ஓராயிரம் உதடுகள் வேண்டும்
ஒளியின் தாளத்தில்
ஒடுங்கிப் போன ஓசை
பதுங்கு பூனையாய்
மெள்ள அடிவைத்து
இறங்குகிறது
இரவுக் கிணற்றில்
அங்கே நட்சத்திரங்களோடு
பேதங்காட்டி
இருட்டின் ராசலீலையில்
நிலவின்சேர்க்கை
சலனமற்ற நீரில் சருகுகள்
எறிந்து சிரிப்பூட்டும்
கிணற்றடி வேம்பு
அடர்ந்த கிளைகளினூடோடி
இலைகளைப் புணர்ந்து
அறையின் ஜன்னலோரம்
கிசுகிசுக்கிறது
துண்டாடப்பட்ட
ஒளியும் ஒலியும்
உடைகளை கலைந்து
உயிரையும் கலைத்து
விளையாடும் குறிகளின்
வெறிபாய்ச்சல்
வெந்து தணிந்த காட்டில்
பெருங்கூச்சலாய்
சுவர்க்கோழிகளின்
க்ர்ர் க்ர்ர் சப்தம்
செந்நீர்த் துளிர்க்கும்
உதடுகளில்
பற்களின் தடங்களை
ஒதுக்கி
ஒளிந்து கொள்ளவும்
கவ்வி சுவைத்திடவும்
வேண்டும்...
அவனுக்கும் அவளுக்கும்
ஓராயிரம் உதடுகள்!
- மதிஒளி சரவணன்