டலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்பன போன்ற மேதாவித்தனமான கேள்விகளுக்கு எந்த சுண்டல் ஸ்பெஷலிஸ்டுக்கும் பதில் தெரியவில்லை. தெரியவில்லை என்பதனால் சுண்டல் சாப்பிடுவதை நிறுத்தப் போகிறோமா என்ன? பிறகு என்ன? விட்டுத்தள்ளுங்கள்.
சுண்டல் என்பது பெரிய ஓட்டல் களில் கிடைப்பது இல்லை. சிறிய ஓட்டல்களிலும், நடைபாதை கடைகளிலும், கையேந்தி பவன்களில் மட்டும் தான் கிடைக்கிறது் . ஆனால் இவ்வளவு வெரைடியாக சுண்டல்கள் கிடைப்பது இல்லை. ஏதோ சென்னா சுண்டலோ, அல்லது, பாசிப்பருப்பு சுண்டலோதான் கிடைக்கும். மற்ற வகை சுண்டல்கள் பெரும்பாலும் கிடைக்காது. கொள்ளிடம் என்ற சிறிய ஸ்டேஷனில் (கடலூர், தஞ்சாவூர் லயனில் உள்ள ஒருவர் விற்கும் சுண்டல் அந்த காலத்தில்,அதாவது 60 ஆண்டுகளுக்குமுன் ) மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த ஸ்டேஷனுக்கு முதல் ஸ்டேஷனிலேயே பலரும் அந்த சுண்டலை வாங்க அதற்கான சில்லரையை தயாராக வைத்துக் கொள்வார்கள். ஸ்டேஷன் வந்ததும் அவரவர்கள் போட்டி போட்டிக் கொண்டு சுண்டலை வாங்குவார்கள். வாங்கியவர்களுக்கு ஆண்டவனுக்கு நேர்த்திக் கடன் செய்து கொண்ட திருப்தி. இதைப்போல் வேறு எந்த ஸ்டேஷன்லேயாவது சுண்டல் கிடைக்கிறதா என்பது தெரியவில்லை.
சுண்டலின் மகாத்மியம் சொல்லி மாளாது. சுண்டலுக்காக ஏங்குபவர்கள் பலர் இருக்க, மேலும் சுண்டல்களையும், அவற்றின் வகைகளையும், சுவை, மற்றும் குண நலன்கள் பற்றியும்எ ழுதி உங்களை ஏங்க வைத்து உங்கள் ஆசையை சுண்ட வைக்காமல் இ்த்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.