தைப்பொங்கல்

தைப்பொங்கல்
==============
நெற்றியின் வியர்வை நிலத்தில் சிந்தி
நித்த முழைத்தே நிமிரும் உழவன்
முற்றிய நெல்மணி முழுவதும் அறுத்து
முகமலர் விரிய முறுவல் பூக்க
வற்றிய மண்ணும் வான மழையால்
வறட்சியை மறந்து விட்டது போல்கைப்
பற்றிய மகிழ்வை பண்டிகை யாக்கிப்
பாமரன் பொங்கும் பொங்கலே பொங்கல்
*
கட்டிய கோவணம் கசக்கிக் கசக்கி
கந்தலாய்ப் போன கவலை மாற்ற
ஒட்டிய வயிற்றுக் குணவை ஈயும்
உவகை பூக்க உலக மக்கள்
பட்டினி போக்கும் பரிசாய் பொங்கல்
பண்டிகை வந்தே பரவசம் கூட்டத்
தொட்டில் குழந்தையும் தூக்கம் மறந்தே
துள்ளிடு மன்றோ துன்பம் மறந்தே
**
உழுதவன் வாழ்வில் ஒளிதனை பெறவே
உலகில் மலரும் உயர்ந்த பண்டிகை
எழுதிடும் பொழுதில் இதயம் முழுதும்
இறகுகள் முளைக்கும் எளிய பண்டிகை
அழுதவர் கண்ணீர் ஆறுகள் மாற்றி
அமுதினை யூட்டும் அழகியப் பண்டிகை
விழுதெனத் தாங்கி வேதனைத் தீர்த்து
விடியலைக் காட்ட விளைந்திடும் பண்டிகை.
**
*மெய்யன் நடராஜ்
நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Jan-22, 1:57 am)
பார்வை : 279

மேலே