பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா - இன்னா நாற்பது 26

இன்னிசை வெண்பா

பெரியாரோ (டி)யாத்த தொடர்விடுத லின்னா
அரியவை செய்து மெனவுரைத்த லின்னா
பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா
பெரியோர்க்குத் தீய செயல். 26

- இன்னா நாற்பது

பொருளுரை:

பெரியவருடன் கொண்ட தொடர்பை விடுவது துன்பமாகும்;

செய்தற்கரிய காரியங்களை செய்து முடிப்போம் என்று சொல்வது துன்பமாகும்;

தம்மிடத்தில் அன்பு கொள்ளாதவரிடம் தாம் அடைந்த துன்பங்களைக் கூறும் சொல் துன்பமாகும்;

பெருமையுடையார்க்குத் தீயனவற்றைச் செய்தல் துன்பமாகும்.

பெரியார் தொடர் விடுதல் இன்னா என்பதனை,

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். 450 பெரியாரைத் துணைக்கோடல்

என்னுந் திருக்குறளாலும் அறியலாம்.

பெரியார் - கல்வியறிவு நற்குண நல்லொழுக்கங்களில் சிறந்த நல்லோர்.

‘அரியவை செய்துமென உரைத்தல் இன்னா' என்றது தாம் செய்யக் கருதிய அரிய செயல்களைச் செயலால் வெளிப்படுத்தலன்றி உரையாற் கூறுதல் தக்கதன்று எனப்படும்.

தம்மாற் செய்ய வியலாதவற்றைச் செய்து தருவேமெனப் பிறர்க்கு வாக்களிப்பது இன்னாவாம் எனப் பொருள் கூறினும் அமையும்.

பரிதல் - அன்பு செய்தல், இரங்குதல். பெரியார்க்குத் தீங்கு செயல் இன்னா என்பதனை,

எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்,
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். 896 பெரியாரைப் பிழையாமை என்ற குறளாலும் அறியலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jan-22, 9:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே