கொழுத்தே உடலும்
கட்டளைக்கலித்துறை
ஏழ்மை நிலையது என்பது ஆழ்ந்த உழைப்பின்மையே
தாழ்ந்த செயலென தள்ளியே வைத்து இருப்பதுமே
ஏழ்மை நிலைக்கு முதன்மை குறியிடாய் தோணிடுமே
ஆழ்ந்து முயன்றால் அவைகள் அறுபடும் விர்ரெனவே ---- (1)
உழைக்கா நிலையிலே உள்ளம் துவளும் சிலையெனவே
கொழுத்தே உடலும் பெருக்கும் தவறாய் செயல்படவே
அழைப்போர் இடங்களில் சென்றே பொருந்தா வகையினிலே
பிழையாய் எதனையும் செய்தே இடரிலே சிக்கிக்குமே ---- (2)
தெரிந்ததோ கற்றதோ பார்த்ததோ உற்றதில் வித்தையையே
புரிந்து அறிந்து தெளிவாய் முனைந்தால் கிடைத்திடுமே
திரவியம் வாழ்வில் வளமையும் சேர்ந்திடும் இன்பந்தானே
வருமோ பணமிலா ஏழ்மையும் வாழ்வில் எளிதினிலே. ---- (3)
பறவையில் மாக்களில் ஏழ்மையும் இல்லை உழைப்பதாலே
பொறுமையாய் ஊர்ந்து வசிக்கும் இனத்திலும் அஃதில்லையே
உறவினைக் கொள்ளா பலவுயிர் யாவும் உழைப்பதாலே
வறுமையும் நீங்கியே நல்ல நிலையில் உயர்வினிலே ---- (4)
மனிதன் எனுமோர் மதமிகு பிண்டம் உழைப்பதையே
குனிவென கொண்ட மனத்தினால் பல்வகை தொல்லையுமே
பனைபோல் உயர்ந்து பலவகை துன்பமும் தந்திடுதே
எனவே உழைப்போம் உயர்வோம் செழித்திட வாழ்வினிலே. ---- (5)
---- நன்னாடன்.