வேட்டபோழ்து ஆகும் அணி கட்டியில் கொண்டற்று - இன்னிலை 21
நேரிசை வெண்பா
துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காகா ராகல் - புணைதழீஇக்
கூட்டுங் கடு(ம்)இசையான் கட்டியிற் கொண்டற்றால்
வேட்டபோழ் தாகும் அணி. 21
– இன்னிலை
பொருளுரை:
காமவின்பமாகிய விருந்துண்பவர் கணவனும் மனைவியும் முக்தியுலகஞ் செல்வதற்குத் தக்க துணையாவார் என்று ஆன்றோர் கூறுவர்.
அவர்கள் குற்றமில்லாத புணர்ச்சியின்பத்தில் மிகுந்த ஈடுபாடு கொள்ளாது இருப்பார்களானால் அது இறுக்கிக் கட்டிய தெப்பம் போல (புணை) அவர்களைத் தழுவி முக்தியில் சேர்ப்பிக்கும்.
மணம் புரிந்தபோது உண்டாகிய அழகின் தோற்றமும், ஈர்ப்பும் கசப்பு மருந்தினை உண்ணாதவனுக்குக் கருப்புக்கட்டியில் வைத்து ஊட்டினாற் போன்றது.
கருத்து:
கணவனும் மனைவியும் முக்தியுலகு செல்வதற்கு வழித்துணையாவார்; காதலில் ஈடுபாடு மிகுதியும் செலுத்தாது வாழ்ந்தால், அது புணை போலக் கொண்டு போய்ச் சேர்க்கும். மணமுடிப்பது பேரின்ப வாழ்வு குறித்ததுவே ஆகும்.
விளக்கம்:
காதலனும் காதலியுமாக வாழ்ந்து நரை திரை மூப்புப் பிணியால் நலிந்தபோது அவ்விருவர்க்கும் உலகப் பற்று நீங்கிப் பேரின்பத்தில் கருத்துச் செல்வது இயற்கையாதலால், சிற்றின்பத்திற்கு வாழ்க்கைத் துணையாக அமைந்த இருவர் பேரின்பத்திற்கும் துணையாவார் என்பது தோன்ற "துணை என்ப" என்றார்.
காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்றபடி இருவரும் கள்ளமில்லா உள்ளத்தராய்க் கலந்தணையும் இன்பமே இன்பம் என்பது தோன்ற "தோமில் இணைவிழைச்சு" என்றார்.
காமப்புணர்ச்சியில் மிகுதியும் கருத்துச் சென்றால் உலகத்தில் இம்மைப் பயனும் மறுமைப் பயனும் எண்ணாது தீயவழியை நாடுவர் என்றும், அது பேரின்பத்திற்குச் செல்வதற்குத் துணையாகாது என்ற கருத்தினால் "மிக்காகாராகல்" என்றார்.
நீர் வழிச் செல்வார்க்குப் புணை துணையாகிக் கரைசேர்ப்பது போல பேரின்பநெறி செல்வோர்க்குப் புணர்ச்சியின் மிகாமை துணையாகிக் கூட்டும் என்பார் "புணைதழீஇக்கூட்டும்" என்றார்.
கசப்பு மருந்தினைக் காட்டி ஊட்டினால் மக்கள் உண்ணாமல் மறுப்பர். இனிப்பு மேல்தடவி ஊட்டினால் அதனை மறுக்காமல் உண்பர். இது மக்கள் இயற்கையாதலால் கடவுள் சிற்றின்பம் முதலில் காட்டி மக்களுக்குப் பின் பேரின்பத்தில் பற்றுண்டாகும்படி இல்வாழ்க்கை அமைத்திருக்கின்றார் என்பதை விளக்க, வேட்டபோழ்து ஆகும் அணி கட்டியில் கொண்டற்று என்றார். இதனால் இல்லறமே சிறந்தது அதிலிருந்து பின் முக்தியுலகஞ் சேரலாம் என்று குறிப்பாக விளக்கியது.
குறிப்பு:
விருந்து துய்ப்பார் என்பது சந்தம் நோக்கி விருந்துய்ப்பார் எனக் குறைந்து நின்றது. உய்ப்பார் எனப் பிரித்து விருந்து தருவார் எனப் பொருள் கொள்ளினும் பொருந்தும்.
கடு - கசப்பு. இது மருந்தினை உணர்த்தியது. கட்டியிற் கொண்டு ஊட்டினாற் போன்ற என வருவித்து முடிக்க வேண்டும்.