தூய பரத்தின் தொடர்புடைய நீ மாயப் படுகுழியில் வீழ்ந்து பதைக்கின்றாய் - ஞானம், தருமதீபிகை 943
நேரிசை வெண்பா
தூய பரத்தின் தொடர்புடைய உன்னைநீ
ஆயாமல் அந்தோ அவலமாய் - மாயப்
படுகுழியில் வீழ்ந்து பதைக்கின்றாய் இன்றே
நடுநின் றுணர்க நயந்து. 943
- ஞானம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நீ தூய பரம்பொருளின் நேயமான உறவினன்; உன் உண்மை நிலையை உணராமையால் புன்மை அடைந்து புலையாய் இழிந்துள்ளாய், விரைந்து தெளிந்துயர்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.
பொய்யான மருளில் மயங்காமல் மெய்யான தெருளைத் தெரியும் தெளிவு மெய்ஞ்ஞானம் என மேவி நின்றது. உயிரின் உண்மை தெரிய உயர்பரனின் தன்மையும் ஒருங்கே உணர வருகிறது. அறிவு அதிசய ஆற்றல் உடையது; மனிதனை எவ்வழியும் மகிமைப்படுத்தி வருகிறது; எதையும் கூர்ந்து ஓர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்கிறது; கால தேசங்களைக் கடந்தும் கருதி உணர்ந்து முடிவு காண்கிறது; உலக நிலைகளையும் வான வெளிகளையும் அண்ட கோடிகளையும் ஆராய்ந்து கொண்டு இவற்றிற்கெல்லாம் ஒரு மூல முதல் உண்டு என்று காரண காரியங்களோடு சாலவும் உறுதியாய்த் துணிந்து கொள்ளுகிறது.
இத்தகைய அறிவு மானிடனிடம் வித்தகமாய் விளங்கியுள்ளமையால் எத்தகைய துறைகளையும் எத்துணைய நிலைகளையும் உய்த்துணர்ந்து யூகித்து முடிவு காணுகிறான்; தான் கருதிக் கண்ட காட்சிகளை உறுதியான மொழிகளால் கலையின் ஒளிகளோடு உலகம் அறிய நலமாய் வெளியிடுகிறான்.
நில வலையங்களையும், மலை வகைகளையும், கடல் நிலைகளையும், சூரிய மண்டலங்களையும், சந்திர கோளங்களையும், விண்மீன்களையும், வேறு பல கிரகங்களையும் விழைந்து நோக்கி வரைந்து முடிவு காண நெடிது மூண்டு கடிது நீண்டு வருகிற மனிதன் தனது நிலையை ஒரு சிறிதும் உணர்ந்து பாராமல் யாதும் கருதாமல் மருளாய்க் குருடுபட்டிருப்பது பெரிய வியப்பாயுள்ளது.
விஞ்ஞானம் என இஞ்ஞான்று வியந்து புகழ்ந்து பேசப்படுவதை யாண்டும் கேட்டு வருகிறோம். இது இந்நாட்டுக்குப் புதிது அன்று; பண்டு தொட்டே பாரத நாடு யாரும் அறிய முடியாத அதிசய நிலைகளை அறிந்துள்ளது. உலக நிலைகளையும், உயிர்த்தொகை களையும், தாவர வகைகளையும், தாது மூலங்களையும், ஆதிமூல நிலைகளையும் நன்கு தெரிந்த யோகிகளும், சித்தர்களும், ஞானிகளும் எவ்வழியும் தத்துவ ஒளிகளோடு தழைத்திருந்துள்ளனர். உலகநிலை யாவும் அநித்தியம் என்று .தெளிந்து கொண்டமையால் அவற்றை விரித்து விளக்கிப் பொறித்து வையாமல் புனித நிலையில் பொருந்தி இனிய சீலங்களில் நின்றனர்.
இந்த உலகத்திலிருந்து சூரியன் இருக்கும் தூரத்தை சரியாயளந்து பார்த்ததுபோல் அளவுகள் கூறப்படும் உளவுகளைக் காணுகிறோம். ஒன்பது கோடியே இருபத்தேழு லட்சத்து நாற்பத்தெண்ணாயிரத்து நானுாற்று எண்பத்தொன்பது மைலில் சூரியன் உள்ளான் என்று சொல்லுவதால் நல்ல எல்லை தெரிந்த அறிஞர் என விஞ்ஞானியரை வியந்து ஏமாந்து போகலாகாது.
விஞ்ஞானம் முதலிய எஞ்ஞானங்களுள்ளும் அஞ்ஞானம் ஊடுருவி நின்று அதிகாரங்கள் புரிகின்றது. விசேட ஞானம், வியனான ஞானம், விபரீத ஞானம், விளிவு ஞானம் என்னும் பொருள்களை விஞ்ஞானம் என்னும் சொல் மருவியுளது. காக்கையின் கறுப்பையும் கரடியின் மயிரையும் கருதி நோக்கிக் கருமை அளவுகள் காண்பதும் விஞ்ஞானமேயாகும். பகுத்தறிவதில் நிலையான பலன் நலமாயிருக்க வேண்டும்.
பஞ்சபூத பரிணாமங்களைப் பகுத்து நோக்கிச் சடதத்துவங்களையே ஆராய்ந்து அலமந்து நிற்கும் விஞ்ஞானத்தினும் என்றுமழியாத ஆத்தும தத்துவங்களை ஆராய்ந்து தெளிந்து அல்லல்களை நீக்கியருளும் மெய்ஞ்ஞானம் எஞ்ஞான்றும் மேலானதாய் விழுமிய நிலையில் விளங்கியுள்ளது. இந்த உண்மை ஞானத்தின் எதிரே வேறுவகையான விஞ்ஞானங்கள் எண்மையாகவே இழிந்து நிற்கும். தத்துவ ஞானம் சதாசிவ சத்தியாம்.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
விஞ்ஞானத் தார்க்கா ணவமே மிகுதனும்
எ’ய்’ஞ்ஞானத் தார்க்குத் தனுமாயை தானென்ப
அஞ்ஞானத் தோருக்குக் கன்மம் தனுவாகும்
மெ’ய்’ஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே. 16
- எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்
விஞ்ஞான கன்மத்தால் மெய்யகம் கூடிய
அஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்(கு)
எஞ்ஞான மெய்தீண்டி யேயிடை இட்டுப்போய்
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே. 6
- இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம், பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம்
அஞ்ஞானம், விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் குறித்து வந்துள்ள இந்த மந்திரக் கவிகள் இங்கே நன்கு சிந்திக்கத்தக்கன.
தன்னை மறந்திருக்கின்ற மருள்நிலையை நீக்கி எது தெளிவாக்கி யருளுகிறதோ அந்த ஒளியே உண்மையான ஞானமாம்.
இன்ன சாதி, இன்ன மதம், இன்னான் மகன் என இன்னவாறே மனிதன் பன்னித் திரிகிறான். தேகத்தையே தான் என்று கருதி மோகத்தை அடைந்து விவேகத்தை இழந்து வீணே உழலுகின்றான். உள்ளே இருக்கின்ற ஆன்ம ஒளியே தான் என்பதை அறவே மறந்துள்ளான். அந்த மறப்பு வழியே பிறப்புகளும் இறப்புகளும் பெருகிப் பெருந்துயர்களாய் வந்துள்ளன.
மாய மருளாய் மருவியுள்ள இந்த அஞ்ஞான இருளைத் தூய ஞான ஒளியே தொலைத்தருளுகிறது. இந்த மெய்ஞ்ஞானம் எளிதில் அமையாது; உள்ளம் புனிதமாய் ஒழுகி வருகிற நல்லோரிடமே இது மெல்ல வெளியாகிறது. இனிமேல் இவனுக்குப் பிறவி இல்லை என்று சொல்லுமாறு எவன் படியேறி மேலே வருகிறானோ அவனுக்கே ஞானம் தனியுரிமையாய் இனிமை தருகிறது. ஆன்ம ஞானம் அதிசய மேன்மையாயுள்ளது.
புண்ணிய பரிபாகத்தால் வருவதாதலால் அதனையுடையவர் எண்ணரிய மகிமைகளை எய்தி விளங்குகின்றனர். அரசர் முதல் யாவரும் தலைவணங்கித் தொழுமாறு ஞானிகள் நிலையுயர்ந்து திகழ்கின்றனர். உணர்வு புனிதமாய் உயர்ந்து உரிமையோடு தோய்ந்து உண்மையைத் தெளிவது ஞானம் ஆகிறது.
இது வெளியேயிருந்து வருவதில்லை; மனிதன் உள்ளேயே மருவியுளது. இதனை எளிதே பெறுவதற்கு வழி யாது? என்று ஒரு ஞான முனிவரிடம் ஓர் இளந்துறவி வந்து உளம் கனிந்து வினவினார். அப்போது அப் பெரியவர் கூறியது அரிய போதனையாய் இனிமை சுரந்து வந்தது. அயலே வருவது காணுக.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் 4 காய்)
(1, 5 சீர்களில் மோனை)
ஒன்று கேள்மக னே!புமான் முயற்சியால் உறைத்துமா னுடர்க்கீசன்
நன்று செய்யவே காட்டிய நூல்வழி நடந்துநல் லவர்பின்னே
சென்று துட்டவா தனைவிட்டு விவேகராய்ச் செனித்தமா யையைத்தள்ளி
நின்று ஞானத்தை அடைந்தவர் பவங்கள்போம் நிச்சய மிதுதானே. 62
{புமான் – ஆண்மகன், கணவன், ஆன்மா; காண்க: அசுத்த தத்துவம்
1. ஆண்மகன்
அப் புமானுற்றது யாவருற் றாரரோ (கம்பரா. இராவணன் சோ.31)
2. கணவன், புருசன்
3. ஆன்மா
4. ஆகம தத்துவங்களில் ஒன்றான அசுத்த தத்துவம்
தந்திடும் புமான்கீழெண்மூன் றாய தத்துவம் (சி. சி. 2, 70)}
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் 4 காய்)
(1, 5 சீர்களில் மோனை)
இந்த ஞானந்தான் வருவதெப் படியெனில் இடைவிடா விசாரத்தால்
வந்த டைந்திடும்; விசாரம்தான் ஏதெனின் அனாதியாம் சரீரத்தில்
இந்த நானெவன் சித்தெது சடமெதி ரண்டுமொன் றாய்க்கூடும்
பந்தம் ஏதுவீ டேதென உசாவுதல் பகர்விசா ரமதாகும். 63 கைவல்லியம்
ஞானம் உதயம் ஆகும் வழியையும் அதன் நிலையையும் இவை தெளிவாய் விளக்கியுள்ளன. கெட்ட இயல்புகள் நீங்கி உள்ளம் தூயராய் நல்ல வழியில் ஒழுகி வருபவரிடம் ஞானம் வெளிவருகிறது. அந்த ஞானம் விசாரத்தால் விரிந்து விவேக ஒளிவீசி வியனாய்த் தெளிவடைந்து திகழ்கிறது. விசேடமாய் ஆராய்ந்து சிந்தித்து உண்மை தெரிவது விசாரம் ஆகும்.
நான் யார்? எண்சாண் அளவாய்த் தோன்றியுள்ள இந்த உடம்பா? அல்லது இதனுள் உயிர்ப்பாய் இருக்கும் உயிரா? உடல் உயிர் என நிலவியுள்ள இந்த இரண்டும் ஒன்றாய்க் கூடியது ஏன்? எப்பொழுது சேர்ந்தது? எதற்காக நேர்ந்தது? இறந்து இறந்து பிறந்து மீண்டும் மீண்டும் வந்து நீண்ட துயரோடு ஈண்டு உழந்து திரிவது எதனால்? துன்ப மயமான இந்தக் கூட்டை விட்டுப் பிரிந்து பேரின்ப மயமான அந்த வீட்டை அடைவது எப்படி? என இன்னவாறு விசாரணை புரிந்து விடுதலை பெற விரைந்து நிற்கும் நிலையே ஞானத்தின் கலையாம். உற்ற துக்கங்களை ஒழித்தருளுவதே உண்மை ஞானமாம்.
’ஞானத்தை அடைந்தவர் பவங்கள் போம்; இது நிச்சயம்’ என்றது அதன் நீர்மையை உச்ச நிலையில் உணர்த்தி நின்றது. பிறவித் துன்பங்களை எல்லாம் ஒருங்கே நீக்கிப் பேரின்ப நிலையை அருளும் பேரமுதம் என ஞானம் இங்கே தேற வந்தது. ஞாயிறு போல் ஞானம் உயிர் உயர உதயமாகிறது.
ஒளியால் அன்றி இருள் ஒழியாது; மருளால் நேர்ந்த பிறவி ஞானத்தினால் அன்றி வேறு ஒன்றாலும் நீங்காது. தெளிவான இந்த ஞானம் எவனிடம் ஒளி வீசி நிற்குமோ அவனை வானமும் வையமும் உரிமை கூர்ந்து உவந்து வணங்கி வரும்.
அல்லல்கள் யாவும் ஒல்லையில் நீக்கி அருளும் நல்ல அமுதமாதலால் பேரின்ப எல்லைக்கு ஓரின்ப ஒளியாய் ஞானம் யாண்டும் ஒளி வீசியுள்ளது. இந்த ஒன்றையுடையவன் எல்லாம் உடையவனாய் ஒளிபெற்று உவகையுற்று நிற்கின்றான்.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை;
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று:
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்;
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே. 1
- ஐந்தாம் தந்திரம் 8 ஞானம், பத்தாம் திருமுறை, திருமூலர்
ஞானத்தைக் குறித்துத் திருமூலர் இவ்வாறு பெரு மகிமையாய்க் கூறியுள்ளார். நாச நிலைகளில் உழந்து நீசமாய்க் திரிந்து வந்த சீவனை ஞானம் ஈசனாக்குகிறது; ஆகவே அது திவ்விய சோதியாய்த் தேசு மிகுந்துளது. நீண்ட காலமாய் மூண்டு வந்துள்ள இடரிலிருந்து மீண்டு உய்ய வேண்டுமானால் மேலான மெய்யறிவும் தெய்வத் திருவருளும் சால்போடு சேர்ந்து வர வேண்டும். அல்லல் களைந்து ஆனந்தம் அருள்வது நல்ல ஞானமே.
எந்த வழியால் பந்தபாசங்கள் விளைந்து வந்தனவோ அந்த வழியை அடைத்த பொழுதுதான் அவலத் துயர்கள் ஒழிகின்றன.
மையல் மருள்களால் வெய்ய பிறவிகள் விரிந்து வந்துள்ளன. அந்த மாய இருள் தூய ஞான ஒளியால் தொலைந்து நிலையான தலைமை தெரிய வருகிறது. ஒளியாலன்றி இருள் ஒழியாது; ஞானத்தால் அன்றிப் பிறவி மருள் அழியாது. பிறவி நீங்கவே பேரின்பம் ஓங்குகிறது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
இச்சிறைப் பவங்கள்.நீங்கி இணையிலா முத்தி எய்தல்
மெய்ச்சிவ ஞானத் தன்றி வேறுள கருமத் தாகா(து);
அச்சிவ ஞானம் பெற்றோர் அயனது கற்ப ஈற்றின்
சச்சிதா னந்த முத்தி சார்குவர் என்ப மாதோ.
– திருக்கூவப் புராணம்
பிறவிச் சிறையை நீக்கிப் பேரின்ப முத்தி தர வல்லது ஞானமே; அதனாலன்றி வேறு எதனாலும் அதனை எய்த இயலாது என்னும் இது இங்கே அறியவுரியது. மாய இருள் நீங்கி என்றும் மாயாத பேரானந்த நிலையைச் சீவன் அடைய வேண்டுமானால் தூய ஞான ஒளியை அது அடைந்து கொள்ள வேண்டும் என்பது இங்கே தெளிந்து கொள்ள வந்தது. துயர் ஒழிந்து உயர்நிலையை அடைவதால் ஞானி ஒருவனே உத்தம புத்திமானாய் ஒளிமிகுந்து நிற்கின்றான்; மற்றவர் யாவரும் பிறவித் துயரை வளர்த்துக் கொள்வதால் பேதைப் பித்தர்களாய்ப் பிழைபட்டு உழல்கின்றார். பயன் இழந்தவர் பயித்தியராயினார்.
All are mad except the man who is wise. (Stoic)
ஞானம் உடையவனைத் தவிர மற்ற எல்லாரும் பித்தரே என்னும் இது இங்கே உய்த்து உணரத்தக்கது. மூடப் பித்தனாயிழிந்து ஒழிந்து போகாமல் ஞானச் சித்தனாய் நன்கு உயர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.