கருணையிசை வள்ளல் ரமணன்
" எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே" என்ற பழைய சினிமா பாடலை கணீரென்ற குரலிலே கேட்டு, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பலர் நின்று பாடுபவரை நோட்டமிட்டனர் .பார்ப்பதற்கு நன்கு படித்தவராக பண்புள்ளவராக தெரிந்த ஒருவர் ஒரு வேட்டியை தனக்கு முன் பிரித்து வைத்துவிட்டு, ஒரு சின்ன கை மைக்கில் பாடிக்கொண்டிருந்தார். அவர் எளிமையான உடை அணிந்திருந்தார். அரை மணி நேரம் பாடிய பின் " இன்று என் பாடல்களுக்கு கிடைக்கும் வருமானம் சைதாப்பேட்டையில் உள்ள "நன்றி" அநாதை இல்லத்திற்கு கொடுக்கப்படும் என்று சொல்லிவிட்டு வேட்டியில் மக்கள் போட்ட காசுகளையும் நோட்டுகளையும் எடுத்துக்கொண்டார். அங்கிருந்து தன் ஸ்கூட்டியில் ஏறிக்கொண்டு அந்த இடத்திலிருந்து சென்று விட்டார்.
அடுத்த ஒருமணி நேரம் கழித்து அந்த மனிதர் இன்னொரு பொது இடத்திற்கு சென்று ஒரு வேட்டியை கீழே விரித்தார். " சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா " என்ற பாடலுடன் நிகழ்ச்சியை துவக்கினார். அதன் பிறகு நான்கு ஐந்து பாடல்கள் பாடினார். அரை மணி நேரம் பாடிய பின் " இன்று என் பாடல்களுக்கு கிடைக்கும் வருமானம் சைதாப்பேட்டையில் உள்ள "நன்றி" அநாதை இல்லத்திற்கு கொடுக்கப்படும் என்று சொல்லிவிட்டு வேட்டியில் மக்கள் போட்ட காசுகளையும் நோட்டுகளையும் எடுத்துக்கொண்டார். அங்கிருந்து தன் ஸ்கூட்டியில் ஏறிக்கொண்டு அந்த இடத்திலிருந்து சென்று விட்டார்.
அன்றைய தினம் ஆறு பொது இடங்களில் பாடிவிட்டு, வந்த பணத்தை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு 'நன்றி' அநாதை இல்லத்திற்கு சென்றார். அங்கிருந்த ஒருவரிடம் சுமார் 1000 ரூபாயை கொடுத்து விட்டு ரசீது வாங்கி கொண்டு அங்கிருந்து அவரது வீட்டிற்கு சென்றார். அவருடைய மனைவி இரு குழந்தைகளுடன் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றார். அடுத்த நாள் திங்கள் காலை அவர் தான் பணி செய்யும் ஒரு தொழிற்சாலைக்கு சென்றார். அவருக்கு சனி ஞாயிறு விடுமுறை. அந்த இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொது இடங்களில் பாடி, மக்கள் போடும் பணத்தை ஏதாவது ஒரு அநாதை இல்லத்திற்கு கொடுத்து விடுவார். இவரின் பெயர் ரமணன்.
ரமணனின் மனைவி மாலதி. இருவருக்கும் இரண்டு குழந்தைகள், ஒரு பையன் ஒரு பெண். இருவரும் பள்ளியில் படித்து வந்தனர். ரமணன் பெரிய குடும்பத்தில் பிறந்தவன். அப்பாவுக்கு குமாஸ்தா வேலை. ரமணன் தான் வீட்டில் பெரியவன். அவன் அப்பா ஐம்பது வயதில் திடீரெண்டு காலமானதால் குடும்ப பொறுப்பு ரமணனுக்கு அதிகரித்தது. அவன் தம்பி இருவர் கொஞ்சம் சம்பாதிக்க தொடங்கினர். ஒரு சகோதரிக்கு பாங்கில் உத்தியோகம் கிடைத்தது. மற்ற இருவரும் வீட்டிலேயே இருந்து வந்தார்கள். எப்படியோ அவனது சகோதர சகோதரிகள் அனைவரும் பட்ட படிப்பை முடித்தனர். ரமணனின் அம்மா வெளியே சென்று சமைத்து கொடுத்து கொஞ்சம் வருவாய் ஈட்டினாள். ரமணன் பார்ட் டைம் வேலை செய்து கொஞ்சம் கூடுதல் பணம் கொண்டு வந்தான். இதையெல்லாம் வைத்துக்கொண்டு அவன் இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். பாங்கில் வேலை செய்த சகோதரிக்கு மாப்பிள்ளை வீட்டு காரர்கள் நல்ல மனது பண்ணி வரதட்சிணை வாங்கவில்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு அவன் சகோதரி ரமணன் குடும்பத்திற்கு பணம் தந்து உதவுவதை மாப்பிள்ளையும் அவன் பெற்றோர்களும் விரும்பவில்லை. இதனால் மாத மாதம் வந்த கணிசமான பணம் வருவது நின்றுவிட்டது. மற்ற இரண்டு சகோதரிகளின் கணவர்கள் சாதாரண உத்தியோகம் செய்து வந்ததால், சகோதரிகள் இருவரும் சின்ன கம்பெனிகளில் நாலாயிரம் ஐந்தாயிரம் ரூபாய்க்காக கடினமாக வேலை செய்து வந்தார்கள். ரமணன் அப்பாவுக்கு இருந்தது அவன் தாத்தா அப்பாவுக்கு விட்டு சென்ற சிறு வீடு. மூன்று சகோதரிகளின் திருமணம் செய்ய வீட்டை அடகு வைத்து நிறைய கடன் வாங்கியதால், மாதாந்திர கடன் தவணையை ரமணனால் கட்டமுடியவில்லை. இதனால் அவர்களது வீடு விற்கப்பட்டு, கடன் தொகை போக மீதம் 10000 ரூபாய் மட்டுமே கிடைத்தது. நான்கு சகோதரர்களும் தலா இரண்டாயிரத்து ஐநூறு எடுத்து கொண்டனர். ரமணன் அதன் பிறகு கல்யாணம் முடித்தான் மாலதியுடன். மாலதி வறுமையான குடும்பத்து பெண்தான். உயர்நிலை பள்ளி வரைதான் படித்திருந்தாள். ஆனால் மிகவும் நல்ல குணங்கள் கொண்ட பெண்.
சிறுவயதிலிருந்தே ரமணனுக்கு கருணை நெஞ்சம். உதவுவதென்றால் அவனுக்கு மிகவும் விருப்பம். அவனது சிறு வயதில் ஒரு முறை சுமார் 60 வயது மதிக்கத்தக்க மனிதர் அவர்கள் வீட்டிற்கு வந்து" ஐயா கொஞ்சம் சாப்பாடு கொடுங்கள். சரியாக சாப்பிட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது" என்று கேட்டபோது ரமணனின் நெஞ்சில் சோகம் பொங்கி எழுந்தது. அவன் அம்மா அந்த மனிதருக்கு கொஞ்சம் ரசம் சாதம் பிசைந்து கொடுத்தாள். பிறகு கொஞ்சம் மோர் சாதமும் கொடுத்தாள். அப்போது அந்த மனிதர் " தாயே ஒரு துண்டு ஊறுகாய் கொடுப்பீர்களா? நாக்கெல்லாம் சப்பென்று ஆகிவிட்டது" என்று கேட்டபோது வீட்டில் ஊறுகாய் இல்லை. நல்லவேளையாக கொஞ்சம் தோசை மிளகாய் பொடி இருந்தது. அதை அவருக்கு கொடுத்த போது அதை மிகவும் ஆசையுடன் மோர் சாதத்துடன் கலந்து சாப்பிட்டு விட்டு அந்த மனிதர் " தாயே, உங்கள் பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள்" என்று வாழ்த்தி சென்றார். அவர் தன மனைவி இறந்து விட்டாள் என்றும் இரண்டு பிள்ளைகள் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டனர் , அதனால் அனாதையாக அலைகிறேன் என்றும் சொன்னபோது ரமணனுக்கு கண்களில் நீர் பொங்கியது. அந்த நேரத்தில் அவனுக்கு உதித்த ஞானம் தான் அவனை முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் உதவ வேண்டும் என்ற புத்தியை கொடுத்தது.
ரமணன் சிறு வயதிலேயே நன்றாக பாடுபவன். பள்ளியில் கல்லூரியில் அவன் பல நிகழிச்சிகளில் பாடியுள்ளான். சினிமா மற்றும் இதர பக்தி பாடல்கள் பாடுவதுடன், அவனே பாடல்கள் எழுதி, மெட்டு போட்டு அதையும் பாடி வருவான்.
சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ரமணன் வீட்டு வேலை எதையும் செய்யமாட்டான். அவனது பிள்ளைகள் " அப்பா, சனி ஞாயிறு இரண்டு தினம்தான் எங்களுக்கு விடுமுறை. எங்களுடன் ஏன் அன்று சேர்ந்து பேசி விளையாடமாட்டீர்கள்?" என்று கேட்கும்போது ரமணன் சொல்லும் ஒரே பதில் " உங்களுக்கு துணையாக அம்மா இருக்கிறாள்.ஐந்து நாட்கள் நான் உங்களுடன் மாலையில் சேர்ந்து இருக்கிறேன். அம்மா அப்பா இல்லாத இந்த அனாதை பிள்ளைகளுக்கு குறைந்தது ஒரு வேளை உணவு கிடைக்கத்தான் இந்த இரண்டு நாளும் நான் பொது இடங்களில் பாடி, மக்கள் கொடுக்கும் பணத்தை இந்த அநாதை இல்லங்களுக்கு கொடுத்து, மிகவும் சிறிய அளவில் உதவி வருகிறேன். இப்படி நான் செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள். நான் இப்படி செய்வதை நிறுத்தி கொள்கிறேன்" என்னும் போது அவன் இரண்டு குழந்தைகளும் " அப்பா நீங்கள் எங்களுடன் ஐந்து நாட்கள் மாலை வேளைகளில் உடன் இருப்பதே போதும் . அந்த அநாதை பிள்ளைகளுக்கு நிச்சயமாக நீங்கள் உதவுங்கள்" என்று சொல்லும்போது ராமணனுக்கும் மாலதிக்கும் கண்களில் நீர் வந்து விடும்.
ஒரு முறை ரமணன் பொதுமக்கள் இருக்கும் ஒரு சாலையில் பாடி கொண்டிருந்தான் " கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காக கொடுத்தான், ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்" என்ற பாடலை பாடி முடித்த பின் மக்கள் கைதட்டி அவனை பாராட்டினார்கள். " " ஏம்ப்பா, நீ நன்றாகவே பாடுகிறாய். மேடைகளில் சென்று கச்சேரிகள் செய்தால் உனக்கு நல்ல வரும்படி கிடைக்குமே" என்றார் ஒருவர். இன்னொருவர் " மேடை கச்சேரி என்ன, இவர் சினிமாவில் கூட பாடலாம், நல்ல குரல் இருக்கிறது" என்றார். எவ்வளவு நல்ல உள்ளம் உங்களுக்கு" என்று சிலர் கொஞ்சம் கூடுதலாக அவனுக்கு பணம் கொடுத்தனர். நாள் இறுதியில் அவனுக்கு அன்று 2000 ரூபாய் கிடைத்தது. அதை கொண்டு ஒரு அநாதை விடுதிக்கு கொடுத்து ரசீது வாங்கிக்கொண்டான். அங்குள்ள சிறுவர் சிறுமியர்கள் ரமணனுக்கு " ரொம்ப ரொம்ப நன்றி சார், எங்களுக்காக இவ்வளவு பாடு படுகிறீர்கள்" என்று சொன்னபோது ரமணன் நகைச்சுவையாக " நான் ஒன்றும் பாடு படவில்லை, பாட்டு தான் பாடுகிறேன்" என்றபோது அங்குள்ள சிறுவர்களுடன் அனாதை விடுதி நிர்வாகியும் சேர்ந்து சிரித்தார்.
ரமணனின் பாடல்களுக்கு பின் உள்ள உண்மை காரணத்தை கொஞ்சம் கொஞ்சமாக பல மக்கள் தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர். சிலர் அவனுக்கு மேடை ஒன்று அமைத்து, ஒலிபெருக்கி உதவியும் கொடுத்து பாட வைத்தனர். சில இசைக்கருவி வாசிக்கும் இசை கலைஞர்கள் அவர்களுக்கு நேரம் கிடைத்தால் ரமணன் பாடல்களுக்கு பக்க வாத்தியம் வாசிக்க ஆரம்பித்தனர். இதனால் ரமணனுக்கு பணம் கூடுதல் வருவதுடன் கொஞ்சம் புகழும் பரவத்தொடங்கியது. ஒரு சிலர் சில கம்பெனிகளுடன் பேசி அவைகளின் உதவிகளுடன் அவ்வப்போது ரமணனின் இசை நிகழ்ச்சிகளை கொஞ்சம் பெரிதான கலையரங்குகளில் நடத்தின. வேறு மெல்லிசை குழுவில் பாடி வந்த சில பெண் இசை கலைஞர்களும் அவ்வப்போது ரமணனுடன் சேர்ந்து பாட துவங்கினர், காசு ஏதும் வாங்காமல். இதன் மூலம் ரமணன் மாதத்திற்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கூட அனாதை இல்லங்களுக்கு உதவி வந்தான். ஒரு சமயம் ஒரு கம்பெனி அதிகாரி அவனுடைய பாடும் திறமையை பார்த்து விட்டு " நீ வேறு வேலை ஏதேனும் செய்கிறாயா" என்று கேட்டுவிட்டு ரமணன் சொன்ன பதிலை கேட்டுவிட்டு " நீ என் அலுவலகத்தில் நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு வருவாயா? உனக்கு உள்ள அனுபவம் காரணமாக உனக்கு மாதம் 40000 சம்பளம் தருகிறேன்" என்றபோது ரமணன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதுவரை மாதம் 25000 சம்பாதித்தவனுக்கு 40000 என்பது யோகம் அடித்த மாதிரி இருந்தது. அவருக்கு காலில் விழாத குறையாக நன்றி சொல்லிவிட்டு ரமணன் அவர் கம்பெனியில் வேலை செய்ய துவங்கினான். இதன் மூலம் அவன் குடும்பத்தை மேலும் நல்ல முறையில் பராமரிக்க முடிந்தது.
ரமணனின் பிள்ளைகளும் நன்றாக பாடுவார்கள். இருவரும் கொஞ்ச நாள் இசை பயிற்சி கூட பயின்றார்கள்.அவர்கள் ஒரு நாள் ரமணனிடம் " அப்பா நாங்கள் ஒன்று கேட்கப்போகிறோம். நீங்கள் மறுக்காமல் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறோம்" என்றபோது " சொல்லுங்கள் அன்பு பிள்ளைகளே" என்றான். " நீங்கள் சனி ஞாயிறு அனாதைகளுக்காக பாடி வருவது போல் நாங்களும் அந்த நாட்களில் அனாதை இல்லங்களுக்கு சென்று அவர்களுக்காக பாட விருப்பத்துடன் இருக்கிறோம்" என்றபோது ரமணனும் மாலதியும் கண்கள் கலங்கி அவர்களை பாராட்டினார்கள். " இதை கேட்க எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?" என்று உவகை கொண்டனர். ரமணன் மாலதியிடம் சொன்னான் " நான் உதவி வரும் அனாதை இல்லங்களுக்கு நீ இவர்களை அழைத்து சென்று வருவாயா?". மாலதி " நிச்சயமாக செய்வேன்" என்று மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டாள்.
