இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்க் கரும்பார் கழனியுட் சேர்வர் – நாலடியார் 122
நேரிசை வெண்பா
இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்க்
கரும்பார் கழனியுட் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார் 122
- தீவினையச்சம், நாலடியார்
பொருளுரை:
வண்டுகள் ஆரவாரிக்கும் இனிய காட்டில் இருந்து உயிர் வாழும் கவுதாரியையும் காடையையும் கூட்டில் இருந்து வருந்தும்படி பிடித்துக்கொண்டு வந்து சிறை வைப்பவர், இருப்பு விலங்குகளாற் பூட்டப்பட்ட கால்களையுடையராகவேனும் அயலார்க்கு அடிமைப்பட்டவர்களாகவேனும் கட்டுப்பட்டு வலிய பார்நிலத்திலாதல் விளைநிலத்திலாதல் போய்த் தொழில் செய்து உழல்வர்.
கருத்து:
சிற்றுயிர்களைச் சிறைப்படுத்துந் தீவினைக்கும் அஞ்சுதல் வேண்டும்.
விளக்கம்:
காலராய்க் கரும்பார் சேர்வர், ஆளாய்க் கழனியுட் சேர்வர் எனக் கொள்க.
கரும்பார் சேர்தல் - சிறைச்சாலைகளுட் செய்யுந்தொழில்.
சிவலும் குறும்பூழுமென்றது, இலக்கணையாற் பிற சிற்றுயிர்களையும் உணர்த்தும்.