துறவிச்சை கொண்டு துணிந்து துறந்து பெருமகிமை கண்டு மகிழ்ந்தான் கனிந்து - துறவு, தருமதீபிகை 953

நேரிசை வெண்பா

பிறவிச் சிறையின் பெருந்துயரம் எல்லாம்
அறவிச்சை கொண்ட அவனே - துறவிச்சை
கொண்டு துணிந்து துறந்து பெருமகிமை
கண்டு மகிழ்ந்தான் கனிந்து. 953

- துறவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பிறவி என்னும் பெரிய சிறையில் மருவியுள்ள கொடிய துயரங்கள் யாவும் அடியோடு ஒழிய வேண்டும் என்று தெளிவு கொண்ட ஞானியே துறவியாய் உயர் மகிமை கண்டான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

துறவு பேரின்ப வீட்டின் திறவுகோல் ஆகும். நெறிகேடராய்ப் பிழைகள் புரிபவர் குற்றவாளிகள் ஆகி அரச தண்டனைகளை அடைந்து சிறைச்சாலைகளில் அடைபட்டுத் துயரங்களை அனுபவிக்கின்றனர். அதுபோல் தீவினைகளைச் செய்த சீவர்கள் பிறவிச் சிறையையடைந்து இறைவன் ஆணையின்படி கரும பலன்களை நுகர்கின்றனர். குறித்த காலம் முடிந்தவுடன் கைதியை விடுதலை செய்து சிறை அதிகாரி வெளியே அனுப்பி விடுகிறான்; வினைப் போகம் கழிந்தவுடன் தேகச் சிறையிலிருந்து நீக்கிச் சீவனைக் காலன் வெளியே போக்கி மேலே வழிகாட்டி விடுகின்றான்.

இப்படிப் பிரிந்து போன சீவன் மறுபடியும் பழக்க வாசனையால் ஆசை வசப்பட்டு இழிவினைகளைச் செய்து அழிதுயரங்களை அடைகின்றன. துன்பத் தொடர்புகள் இவ்வாறு படர்ந்து தொடர்ந்து எல்லையின்றி விரிந்து வருதலால் பிறவிகள் பெருங்கடல்கள் என நேர்ந்தன. வினையும் நுகர்வும் வித்தும் விளைவும் போல் விடாமல் விளைந்து விரிந்து வருகின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின்
விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும்
தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின்
இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல். 10

முற்செயல் விதியை இந்த முயற்சியோ(டு) அனுப வித்தான்
இச்செயல் பலிக்கு மாறென் இதமகி தங்கள் முன்னர்
அச்செயல் ஆனால் இங்கும் அவைசெயின் மேலைக்(கு) ஆகும்
பிற்செயா(து) அனுப விப்ப(து) இன்றுபின் தொடருஞ் செய்தி. 11

மேலைக்கு வித்து மாகி விளைந்தவை உணவு மாகி
ஞாலத்து வருமா போல நாம்செய்யும் வினைக ளெல்லாம்
மேலத்தான் பலமாச் செய்யும் இதமகி தங்கட் கெல்லாம்
மூலத்த தாகி யென்றும் வந்திடும் முறைமை யோடே. 12 - 018 பிரமாணவியல் - இரண்டாஞ் சூத்திரம், சிவஞான சித்தியார்

கருமங்களின் விளைவுகளையும் பிறவித் தொடர்புகளையும் இவை தெளிவாக் காட்டியுள்ளன. பொருள் நிலைகளைக் கருதி யுணர்ந்து பிறவி மூலங்களைத் தெளிந்து கொள்ள வேண்டும்.

பாச பந்தங்கள் படிந்து மயலோடு செய்த செயல்கள் வினைகளாய் விரிந்து பிறவிகளை விளைத்துப் பெருந்துயர்களை இழைத்து வருகின்றன. தொல்லையாய்த் தொடர்ந்து வந்த அல்லல்கள் எல்லாம் அடியோடு தொலைய வேண்டுமானால் பற்றி நின்ற பற்றுகள் யாவும் முற்றும் ஒழிய வேண்டும். அந்த ஒழிவுதான் துறவு என ஒளிபெற்று உயிர்க்கு உறவாய் வந்துள்ளது.

பிறவித் துயரங்களை அறவே நீக்கிப் பேரின்பம் தரவல்லது துறவேயாதலால் அதனையே ஞானிகள் உறவாகப் பற்றி உய்தி பெறுகின்றனர். மெய்யுணர்வு தோன்றியவுடனே மேவியிருந்த செல்வங்களை யெல்லாம் ஒருங்கே துறந்து துறவு நிலையின் அரிய பெருமையை உலகம் அறிய உணர்த்தியருளிய பட்டினத்தார் பிறவிச் சிறையை நீக்கியருளும்படி இறைவனை நோக்கி வேண்டியிருக்கிறார்;

பரமனை நினைந்துருகி அவர் பாடியுள்ள பாடல்கள் அரிய பல தத்துவங்களை மருவியுள்ளன. வித்தக நிலையில் விளைந்து வந்துள்ள விழுமிய பாசுரம் ஒன்று அயலே வருகின்றது.

அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம்
நிறையக் கொடுப்பினுங் குறையாச் செல்வம்
மூலமும் நடுவும் முடிவும் இகந்து
காலம் மூன்றையும் கடந்த கடவுள்
உளக்கணுக் கல்லா ஊன்கணுக் கொளித்துத்

துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர்
எறுப்புத் துளையின் இருசெவிக் கெட்டாது
உறுப்பில் நின் றெழுதரும் உள்ளத் தோசை
வைத்த நாவின் வழிமறுத் தகத்தே
தித்தித் தூறும் தெய்வத் தேறல்

துண்டத் துளையில் பண்டைவழி யன்றி
அறிவில் நாறும் நறிய நாற்றம்
ஏனைய தன்மையும் எய்தா தெவற்றையும்
தானே ஆகி நின்ற தத்துவ
தோற்றுவ எல்லாம் தன்னிடைத் தோற்றித்

தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளை
விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும்
இருள்விரி கண்டத் தேக நாயக
சுருதியும் இருவரும் தொடர்ந்துநின் றலமர
மருதிடம் கொண்ட மருதமா ணிக்க

உமையாள் கொழுந ஒருமூன் றாகிய
இமையா நாட்டத் தென்தனி நாயக
அடியேன் உறுகுறை முனியாது கேண்மதி
நின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு
நெடுநாட் பழகிய கொடுவினை ஈர்ப்பக்

கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில்
குடரெனும் சங்கிலி பூண்டுதொடர்ப்பட்டுக்
கூட்டுச் சிறைப்புழுவின் ஈட்டுமலத் தழுந்தி
உடனே வருந்தி நெடுநாட் கிடந்து
பல்பிணிப் பெயர்பெற் றல்லற் படுத்துந்

தண்ட லாளர் மிண்டவந் தலைப்ப
உதர நெருப்பில் பதைபதை பதைத்தும்
வாதமத் திகையின் மோதமொத் துண்டும்
கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லா
திடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப்

பாவப் பகுதியில் இட்டுக் காவல்
கொடியோர் ஐவரை ஏவி நெடிய
ஆசைத் தளையில் என்னையும் உடலையும்
பாசப் படுத்திப் பையென விட்டபின்
யானும் போந்து தீதினுக் குழன்றும்

பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வௌவியும்
பரியா தொழிந்து பல்லுயிர் செகுத்தும்
வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்
பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும்
ஐவருங் கடுப்ப அவாயது கூட்டி

ஈண்டின கொண்டு மீண்டு வந்துழி
இட்டுழி இடாது பட்டுழிப் படாஅது
இந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள்
வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன்
நின்னை அடைந்த அடியார் அடியார்க்

கென்னையும் அடிமையாகக் கொண்டே
இட்டபச் சிலைகொண் டொட்டிநன் கறிவித்
திச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமல்
காத்தருள் செய்ய வேண்டும்
தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே. 22

- 028 திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, பதினொன்றாம் திருமுறை
.
வினை விளைவுகளை விளக்கிப் பிறவித் துயரங்களைக் குறித்துக் காட்டிக் கொடிய அந்தத் துன்பங்களிலிருந்து நீக்கித் தன்னைக் காத்தருளும்படி இறைவனை நோக்கிப் பட்டினத்தார் இங்ஙனம் முறையிட்டிருக்கிறார். சீவிய நிலைகளின் புரைகளையும் புலைகளையும் ஓவிய உருவமாயுணர்த்தி உயர்பரனைக் கருதி யுருகி உய்திபெற விரைந்துள்ளமையை உரைகளில் உணர்ந்து கொள்கிறோம்

இச்சிறை பிழைப்பித்து இனிச்சிறை புகாமல் காத்து அருள் செய்! வன்று கடவுளிடம் இவர் கனிந்து வேண்டியிருத்தலால் உடலின் பிறவியை இவர் அஞ்சி வெறுத்திருக்கும் அவதி நிலை அறிய வந்தது. அல்லல்வழி நீங்கியதால் ஆனந்த ஒளி ஓங்கி எழுந்தது.

’பிறவிச் சிறை துறவித் துறையால் ஒழியும்’ என்பதை விழி தெரிய விளக்கியுள்ள இவரைத் துறவிகள் யாவரும் உழுவலன்போடு தொழுது வருகின்றனர். முற்றத் துறந்த இவர் பிறவி அறவே நீங்கிப் பேரானந்த நிலையை உறவாய்ப் பெற்றிருப்பதை இவருடைய வாய்மொழிகளே தெளிவாய் உணர்த்தியுள்ளன.

கட்டளைக் கலித்துறை

விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன்
கிட்டேன் அவருரை கேட்டும் இரேன்மெய் கெடாதநிலை
தொட்டேன் சுகதுக்கம் அற்றுவிட் டேன்தொல்லை நான்மறைக்கும்
எட்டேன் எனும்பரம் என்னிடத் தேவந்திங்(கு) எய்தியதே!

- பட்டினத்தார்

பாசபந்தங்களை விட்டுப் பரமனேடு தோய்ந்து இவர் பேரின்பம் பெற்றுள்ள நிலையை இதனால் இனிது அறிந்து கொள்கிறோம்.

உற்ற பற்று அற்று உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jan-22, 10:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே