காத்திருக்காது காலம்
உலகெனும் கோளத்தில் மனிதராய் பிறந்தவர்
எவரும் அறிவர் வந்தநாளை நிச்சயமாய்!
வாழ்கின்ற காலமும் இறுதிநாள் தெரியாது
காலன் அழைக்கும் காலநேரம் அறியாது!
வருடங்கள் கடந்தாலும் வளர்ச்சியை நினையாது
வகுத்திடுக வாழ்வைப் பகுத்தறிந்துப் பாதையை!
முகிழ்ந்த மலர்போல் மணமுடன் வாழ்க
முறையாக வாழ்ந்தால் மகிழ்வே மண்ணில்
பூத்திடும் புதுமலரும் வாடும் புவியிலே
வீசிடும் வாசமும் குறைவது இயற்கையே !
கடந்திடும் காலம் ஊர்தியல்ல காத்திருக்க
நேற்றுள்ள உயிர்கள் இன்றில்லை இவ்வுலகில் !
செல்லுபடி ஆகாது செல்லரித்தப் பணமும்
ஆணை பிறப்பித்தால் கைக்காசும் வீணே
காத்திராது நமக்காக நமது திட்டங்களும்
காலாவதியான ஒப்பந்தம் நிலை போல !
காலத்தின் மதிப்பறியா நெஞ்சங்கள் பலவுண்டு
ஞாலத்தில் என்றும் நாதியற்றுப் போவதுண்டு !
உணர்ந்தவர் வாழ்வர் உவகைப் பெருக்குடன்
புதைகுழியில் வீழ்வர் புரியாத உள்ளங்கள் !
பழனி குமார்