24 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 24
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

ஒரு பொருள் நம்மிடம் இருக்கிறது. அதாவது பணம், நிலம், வீடு, பொன்பொருள் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவர் தன்னோட அலுவலக நண்பர் வீட்டில் விலை உயர்ந்த தொலைக்காட்சிப்பெட்டியைப் பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதன் மீது ஒரு ஆசை அவரை அறியாமல் வந்து விடுகிறது. அதேமாதிரி தொலைக்காட்சிப்பெட்டி தன்னோட வீட்டில் இருந்தால் எப்போதும் தானும் தன்னோட குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்று தனக்குள் தேவையற்ற கற்பனையை வளர்த்துக் கொள்கிறார். அதனால் அவரை அறியாமல் அந்த ஆசையானது அவருடைய மனதில் நன்கு பதிந்து விடுகிறது. அவர் தொலைக்காட்சிப்பெட்டி தன் வீட்டில் இருந்தால் தனக்கு இன்பமாக மகிழ்ச்சியாக இருக்கும் என மனதில் மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டே இருக்கிறார். அவ்வாறு எண்ணும்போது அந்தப் பொருளினால் வரக்கூடிய இன்பம் மகிழ்ச்சி போன்றவை ஆசை பேராசையாக உருவாகி, அவர் மனதில் நன்கு பதிந்தும் விடுகிறது.

மனிதர்கள் நிலம் சொத்து வீடு வாகனம் போன்றவற்றினால் வரக்கூடிய மகிழ்ச்சி இன்பம் உலகில் நிரந்தரம் என்று தவறாக மனதில் எண்ணி விடுகிறான். அதனால் அவன் அத்தகைய பொருட்கள் தனக்கு கிடைத்து விட்டால் அப்பொருள் தன்னை விட்டு அகலாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் மனதில் எண்ணி விடுகிறான். மேலும் அத்தகைய பொன்பொருட்கள் குறைந்து விடாமல் இருக்க வேண்டும் என்று மனதில் எண்ணி அதனை பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறான். அதனால் அவன் மன அமைதியைக்கூட இழந்து விடுகிறான்.

நாளடைவில் பொன்பொருள் மற்றும் சொத்துக்கள் மீது அவனுக்கு அளவுகடந்த பேராசை ஏற்பட்டு விடுகிறது. ஆன்மீக வழியில் சென்று மனிதன் சிந்திக்கும்போது நிலம் சொத்து வீடு வாகனம் போன்றவற்றினால் வரக்கூடிய மகிழ்ச்சி இன்பம் உலகில் நிரந்தரம் இல்லை என்று உணர்ந்து கொள்கிறான். அவ்வாறு மனிதன் உணர்ந்து கொள்ளும்போது அவற்றின்மீது அவனுக்கு விருப்பம் மட்டும் இருக்கும். அவன் மனதில் பேராசையோ அதனையெல்லாம் அடைய வேண்டும் என்ற வெறியோ அவனுக்கு ஏற்படுவதில்லை. மனிதன் இதனையெல்லாம் நன்கு உணர்ந்து இத்தகைய பேராசையில் இருந்து விடுபடும்போது அவன் தேடும் விரும்பும் மன அமைதி கிடைக்கும்.

பொன்பொருள் சொத்துக்கள் மூலம் வரக்கூடிய இன்பம் மகிழ்ச்சி நிரந்தரம் என்று நினைத்துக் கொள்வதற்கு காரணம் நம்மிடம் உள்ள அறியாமை என்ற இருள்தான். அறியாமையின் காரணமாக இந்த உலகில் உள்ள பொருட்களின் மீது அப்பொருட்களின் மூலம் வரக்கூடிய இன்பம் ஆனந்தம் நிரந்தரம் என்று மனதில் நாம் தவறாக நினைப்பதால்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் சங்கீதத்தில் பேரும்புகழும் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் முதுமை பெற்று விட்டாலோ அல்லது அவரைவிட சங்கீதத்தில் திறமைசாலி அவருக்கு போட்டியாக வந்து விட்டாலோ முன்னவரின் பேரும்புகழும் காணாமல் போய்விடும். அந்த பேரும்புகழும் அவருக்கு நிரந்தரம் இல்லை என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இவ்வுலகில் காணும் எந்தவிதமான பொருளுக்கும் நமக்கு நிரந்தரமாக இன்பத்தை மகிழ்ச்சியைத் தரக்கூடிய சக்தி இல்லை. அப்படி இருப்பதாக மனதில் வீணாக எண்ணுவது கற்பனையில் மிதப்பது நமது அறியாமை ஆகும்.

நமது இத்தகைய அறியாமைக்கு காரணம் என்ன என்று கேட்க முடியாது. நாம் இவ்வுலகில் பிறந்ததிலிருந்து நம்மோடு அறியாமையும் சேர்ந்தே இருக்கிறது. நம்மிடம் ஒரு விலை உயர்ந்த பொருள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனால் அந்தப் பொருளினால் வரக்கூடிய இன்பம் மகிழ்ச்சி போன்றவை நமக்குத் தொடர்ந்து கிடைப்பதில்லை. மேலும் அப்பொருளினால் சிலநேரங்களில் நமக்கு துன்பத்தையும் கொடுக்கும் என்பதைகூட நாம் அறிந்து கொள்வதில்லை. அதற்கு முக்கிய காரணம் நமது அறியாமை ஆகும். மனிதனுக்கு ஒரு பொருளினால் வரக்கூடிய இன்ப துன்பங்களை அனுபவிப்பது நமது ஸ்தூல உடல்தான்.

அதே உடல்தான் நோயினாலோ மற்றவற்றாலோ துயரத்தை அனுபவிக்கிறது. தென்றல் காற்று, மிதமான குளிர் காற்று போன்ற நல்ல இயற்கை சூழ்நிலையில் உள்ள இன்பதை எல்லாம் இந்த ஸ்தூல உடல் மூலமாக நாம் உணர்கிறோம். கோடையில் அதிக வெயில், குளிர்காலத்தில் அதிகக் குளிர், புயல் காற்று போன்றவற்றால் சூழ்நிலை பாதகமாக இருக்கும்போது துயரத்தையும் நமது ஸ்தூல உடல்தான் உணர்கிறது அல்லது அனுபவிக்கிறது. இதிலிருந்து நாம் என்ன உணர்கிறோம் என்றால் துன்பத்தையும் இன்பத்தையும் அனுபவிப்பது மனம் அல்ல நமது ஸ்தூல உடல்தான் என்று அப்போது நமக்கு நன்றாகப் புரிகிறது.

பொன்பொருள் சொத்துக்கள் போன்றவற்றின் மூலம் வரக்கூடிய இன்பத்தை மட்டும் நாம் இந்த ஸ்தூல உடல் மூலம் அனுபவித்து உணர்கிறோம். அந்தப் பொருட்களின் மூலம் நம்மையும் அறியாமல் வரக்கூடிய துன்பங்கள் துயரங்களை பற்றி அப்போது யாரும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அப்பொருட்களின் மூலம் நமக்கு துன்பங்கள், துயரங்கள் வந்தபோதுதான் அவற்றை பற்றி உணர்கிறோம். ஒரு பொருள் மூலம் வரக்கூடிய இன்பத்தை மகிழ்ச்சியை மட்டும் அப்போது நினைத்து பார்க்கிறோம்.

அப்பொருளினால் துன்பத்தையும் அனுபவிக்க நேரிடும் என்பதை அவன் சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை. அவ்வாறு நமது மனம் சிந்தித்துப் பார்த்தால் அந்தப் பொருளினால் வரக்கூடிய இன்பத்தின்மீது மகிழ்ச்சியின்மீது அளவுகடந்த ஆசையோ பேராசையோ நம்மிடம் ஏற்படுவதில்லை. மனிதன் இவற்றையெல்லாம் ஆன்மீக வழியில் சிந்தித்து செயல்படும்போது துன்பம் வரும்போது துவண்டு விடுவதில்லை, இன்பம் வரும்போது மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பதில்லை. அவன் இரண்டையும் சமமாக கருதி மனம் ஏற்றுக்கொள்ளும்போது அவன் தேடும் விரும்பும் மன அமைதி கிடைக்கும்.

