சொற்கள் மீது கொஞ்சம் கருணை காட்டு

*************************************
உன் மௌனத்திற்கும்
சம்மதத்திற்கும் இடையே
மாட்டிக்கொண்டு விழிக்கும்
சொற்கள்
இடிக்கியில் தலைவைத்த எலியாய்
*
நீ சொல்வாயென நானும்
நான் சொல்வேனென நீயும்
சொல்லாமல் போனச் சொற்கள்
தேர்ச் சில்லில் அகப்பட்டப் பக்தனாய்
*
முயல்போல முந்திவந்தும்
ஆமைபோல நகரத்தொடங்கியச் சொற்கள்
காதல் பந்தயத்தில் தோற்றுக் கிடக்கின்றன
*
பேசுவதற்கு ஆயிரமிருந்தும்
பேசாமல் போன சொற்கள்
பேருந்தைத் தவறவிட்டப் பயணியாய் துடித்துவிடுகின்றன
*
யாருமில்லா வேளையில்
தைரியமாக வந்தாலும்
உன்னைச் சந்திக்கும் வேளை
கோழையாகி ஓடிப்போகும் சொற்கள்
நம்பிக்கைத் துரோகியாகின்றன
*
சொல்வோமா
சொல்லாமல் விடுவோமா என்று
பட்டிமன்றம் நடத்தும் சொற்கள்
காதலின் மேடையேறமட்டும்
தயக்கம் காட்டுகின்றன
*
மெல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
தொண்டைக்குழியில் உணவாய்
சிக்கிக்கொண்ட இந்த சொற்கள்,
சொன்னால் காதலிலும்
சொல்லவிட்டால் கவலையிலும்
சிக்கிக்கொளவே வைத்து விடுகின்றன
*
தொண்டைக் காம்பில் நின்று
இதழ்விரிக்கப் போராடும்
இந்த சொற்களைப் பிரசவிப்பதென்பது
குழந்தை பிரசவிக்கும் வலியிலும் கொடியது.
*
விதையில்லாமல் முளைத்தும்
வேர்விட உன் இதயத்தை
நிலமாய்க் கேட்கும்
இந்த சொற்கள் மீது
கொஞ்சம் கருணைக்காட்டு
இந்த கோடைகாலத்தில்
இளைப்பாற ஒரு மரமாய்க்
கிளைபரப்பட்டும் நம் காதல்
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Jul-24, 1:22 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 29

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே