காத்தவன் பாதத்தை

மரத்தினுள் வைத்தான் மாபெரும் உற்பத்தியை
அறத்தினைக் காத்திடும் அற்புதத் தலைவன்
பிறந்த இடத்திலே பெயராமல் நின்றே
உறவாடும் கலையை கொடுத்தான் மரத்திற்கே --- (1)

வெட்டியே வீசுவோரும் வெட்டியாய் பேசுவோரும்
தமதின் மடியில் இளைப்பாற நிழலை
குறைவின்றி கொடுத்திட பணித்தான் இறைவன்
குவலயம் காக்கும் மரத்தின் இடத்தினில் ---- (2)

பந்தலும் சாரமுமாய் பலகை சட்டமுமாய்
இறந்த மரத்தை இருக்க வைத்தே
ஈகையின் குணத்தை எளிதாய் சொன்னான்
உலகினை படைத்த பிறையை சூடியவன் --- (3)

இணையும் நிகழ்விலும் சிதையை எரிப்பிலும்
உணவின் சமைப்பிலும் கோபத்து எரிப்பிலும்
ஆபத்தைக் காட்டிடும் அழகு நெருப்பிற்கு
ஆதர சுள்ளியாய் மரத்தை படைத்தான் --- (4)

எதையும் பிரதியாய் எதிர்பார்க்கா நிலையில்
இருப்பதைக் கொடுத்து வள்ளலாய் உயரவே
வளத்தினை தேடிட வேரினைத் தந்து
பாரினை காத்தவன் பாதத்தை பற்றுவோம் ----- (5)
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Dec-21, 6:59 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 44

மேலே