ஒரு பொருள் நமக்கு ஒரு சூழ்நிலையில் இன்பத்தை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது அதேபொருள் வேறொரு சூழ்நிலையில் நமக்குத் துன்பத்தையும் கொடுக்கிறது என்பதை நம்மில் யாரும் நினைத்துகூட பார்ப்பதில்லை. நாம் அதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பொன்பொருள்களை மென்மேலும் சேர்த்துக் கொள்ளும்போது, உற்றார் உறவினார்களால் தனக்கு எந்தக் காலத்திலும் துன்பம், துயரம் வந்தததில்லை என்று பெருமையாக சிலர் கூறிக்கொள்வார்கள். மனிதர்களுக்கு முதுமை, பிணி, மரணம் போன்றவைகள் இருக்கிறது என்பதையே அவர்கள் அப்போது மறந்து விடுகிறார்கள்.

மனிதன் மகிழ்ச்சியாக இன்பமாக சுகமாக வாழ்ந்துகொண்டு இருக்கும்போது ஏற்படும் முதுமை, நோய்கள், மரணம் போன்றவை உற்றார் உறவினர்களைப் பிரித்து விடும் என்பதை உணர்வதில்லை. அவ்வாறு நமது அறிவு உணர்ந்து கொண்டிருந்தால் எதிர்காலத்தில் வரக்கூடிய துயரத்தை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். அதனால் பாதிப்பும் அடையவும் மாட்டோம். ஆரம்பத்தில் இவற்றையெல்லாம் நன்கு சிந்தித்து வாழ்ந்து வரும்போது நமது மனம் ஓரளவுக்கு பக்குவ நிலைக்கு வந்து விடுகிறது.

உற்றார் உறவினர்கள் தன்னை விட்டு ஏதோவொரு சூழ்நிலையில் பிரிந்து சென்றபின்தான் உறவினர்கள் மூலம் துன்பம் துயரம் போன்றவை வருகிறது என்பதையே மனிதனால் அப்போது உணரப்படுகிறது. இதிலிருந்து மனிதன் தனது நெருங்கிய உற்றார் உறவினர்களால் துயரம், துன்பம் போன்றவை தனக்கு வருவதே இல்லை கூறமுடியாது. எடுத்துக்காட்டாக உறவினர்கள் வீட்டில் நிகழும் ஜனனம் மகிழ்ச்சியைக் கொடுக்கும் அதே உறவினர் வீட்டில் நிகழும் மரணம் துன்பத்தைக் கொடுக்கும். உலகில் காணும் எந்தவிதமான பொருட்களை எடுத்துக் கொண்டாலும் அந்த பொருட்களினால், உறவுகளினால் வரக்கூடிய இன்பமும் துன்பமும் நம்மை அறியாமல் நம்முடன் சேர்ந்தே வரும் என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

நாம் செய்தித்தாள்கள் மூலம் எத்தனை மரணச்செய்திகளைப் படிக்கிறோம். தொலைக்காட்சியின் மூலம் எத்தனை மரணச்செய்திகளைக் கேட்டும் பார்த்தும் இருந்திருப்போம். அந்த மரணச்செய்திகள் அனைத்தும் நமது உடலையோ மனதையோ பெரிதும் பாதிப்பு அடையச் செய்வதில்லை. ஆனால் நெருங்கிய உற்றார் உறவினர்களின் மரணச்செய்திகள் மட்டும் சம்பந்தப்பட்டவரை அடையும்போது அவனது மனமும் கண்களும் கலங்குவதைப் பார்க்கலாம். அப்போது உறவின் பிரிவின் மூலம் வரக்கூடிய மரணம் என்னும் துன்பத்தை மரணத்தின் தன்மையை அவர்கள் உணர்கிறார்கள்.

மரணம் என்ற ஒரு நிகழ்வு உறவு முறையாக இருந்தால் ஒருவருக்கு துன்பத்தையும் துயரத்தையும் கொடுக்கிறது. அதே மரணம் நெருங்கிய உறவுகள் இல்லை என்றால் நமது மனம் துயரப்படாமலும் துன்பப்படாமலும் இருக்கிறது. அதாவது செய்திதாளில் படிக்கும் மரணங்களோ, தொலைக்காட்சியின் மூலம் வரக்கூடிய மரணங்களோ மனித உள்ளங்களில் துயரத்தால் பெரும்பாலும் பாதிப்பது இல்லை. இதிலிருந்து மரணச்செய்தி நம் உறவுகள் சம்பந்தப்பட்டவையாக இருந்தால்தான் துயரம் கொள்கிறோம். மற்றவர்களின் மரணச்செய்திகள் நமது மனதைப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.

பொன்பொருள் சொத்துக்கள் போன்றவை அல்லது உற்றார் உறவினர்கள் மூலம் வரக்கூடிய இன்பத்தின் ஒருபகுதியை மட்டும் நினைத்துப் பார்த்து மகிழ்கிறோம். ஆனால் அப்பொருளின் மூலம் அல்லது உற்றார் உறவினர்கள் மூலம் வரக்கூடிய துன்பத்தின் மறுபகுதியினை நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது மனம் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அவ்வாறு ஒரு பொருளின் மூலம் உறவுகள் மூலம் வரக்கூடிய துன்பத்தின் பகுதியினை நாம் அறிந்து கொண்டால், நாம் அப்பொருள் மீது நம்மை அறியாமல் பேராசை கொள்ள மாட்டோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பொருளின் மீது நம்மை அறியாமல் அதன்மீது பேராசை கொள்ளக்கூடாது என்று மனதில் வைராக்கியம் வைத்திருந்தால் அப்பொருளினைப் பார்த்தவுடன் அதனால் வரக்கூடிய இன்பத்தையும் மறந்துவிடத் தோன்றும். அவ்வாறு மறந்துவிடும்போது அப்பொருளின் மீது ஆசை பேராசை என்னும் இருள் நம்மை சூழாது. ஒரு பொருளின் நித்தியம் அநித்தியம் துன்பம் இன்பம் இவற்றினை பற்றி விவேக அறிவினால் அறிந்து நாம் செயல்படும்போது நாம் மன அமைதி பெறுவதற்கு வாய்ப்புண்டு. நாம் பொன்பொருள் சொத்துக்கள் போன்றவற்றின் மீது பேராசைப்பட்டு அதன் மூலம் வரக்கூடிய இன்பத்தை மகிழ்ச்சியை ஏற்கனவே நமது மனதில் பதிந்து வைத்திருக்கிறோமே, அவற்றை நமது மனதிலிருந்து எவ்வாறு நீக்குவது என்று நமக்கு கேட்கத்தோன்றும்.

நாம் ஆன்மீக வழியில் சென்று நமது உள்ளத்தில் முதலில் தோன்றக்கூடிய ஆசைகளை எண்ணங்களை மனதில் புகுந்து விடாமல் தடுக்க வேண்டும். மனதில் ஏற்கனவே பதிந்துள்ள ஆசைகளை அப்பொருட்களினால் வரக்கூடிய துன்பம் துயரத்தை இடைவிடாமல் நமது விவேக அறிவின்மூலம் பிரித்து அறிந்து அவற்றினை நீக்குவதற்கு முயற்சிகளை ஆன்மீக வழியில் மேற்கொள்ள வேண்டும். முயற்சி திருவினையாக்கும் என்று வள்ளுவர்பெருமான் நமக்கு குறள்மூலம் விளக்கியுள்ளார். மேலும் நமது மனதில் பதிந்துள்ள பேராசையை அப்பொருளில் உள்ள குறைகளை மீண்டும் மீண்டும் நினைத்து அதனை மனதிலிருந்து முற்றிலும் நீக்க வேண்டும். அவ்வாறு மீண்டும் மீண்டும் அப்பொருட்களினால் வரக்கூடிய இன்ப துன்பங்களை மனதில் நினைத்துப் பார்ப்பதுகூட ஒருவிதமான தியானம் ஆகும்.

மனிதனுடைய மரணத்தினை சற்று நினைத்து சிந்தித்துப் பாருங்கள். மனிதன் மரணத்தை நினைத்து வருந்துவதுகூட மனிதர்களின் மனநிலைகள் பலவிதங்களில் செயல்படுவதை காணலாம். நம்மோடு நன்றாகப் பழகி மகிழ்ந்தவர்கள் மரணம் அடைந்துவிட்டால், மரணம் அடைந்தவர் மீது ஓரளவு பற்றுக்கொண்டவர்கள், மரணம் அடைந்தவரால் மிகுந்த பயன்பெற்றவர்கள் போன்றவர்கள் வேண்டுமானால் சிலகாலம் வருத்தப்படுவார்கள். அப்படி வருத்தம் அடைந்தவர்களும் சில நாட்களில் மன ஆறுதல் அடைந்து அவர்களையறியாமல் தங்கள் இயல்பு நிலைக்கு வந்து விடுவதையும் நாம் உலக நடைமுறையில் பார்க்கிறோம்.

மரணத்தை தழுவியரை நினைத்து சிலர் வெளிபார்வைக்கு துயரத்தினை காட்டிக்கொண்டு, தங்கள் மனதிற்குள்ளேயே மகிழ்ச்சி அடைவார்கள். இதனை யாரும் மறுக்க முடியாது. மரணம் அடைந்தவருக்கு சொத்துக்கள் அதிகம் இருந்தால், அவர் மரணம் அடைந்ததால் சொத்து சுகம் சேர்வதை நினைத்து மனதிற்குள்ளேயே அவருடைய வாரிசுகள் சிலர் மகிழ்ச்சி அடைவார்கள். மனிதர்களில் இப்படி போலியான துயரம் காட்டும் பொய்முகங்களை நாம் உலக நடைமுறையில் எத்தனையோ பார்க்கிறோம்.

அதனால்தான் வள்ளல்பெருமான் ‘எவ்வுயிரும் தம் உயிர்போல் நினை’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்று இறைவனிடம் மனம் உருகி வேண்டுகிறார். இவற்றையெல்லாம் மனிதன் உணர்ந்து உண்மையை கடைபிடிக்கும்போது அவன் விரும்பும் தேடும் மன அமைதி கிடைக்கும். மேலும் நாம் போலியான வாழ்க்கை வாழவில்லை என்று மனதில் நினைத்து ஒரு நிம்மதியும் அவர்களையும் அறியாமல் அவருக்கு கிடைக்கும்.

நம் உடல் பாகங்களில் சில செயல்படவில்லையானால் நமக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து சிந்தித்துப் பாருங்கள். நமது உடலின் ஒவ்வொரு உறுப்பின் அவசியம் அப்போது தெரிய வரும். திடீரென ஒருவர் கீழே விழுந்து கால் எலும்பு முறிந்து விட்டால் அவர் நடக்க முடியாமல் எவ்வளவு துன்பப்படுகிறார். அப்போதுதான் முறிந்தகாலின் அவசியம் அறிந்து உணர்ந்து முறிந்த அந்தக்காலின் முறிவுக்கு கட்டுப்போட்டு ஒவ்வொருகணமும் கவனமாக முறிந்திருந்த காலை பார்ப்போம். அதுவரை அந்தக் காலினைப்பற்றி நடப்பதற்கு பயன்பட்டதைப் பற்றி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். அப்படி நினைத்துப் பார்ப்பதே ஒரு வகைத் தியானம்தான் என்பதை நாம் அப்போது உணர முடியும்.

அவ்வாறு ஒவ்வொரு பொருளைப்பற்றியும் அதன் மூலம் வரக்கூடிய இன்பம் துன்பம் பற்றி சிந்தித்தாலே அது ஒரு தியானம்போல் இருக்கும். இதனையெல்லாம் சிந்தித்து நமது மனம் தெளிவடையும்போது, நம்மை அறியாமல் மன அமைதி நமக்கு கிடைக்கும். இவற்றை எல்லாம் நாம் ஆன்மீக வழியில் சென்றுதான் காண வேண்டும். இவ்வாறு ஆன்மீக வழியில் சிந்திக்க சிந்திக்க எந்தப்பொருள்கள் மீதும் நாம் பேராசைபடுவதற்கு நினைக்க மாட்டோம். அப்படியே ஆசைப்பட்டாலும் அப்பொருளினால் வரக்கூடிய இன்பத்தில் மகிழ்ச்சியில் முழுமையாக மூழ்கி விடாமல், அப்பொருளின் மீது உள்ள ஆசைகள் சிறிதுசிறிதாக நமது மனதை விட்டு நாளடைவில் அகன்று விடும். அவ்வாறு ஆசைகள் நம்மைவிட்டு அகலும்போதுதான் நாம் தேடும் விரும்பும் மன அமைதி தானாக நம்மை வந்தடையும்.

நல்ல எண்ணங்களை மனதில் நிரப்பி அதன்மூலம் நல்ல செயல்பாடுகளை கடைப்பிடிக்கச் செய்வதும் ஒருவிதமான தியானம் என்று ஆன்மிகம் கூறுகிறது. துயரங்களை துன்பங்களை நினைத்து அதனை மனதில் இருந்து அகற்றுவதும் மற்றொரு தியானம் ஆகும். பிறர் மரணத்தைப் பற்றி நம் உள்ளத்தில் தோன்றியதை மற்றவர்களிடம் வெளிப்படையாக கூறாமல் நாம் ரகசியமாக வைத்துக் கொள்ளவேண்டும். ‘பணம் சொத்து இருக்குது என்ற திமிரில் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தவர் இப்படி தன்னோட சொத்து சுகத்தையெல்லாம் இழந்து இப்படி அடங்கி போய் சேர்ந்து விட்டார்’ என்று சிலர் அவர் மரணம் குறித்து தங்களுக்குள் கூறிக்கொள்வார்கள். இதனை சம்பந்தப்பட்ட நெருங்கிய உறவினர்களிடம் கூறினால் என்ன நடக்கும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள்.

மனிதனுடைய மரணம் உற்றார் உறவினர்களின் மரணம் ,செல்வம், சொத்து, புகழ் ஆகியவையெல்லாம் நிரந்தரம் அல்ல, அநித்தியம் என்று அறிந்துகொண்டு நாம் ஆன்மீக வழியில் அமைதி காண வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரர் ஒரு காலத்தில் உலகளவில் புகழ் பெற்று விளங்கி இருப்பார். அவர் ஓய்வு பெற்றபின் அல்லது அவரைவிட திறமையாக விளையாடுபவர் வந்துவிடும்போது, காலப்போக்கில் அவருடை புகழ் மங்கி காணாமலே போய்விடும். இதிலிருந்து இவ்வுலகில் காணும் பொருள்கள் அனைத்தும் மனிதர்களுடைய புகழ் பெருமை உள்பட அனைத்தும் அநித்தியமானவை என்பதை புரிந்து கொள்ளலாம்.

இவற்றையெல்லாம் நாம் ஆன்மீகத்தின் துணையோடு சிந்தித்துப் பார்த்து ஆன்மீக வழியில் செயல்பட்டால், நாளடைவில் மனம் பக்குவநிலை அடைந்து உலகில் உள்ள எந்தப்பொருளின் மீதும் ஆசையோ பேராசையோ கொள்ளமாட்டோம். அந்தப் பொருட்களை அடைவதற்கான முயற்சியையும் கைவிட்டு விடுவோம். அவ்வாறு மனம் பக்குவநிலைக்கு வரும்போது நாம் தேடும் விரும்பும் மன அமைதி நம்மைத் தேடி வந்து விடும்.

