பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள்!!

சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்பது

ஏனோ இன்று உலகம் பின்னது ஏர் என புரிந்து கொள்ளப்படுகிறது!

உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது

என்று தெரிந்தும் உலக உணவிற்காக உழைத்துக்கொண்டே இருக்கிறான் உழவன்!

சோற்றில் நாமெல்லாம் கை வைக்க!

அவன் தினந்தோறும் சேற்றில் கால் வைக்கிறான்!

ஒட்டிய வயிறோடு இருந்தாலும்
பட்டியில் மாட்டை பட்டினி போடாதவன்
உழவன்!

கோவணத்தில் இருந்துகொண்டு

கோமானுக்கும் உணவு கொடுப்பவன் உழவன்!

பூமி தேவியின் உண்மை புத்திரன் விவசாயி!

அவன் மட்டுமே பூமிக்கு பச்சை ஆடை பரிசளிக்கிறான்!

காட்டைத் திருத்தி பயிர் செய்யும் விவசாயி எங்கே!

வயல்காட்டை கரம்பாக்கி கான்கிரீட் காடாக்கும் நாம் எங்கே?

உழைப்பாளி
ஒட்டிய வயிறோடு இருக்க!

உன் பெருமைக்கு பந்தியில் உணவு வகை அடுக்கி குப்பையில் போடலாமா?

அவன்
உழைப்பைக் நீ
கேவலப் படுத்தலாமா?

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
என்று சொன்னான் பாரதி!

நீயோ உழவுக்கும் தொழிலுக்கும் நிந்தனை அல்லவா செய்கிறாய்?

மால்களில்
மணி பர்சை தாராளமாய் திறக்கும் நீ

மண்ணின் மைந்தனிடம்
பத்து ரூபாய் கீரைக்கு மல்லு கட்டுவது ஏன்?

கரும்பை விளைவித்து கொடுத்த விவசாயி!

கண்ணீரை அல்லவோ விலையாக பெறுகிறான்!

கடன் உடன்
வாங்கி நடுவான் நாற்றை!

கடன்
கொடுத்தவன் கழுத்தை நெறிக்க!

விடுவான் உயிரெனும் பேற்றை!

நட்டபயிர் பட்டுவிட்டால்
பெற்ற குழந்தை செத்ததாய் எண்ணி
நஞ்சை உண்பான்!

விவசாயிகளின் தற்கொலைகள்!

தடுக்கவியலா
தற்குறிகளாக
நாம்
விவாத மேடைகளில் மட்டும் வீர புலிகளாக!

ஆயிரம் கோடி
கடன் வாங்கி அயல்நாட்டுக்கு ஓட்டம் பிடிப்பான்!

ஆடு கோழி
வாங்க கடன் வாங்கி
இவன் அரஸ்டாகி ஜெயிலில் கண்ணீர் வடிப்பான்!

தங்கும்
இன்பம் பெற வேண்டுமா?

எங்கும்
விவசாயம் தழைக்க வேண்டும்!

மங்கா
புகழ் நாடு பெற வேண்டுமா?

மண்ணில் உழைப்பவர் போற்றப்பட வேண்டும்!

நன்றி கடன்
ஆற்ற வேண்டுமா?

வாழும்
நாட்களில்
ஒரு நாள் விவசாயம் செய்து பார்!

மாடுகளைப்
போற்ற வேண்டும்!
மண்ணின் வளம் கூட்டவேண்டும்!

உழவனுக்கும் உறவுக்கும் உயர் மதிப்பளிக்க வேண்டும்!

உன்னத பொங்கலில் உணர்ந்தே எல்லோரும் பொங்கலை பொங்க வேண்டும்!

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!!

கவிஞர் புஷ்பா குமார்.

எழுதியவர் : புஷ்பா குமார் (15-Jan-22, 2:36 pm)
சேர்த்தது : மு குமார்
Tanglish : pongal vaalthukkal
பார்வை : 94

மேலே