உளவரையால் செய்வதற்கே ஆகுந் திரு – அறநெறிச்சாரம் 29

நேரிசை வெண்பா

திரையவித்து நீராட லாகா உரைப்பார்
உரையவித் தொன்றுஞ்சொல் இல்லை - அரைசராய்ச்
செய்தும் அறமெனினும் ஆகா துளவரையால்
செய்வதற்கே ஆகுந் திரு 29

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

அலைகளை ஒழித்துப் பின் கடல் நீராடுதல் எவர்க்கும் ஆகாது என்று உரைப்பவர் உரையை விட்டால் வேறு மெய்ம்மை பொருந்தும் சொல் இல்லை;

ஆதலின், ஒருவர் அரசராய்ப் பெருஞ் செல்வம் பெற்றபின் அறத்தினைச் செய்வேமெனக் கருதின் அக்காலத்துச் செல்வம் அவருக்கு அறஞ்செய்ய உதவுவதில்லை;

பெற்ற அளவினுக்கேற்ப அவ்வப்போது அறஞ்செய்யப் புகுகின்றவனுக்கே அறஞ்செய்வதற்குத் துணையாக நிற்கும் அவனது செல்வம்.

குறிப்பு:

“அலையொழிந்து கடலாடலாகாது” என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Nov-21, 11:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே