எதற்காக இவ்வுலகில் பிறந்து திண்டாடுகிறோம்
இந்த பிரபஞ்சம் மற்றும்நாம் வாழும் இந்த உலகம் இவையெல்லாம் எதற்காக உருவானது! தெரியாது
எண்ணிலடங்கா உயிரினங்கள் மற்றும் கோடானு கோடி மக்கள் ஏன் உருவாக்கப்பட்டனர்? அறியேன்
ஐந்தறிவு மிருகங்கள் ஆறறிவு மனிதர்கள் ஏன் பிறந்து வாழ்ந்து, வீழ்ந்து, இறக்கிறார்கள்! தெரியவில்லை
தாவரங்கள் பறவை பட்சிகள் மிருகங்கள் இருப்பதால் மனித இனம் நலமாக வாழ முடிகிறது! புரிகிறது
கோடானு கோடி மனிதர்கள் இருப்பதால் தாவரங்கள் பறவைகள் மிருகங்களுக்கு லாபம்?ஒன்றுமில்லை
மனிதர்கள் அனைவரும் தம் சுயநலத்திற்காக மற்ற உயிர் ஜந்துக்களை அழிக்கிறார்கள்! மறுக்கமுடியாது
இது ஒரு புறம் இருக்க மனித இனத்துக்குள்ளாவது அன்பு மனிதநேயம் நாணயம் இருக்கிறதா? இல்லை
மதம், குலம், இனம், மொழி, இடம், நிறம், கலாச்சாரம் இவற்றினால் பிரிக்கப்பட்டது மானிடம்! சரியே
இப்படி பலவித வேற்றுமைகளுடன் வாழும் நாம் ஒற்றுமையை பற்றி பேச உரிமையே இல்லை! உண்மை
ஒரே மதத்தினரும் குலத்தினரும் இனத்தவரும் மொழியினரும் இணைத்து வாழ்கிறார்களா? இல்லை
போகட்டும்,ஒரே குடும்பத்தில் பிறந்த அன்னை,தந்தை,சகோதர சகோதரிகள் கூடி வாழ்கிறாரா? இல்லை
பின்னர் நமக்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது, தர்மத்தையும் நியாயத்தையும் பற்றி பேசிட? உண்மை
மிருகங்கள் தனக்கு பசி எடுக்கும்போது மட்டுமே வேட்டையாடி சாப்பிடுகிறது, ஆனால் நாம்? எந்நேரமும்
நாம் தாவரங்களையும் விலங்குகளையும் வளர்ப்பது , வளர்ந்த பின் அழித்து உண்ணத்தான். ஆமாம் தான்
நம் முன்னேற்றத்திற்கு எதை வேண்டுமானாலும் வெட்டுவோம், உடைப்போம் , அழிப்போம்! அப்படிதான்
காலம் இருக்கும் நிலையை பார்த்தால், நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் பணத்திற்காக ! மிகவும் சரி
பணம் இருந்தால் தான் எண்ண முடியும், உண்ண முடியும், எந்த ஒரு காரியமும் பண்ண முடியும்!ஹிஹி
பணம் இருந்தால் நண்பன் , பக்கத்துக்கு வீட்டுக்காரன், ஏன் சகோதரனும் சகோதரியும் கூட! அப்படித்தான்
குணம் படைத்தவரிடம் பணம் இருப்பதில்லை,பணம் வந்துவிட்டால் குணம் ஓடி விடுகிறது ! நிச்சயமாக
இந்த அழகில் கடவுள், பக்தி, ஆன்மிகம் தருமம் பற்றி ஓயாமல் பேசிக்கொண்டு அலைகிறோம்! சரியே
நாமே உருவாக்கிய கடவுளை வெளியில் விடுவதில்லை, கோவிலில் பூட்டிவைத்திருக்கிறோம்! ஆமாம்
நாம் கற்பனையில் உருவாக்கிய கடவுள் நிஜமாக வெளியே வந்து நடமாட ஆரம்பித்துவிட்டால் நம் கதி என்னாகும்? அதோகதி!
ஆனந்த ராம்