இதனால் சனி ஞாயிறு கிழமைகளில் வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் சென்று பாடி, வரும் நிதியை அநாதை இல்லங்களுக்கு கொடுத்து வந்தனர்.மாதத்தில் இருமுறை ரமணன் " நோபில் மியூசிக்" என்ற பெயரில் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தான். ஆறு மாதங்களில் இந்த இசை நிகழிச்சிகள் மிகவும் பிரபலம் அடைந்தன. இந்த மெல்லிசை குழுவின் மிகவும் சிறப்பு அம்சம் என்னவெனில், ரமணனை தவிர இதர பாடும் மற்றும் வாத்தியம் வாசிக்கும் கலைஞர்கள் ஒவ்வொரு முறையும் மாறியவண்ணம் இருந்தார்கள். ஏனெனில் எவருக்கு எப்போது ரமணன் குழுவில் வாசிக்க அவகாசம் கிட்டும் என்பது தெரியாது. ஒரு நாளைக்கு முன்கூட்டிதான் யார் ராமணனுடன் பாடப்போகிறார்கள் யார் வாத்தியம் வாசிக்கப்போகிறாரகள் என்கிற விஷயமெல்லாம் தெரியும்.
ஒரு முறை அத்தகைய மெல்லிசை கச்சேரி ஒரு மாலை பொழுதில் பெரிய ஒரு சபாவில் நடந்தது. நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க ஒரு இசையமைப்பாளர் வந்திருந்தார். அவர் ஓரளவுக்கு வளர்ந்து வரும் இசையமைப்பாளர். அவர் பேச்சை முடித்துவிட்டு அவரது இருக்கையில் அமர்ந்தார். அதன் பின்னர் ரமணன் " நீங்க நல்ல இருக்கோணும் நாங்கள் முன்னேற" என்ற வரிகளில் ஒரு பாடலை பாடினார். அந்த பாடல் முடியும் வேலையில் அந்த இசையமைப்பாளர் திடீரென நெஞ்சில் கையைவைத்து " எனக்கு ஏதோ போல் இருக்கிறது"என்று சொல்லிய வண்ணம் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தார். அப்போது அங்கே வந்திருந்த மறுத்தவர் ஒருவர் அவரை சோதனை செய்து " இவர்க்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக ஹாஸ்பிடல் கூடி செல்லவேண்டும்" என்றவுடன் ரமணன் தன் குழு நண்பன் ஒருவனை அழைத்து "இதோ இந்த ஒரு லட்சம் ரூபாய் வைத்து கொள். உடனடியாக இந்த இசையமைப்பாளரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்து விடு. ஆஸ்பத்திரி விபரங்களை எனக்கு மெசேஜ் மூலம் தெரிவி. அவர் குடும்பத்திற்கும் தெரியப்படுத்து. நான் இந்த நிகழ்ச்சி முடித்துவிட்டு நான் ஆஸ்பத்திரிக்கு வருகிறேன்.
அடுத்த இரண்டு மணி நேரம் மெல்லிசை நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து நிறைவேறியது. நேரத்தோடு கூட்டி கொண்டு வந்ததால் அந்த இசையமைப்பாளரை காப்பாற்ற முடிந்ததென பின்னர் மருத்துவர்கள் கூறினார். அவருக்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் பைபாஸ் ஆபரேஷன் செய்யவேண்டும். சுமார் 3 லட்சம் ரூபாய் வரை செலவு பிடிக்கும் எனவும் தெரிய வந்தது. இசையமைப்பாளர் மனைவி " ரமணன் , நீங்கள் தான் ஏதாவது செய்து இந்த ஆப்பரேஷனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போது எங்களிடம் பண வசதி இல்லை. " என்றபோது ரமணன் "நீங்கள் அதைப்பற்றி ஒன்றும் கவலையே கொள்ள வேண்டாம். நீங்கள் உங்கள் பிள்ளைகளை நல்லபடியாக கவனித்து கொள்ளுங்கள். உங்கள் கணவரின் பைபாஸ் ஆபரேஷன் எங்களது பொறுப்பு."
அதன் பிறகு மூன்று வார கடைசியில் ரமணன் இசை நிகழ்ச்சிகள் நடத்தி 350000 வரை நிதி திரட்டி, ஒரு மெல்லிசை நிகழ்ச்சி முடிவில் இசையமைப்பாளரின் மனைவிக்கு வழங்கினான். அதே மாதத்தில் பைபாஸ் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. நினைவு வந்தவுடன் இசையமைப்பாளர் ரமணனை வரவழைத்து கண்ணீர் மல்க நன்றி சொன்னார். " எனக்கு இசை அமைக்க வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு படத்திலும் உங்களை நிச்சயமாக பாட வைப்பேன்" என்று அங்குள்ள அனைவரின் முன்னிலும் தழு தழுக்க கூறினார்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு கீதப்ரியன் என்கிற அந்த இசையமைப்பாளர் மருத்துவ ஓய்வு எடுத்துக்கொண்டார். அதற்குள்ளாகவே அவருக்கு இரண்டு படங்களுக்கு இசை அமைக்க புக் ஆகியிருந்தது . அவர் சொல்லிய வாக்கை தவறாமல் காப்பாற்றினார். ரமணன் முதன் முதலாக " இப்பிறவி இறைவன் எனக்கு தந்த பரிசு" என்ற பாடலை கீதப்பிரியன் இசையில் பாடி, படம் வெளிவந்தவுடன் பாடல் மிகவும் பிரபலமாகியது. அடுத்த ஆறு மாதங்களில் ரமணன் 20 திரை பட பாடல்கள் பாடினார்.அவற்றில் 10 பாடல்கள் ஓஹோ என்று புகழ் அடைந்தது. மற்ற பாடல்கள் சுமாராக அமைந்தது. திரைப்படங்களுக்காக பாடுவதன் மூலம் வரும் வருமானத்தில் பாதியை ரமணன் அனாதை இல்லங்களுக்கு கொடுத்து உதவினார்.
தற்போதெல்லாம் ரமணன் பொது இடங்களில் வந்து வேஷ்டியை விரித்துவிட்டு பாடுவதில்லை. மேலும் " நோபில் மியூசிக்" என்ற தன் மெல்லிசை குழுவில் நிரந்தரமாக பாட நல்ல குரல் வளம் படைத்தவர்களை, ஏழ்மை குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுத்து தன் குழுவில் சேர்த்து கொண்டார் . வாத்யங்களையும் தன் சொந்த செலவில் வாங்கி அவற்றை வாசிப்பதற்கும் ஏழ்மையில் உள்ள வாத்திய இசைக்காரர்களை அவர் தன்னிடம் நிரந்தரமாக வேலைக்கு வைத்துக்கொண்டார். வேஷ்டி விரித்து சில்லறைகள் சேர்த்த அந்த காலம் எல்லாம் போய் இந்நாட்களில் மெல்லிசை மற்றும் திரைப்பட பாடங்கள் மூலம் பாடி நன்கு சம்பாதித்து தன் குடும்பத்தை நல்ல முறையில் கவனிப்பதுடன் பல அநாதை இல்லங்களுக்கும் ரமணன் உதவி வருகிறான்.
இப்போதெல்லாம் அவன் அடிக்கடி பாடும் பாடல்கள் இரண்டு. ஒன்று " எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரே பாடலிலே, பாட்டெல்லாம் உனக்காக பாடுகிறேன் எந்நாளும் , பாடுகிறேன் என்னுயிரே". இன்னொன்று " கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான், ஒருத்தருக்கு கொடுத்தான் இல்லை ஏழைக்காகவும் கொடுத்தான்" .