இறப்பொன் றிலையாயின் யாரே பிறப்பின் பெருமை பெறுவார் – இறப்பு, தருமதீபிகை 930
நேரிசை வெண்பா
இறப்பொன் றிலையாயின் இவ்வுலகில் யாரே
பிறப்பின் பெருமை பெறுவார் - இறப்பொன்றே
நின்று புதுமை நிலையை உலகின்கண்
என்றும் இயற்றும் இனிது. 930
- இறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
இறப்பே பிறப்பின் பெருமையைப் பெறும்படி தூண்டுகிறது; அது இல்லையானால் யாரும் நல்லதை நாடார்; அதன் நினைவே எல்லாருக்கும் புதிய உணர்ச்சியை யூட்டி அதிசய நலங்களைக் காட்டி அவற்றை அடைய அருளுகிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்.
கால நிலைகளைக் கருதி ஓர்ந்து காரியம் புரிவது மேலான மனித இயல்பாய் மேவியுளது. சென்ற கால நினைவும், வருங்கால அறிவும், நிகழ்கால நிலைமைகளை நயமாய்ப் பயனுறச் செய்கின்றன.
பழகிய அனுபவங்கள் மனிதனுக்கு உறுதியான உணர்வு நலங்களை அருளுதலால் அவை உயர்வான நிலைகளை அடைய உதவுகின்றன. கண்ட காட்சிகள் காணாத மாட்சிகளைக் காணப் புரிகின்றன. யாக்கை நிலையில்லாதது; கணம் தோறும் ஆயுள் கழிந்து போகிறது; இளமை நீங்கி மூப்பு ஓங்கி வருதலால் இறப்பு அருகே நெருங்கியுள்ளமை எளிதே தெரிய நின்றது.
உடலையும் உயிரையும் வேறு பிரித்துக் கூறு படுத்துவது கூற்று என நேர்ந்தது. உயிர் வாழ்வின் இறுதி முடிவு இறப்பு என வந்தது. சீவன் சேர்ந்துள்ள அளவும் தேகம் மோகமாய்ப் போற்றப்படுகிறது. அது பிரிந்து விடின் இது பிணமாய் இழிந்து விடுகிறது. அல்லல் வாழ்க்கைக்கு இடமாய் நின்று இறுதியில் அவலச் சவமாய் முடிதலால் உடலின் நிலையை ஞானிகள் வாழ்விலேயே தாழ்வாய் நினைந்து தகவு சூழ்ந்து கொள்ளுகின்றனர்.
குடும்பத் துடனே குடித்தனஞ் செய்யக்
குடிக் கூலிக்குக் கொண்ட மனையில்
கண்ட காட்சிகள் கனவிரோ தங்கள்
இழிவினும் இழிவ(து) எண்சாண் உள்ளது
மலமும் சலமும் மாறா ஒழுக்கது
சுற்றினும் ஒன்பது பொத்தல் உடையது
சீழும் கிருமியும் சேர்ந்து கிடப்ப(து)
என்புதோல் இறைச்சி எங்கும் செந்நீர்
ஆய்ந்து செய்த ஆகர முற்றது
அகலல் அணுகல் புகலல் இகலல்
அணிகள் துணிகள் அணிவ தாய
சால வித்தைகள் சதுரில் கொண்டது
கிடந்தும் இருந்தும் நடந்தும் பற்பல
பகரிம் மனையால் படும்பா டதிகம்
(வீட்டுத் தலைவரும் குடிக்கூலி நிர்ப்பந்தமும்)
இம்மனைத் தலைவராய் எழுந்த மூவர்
தறுகட் கடையர் தயவே இல்லார்
பணிசிர முதலாய்ப் பாதம் வரையில்
வாது செய்திடும் வண்கால வாதி
பெருகுறு கள்ளினும் பெரிதுறு மயக்கம்
பேதைமை காட்டும் பெருந்தீப் பித்தன்
கொடுவிடம் ஏறிடுங் கொள்கைபோல் இரக்கங்
கொள்ளா திடர்செய் குளிர்ந்த கொள்ளி
இவர்கள்என்னோ டிகல்வர் இரங்கார்
எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார்
பிண்ட மென்னும் பெருங்குடிக் கூலி
அன்றைக் கன்றே நின்று வாங்குவர்
தெரியா தொருநாள் செலுத்தா விட்டால்
உதரத் துள்ளே உறுங்கனல் எழுப்பி
உள்ளும் புறத்தும் எண்ணெரி ஊட்டி
அருநோய் பற்பல அடிக்கடி செய்வர்
இவர்கொடுஞ் செய்கை எண்ணுந் தோறும்
பகீரென உள்ளம் பதைத்துக் கொதித்து
வெதும்பும் என்னில் விளம்புவ தென்னே? – குடும்ப கோரம்
உயிர் குடியிருக்கும் உடலைக் குடில் என்று உருவகித்து இராமலிங்க அடிகள் துயரக் குறிப்போடு இவ்வாறு வருணித்திருக்கிறார். உருவகங்களின் பொருள் நிலைகளைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வேண்டும். வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூவரும் இக்குடிலுக்குச் சொந்தக்காரர்; குடியிருப்புக்குக் கூலியாக நாளும் மூன்று வேளை பிண்டம் போட வேண்டும்; கொஞ்சம் தவறினால் கொடுந்துயர் செய்து வெளியே விரட்ட நேர்வர்; இப்படி அல்லல் வாழ்க்கை வாழ்வதை விடச் சாவது நல்லது; செத்தால் மீண்டும் பிறவாமல் இருக்க வேண்டும் என இப்பெரியார் உறுதியாய்க் கருதியுள்ளமை இங்கே காண வந்தது.
ஞான நோக்கு ஊன வாழ்க்கையை ஓர்ந்துணர்ந்து உய்தி நிலையைத் தேர்ந்து கொள்கிறது. பிறப்பு, இருப்பு, வாழ்வு, சாவு யாவும் அவலக் கவலைகளாகவே அடர்ந்து படர்ந்துள்ளன; இந்த அல்லல் நிலைகளிலிருந்து ஒல்லையில் நீங்கி நல்ல கதியைக் காண்பதே தனது உயிர்க்கு ஒருவன் நன்மை செய்வதாம்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 8)
நெக்கு நெக்குள் உருகி யுருகி நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர் போலுந் திருமே னித்தி கழநோக் கிச்சி லிர்சி லிர்த்துப்
புக்கு நிற்ப தென்று கொல்லோ என்பொல் லாம ணியைப்பு ணர்ந்தே. 8
. 27 புணர்ச்சிப் பத்து, எட்டாம் திருமுறை, மாணிக்கவாசகர், திருவாசகம்
துன்பத் தொடர்பு நீங்கி இன்பமூர்த்தியான இறைவனை அடைய விரைந்து மாணிக்கவாசகர் உருகி மறுகி உரையாடியுள்ள நிலையை இதனால் ஓர்ந்துணர்ந்து கொள்கிறோம்.
நேரிசை வெண்பா
இறந்து படுமுன்னே இன்னுயிர்க் கென்றும்
சிறந்த கதிநிலையைச் செய்தான் - பிறந்த
பயனை அடைந்தான் பலனிழந்து செத்தான்
துயரையே கண்டான் தொடர்ந்து.
இதனை நினைந்து கொண்டு நிலைமையைத் தெளிந்து கொள்க.