நேற்று எனக்கே நான் எதிரி இன்று வேறு மாதிரி
புன்னகையின் எதிரியாக இருந்த நான் இப்போது புன்னகையை கட்டி தழுவி நட்பு கொள்ள துடிக்கிறேன்
கோபத்தின் சிகரமாக இருந்த நான் தற்போது கனிவென்னும் புல்வெளியில் புரண்டு திரிய நினைக்கிறன்
மனக்கசப்பின் அரசனான நான் அகப்பாகற்காயில் அல்வா செய்து இனிதே சுவைக்க ஆவலாக இருக்கிறேன்
வெறுப்பின் முக்கிய மந்திரியான நான் மறந்தாலும் அன்பை மறக்கமாட்டேன் என்று இன்று உரைக்கிறேன்
மோகங்களின் மேகங்களாக இருந்த நான் உண்மை அன்பு அமைதி மகிழ்ச்சியின் மீது தாகமாக இருக்கிறேன்
சோகங்களின் தலைவனாக இருந்த நான் இன்று சோக ராகத்தில் இன்பமான மெட்டுக்கள் கட்டி பாடுகிறேன்
கடந்த கால நினைவுகளின் அதிபதியான நான் இப்போது நிகழ் காலத்தின் இனிய குடிமகனாக இருக்கிறேன்
கற்பனை இல்லாத கவியாகிய நான் தற்போது என் கற்பனைகளை விற்பனையின்றி பகிர்ந்து கொள்கிறேன்
வெளியில் கடவுளை தேடும் சிறந்த பயணியான நான் இன்று என்னுள்ளே உள்ள கடவுளை நேரமும் காசும் செலவு செய்யாமல், எனக்கு தோன்றும்போதெல்லாம் தரிசித்து, ரசித்து அவ்வுணர்வை புசித்து வருகிறேன்!
ஆனந்த ராம்