மனித வாழ்வின் பிறப்பு இறப்பு பற்றி ஆன்மீக வழியில் நினைக்க நினைக்க நிலையற்ற பொருள்களின் மீது உள்ள பற்று பேராசை சிறிதுசிறிதாக குறைந்து நாளடைவில் மனம் பக்குவ நிலையை அடைந்து விடும். நமது விவேக அறிவு மலர்ந்து பூரணமான வைராக்கியம் கிடைக்கும். உயிரினங்களுக்கு உதவி செய்தல், தர்மசெயல்களில் ஈடுபடுதல், கோபப்படாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, மற்றவர்கள் நமக்குச் செய்யக்கூடிய துன்பங்களை கண்டு சகித்து கொள்ளுதல், தியாக மனப்பான்மை, இன்னா செய்தாருக்கும் இனியவை செய்தல் போன்றவற்றினால், நமது மனம் பக்குவநிலையை அடைந்து பூர்ண வைராக்கியம் நமது உள்ளத்தில் மலரும். அதற்கு பொறுமையும் மன உறுதியும் அவசியம் இருக்க வேண்டும். ஏற்கனவே இருந்த பேராசையை விவேக அறிவு மூலம் அறிந்த பின், ஒரு பொருள் மீது உள்ள ஆசை பேராசை போன்றவற்றை வைராக்கியத்தின் துணை கொண்டு மனதிலிருந்து அகற்றுவதற்கு முயல வேண்டும்.

ஆன்மீக வழியில் சிந்தித்து செயல்படும்போது பொன்பொருள் சொத்து போன்றவற்றின் மீதோ அல்லது உற்றார் உறவினர்கள் மீதோ பொறாமை பேராசை போன்ற எண்ணங்கள் நம் மனதிலிருந்து சிறிது காலத்தில் மறைந்து விடும். அவ்வாறு மறைந்து விடும்போது ‘ஈஸ்வர தரிசனம், இன்பம் துன்பம் ‘எல்லாம் பகவான் செயல்’ ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற மன நிலைக்கு படிப்படியாக நமது மனம் பக்குவம் அடைந்து மனஅமைதி கிடைத்து விடும்.

ஆன்மீக வழியில் சென்று இத்தகைய ஞானம் வந்து விட்டால், உலகில் உள்ள எந்தப்பொருட்களின் மீதும் விருப்போ வெறுப்போ உண்டாவதில்லை. அனைத்தையும் அதாவது துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக நினைக்கச் சொல்லும். வாழ்வில் இன்பம் வந்துவிட்டால் மகிழ்ச்சி அடைவதும் துன்பம் வந்துவிட்டால் துவண்டு விடாமல் மனம் சம நிலைக்கு வந்துவிட்டால் நமது மனம் பக்குவ நிலைக்கு வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக விவேகத்திலிருந்து வரக்கூடிய வைராக்கியம்தான் நமது மனதில் நிலைத்து நிற்கும். மனக்கட்டுப்பாடு மன பக்குவ நிலை மனஅமைதி ஆகியவை கிடைப்பதற்கு வைராக்கியம் துணை புரியும். இதனை இதிகாசங்கள் உபநிடதங்கள் வேதங்கள் மூலம் இவற்றை அறிந்து கொள்ளலாம். மேலும் இதனை அனுபவத்தின் மூலம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளலாம். நாம் ஆன்மீக வழியில் உயர்ந்த கருத்துக்களை படிக்கும்போது கேட்கும்போது தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளும்போது நாம் தேடும் விரும்பும் மனஅமைதியைப் பெறலாம் (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (22-Nov-21, 10:14 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 36

மேலே