போர் வேண்டாம் மன்மதா
கையில் கரும்பு நாணென்ன
தோளில் மலர்க் கணையென்ன
சுமந்துவரும் அழகு தேரென்ன -அதை
புலிபோல் இழுத்துவரும் தென்றலென்ன
யாருடன் போர் மன்மதா?
கண்ணுண்டு நெஞ்சள்ளி
கடலேறி காணா தூரம்
கள்வன் செல்ல..
நித்திரையெனும் சத்துரு
தீண்டாது விலக
கயலாடிய விழிகள்
சிந்தும் நீரில்
சிரித்த பங்கயமுகம்
நனைய சோகம்
இழைந் தோட..
சந்தனகுழம்பில் குளித்த
மாந்தளிர் மேனி
கொதிக்கும் நிலவில்
சருகாய் பொரிய..
செங்கை சிந்திய
கைவளை மெலியும்
என்னுடல் கதை சொல்ல..
சுற்றம்சொல் கசந்து
மன்னவன் சொல்கேள
பனிவிழும் ராவில்
தலையணையோடு
தனியாய் தவித்திருக்கும்
என்னுடனா போர் மன்மதா?
போர்முரசு கொட்டி
விரகத்தீ மூட்ட நீயும்
விளையாதே மன்மதா...
ஓய்வு கொடு
உந்தன் கணைகளுக்கு
கடல் சென்ற காதலன்
கரை சேரும் வரை!