மெய்நிகர் காதல்

காலைக்கதிர்
கண் விழிக்குமுன்
அலைக்கதிர் தேகம் தழுவ

கை தானாய்
தேடுகிறது
அலைபேசியை...

உன்
குறுஞ்செய்தி
விரல் தீண்ட

நீயனுப்பிய
முத்தங்கள்
விழிதீண்ட

இளங்கதிர்
இன்பமாய்
உடல் தீண்ட

இதயம் உன்பெயர் சொல்ல
மகிழ்வாய் விடிந்தது
காதலில் பொழுது!

அலைபேசி சிணுங்க
அழைப்பது நீ
என்கிறது இதயம்...

அலைக்காற்றில் மிதந்து வரும்
உன் காதல் பேச்சுக்கள்
காதினை தீண்ட...

சிலிர்க்கிறது தேகம்
உணருகிறேன்..
நெருக்கமாய் என்னருகில் நீ!

காதலில் பிஹச்டி
முடித்தது போல்
உன் வார்த்தைகள்...

கண்ணுக்குள்
விரிகிறது
காதல் பூந்தோட்டம்!

வார்த்தைகள் தடுமாற
தவறாமல் பொழிகிறாய்
முத்த மழைகள்...

தேனில் ஊறிய
கற்கண்டாய்
இனிக்கும் நாழிகைகள்

அலைபேசி வழியே
கொண்டாடுகிறேன் பகலில்
ஓர் காதல் திருவிழா!

இரவின்
மடியில்
தலைசாய்க்க

ஒளிரும் கைபேசி
மீண்டும்
கையில் வர

வழிப்பறி கூட்டமாய்
திரையில்
நம் உரையாடல்கள்

உறக்கத்தை
மொத்தமாய்
களவாடிச் செல்ல

தனிமையில் தவிக்கும்
தலையணையாய்
பரிதவிக்குது என் நெஞ்சம்!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (17-Jan-22, 9:42 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 380

மேலே