அன்னமும் - தமிழும்

தன்னரும் பந்தமதில் பங்குகொள்ளும் பூங்குயிலே
பொன்னரும் பண்பிலே பொலிந்துவரும் பொன்மயிலே
கன்னலும் சலித்துவிடும் காதல்மொழிக் கண்மணியே
பன்னரிய பாடல்கள் உனக்கென்று பாடவோ

முன்பூத்த மலரிடையே முகம்பூக்கும் குறுநகையோ
கண்பார்த்த சடுதியிலே கரைத்துவிடும் கூர்விழியோ
தன்மை யென்னின் தகைசான்ற அருங்குணமோ
மென்மை யென்னின் எழிற்சிலை வடிவழகோ

என்னவென பாடவோ எதுவென்று பாடவோ
இன்னமுதை இன்பமென்று இசைகூட்டிப் பாடவோ
நன்மைதரும் காரியங்கள் நடக்குமென்று பாடவோ
பின்தொடரும் இடரனைத்தும் தொலைந்துவிட பாடவோ

என்மனதை இன்னதென்று இனங்காட்டிப் பாடவோ
அன்னம்உனை என்னுயிரில் இணைத்தகதை பாடவோ
இன்னுமொரு பிறப்பெடுக்க நினைத்ததை பாடவோ
என்வரையில் நானெழுதி முடித்தகதை பாடவோ

முன்பிருந்த புலவரெலாம் பண்பாடி வைத்தகதை
அன்பிருக்கும் காரணத்தால் பொங்கியெழு செழுங்கவிதை
உன்நெருக்கம் உணர்ந்திவிட்ட உன்மத்தம் தெளியுமட்டும்
என்புருக்கும் வாசகத்தில் என்மயக்கம் தீருமோjQuery171015717000289550698_1653551602491

வான்பிறந்த போதிருந்தே வளம்பொழியும் தீந்தமிழில்
நான்பிறந்த நாள்முதலாய் கேட்டுவந்த சொல்லடுக்கி
இன்பமெனும் சொல்லுக்கு உன்மொழியே பொருளென்றும்
துன்பமெனும் சொல்லுக்கு உன்பிரிவே பொருளென்றும்

என்முறைக்கு நானுமந்த பழங்கதையே பாடவோ
உன்னழகை பாடவென்று புதுமைகள் தேடவோ
பன்மொழி பரவிநின்று கவிமலர்த் தூவவோ
என்மொழி தீர்ந்ததென்று தாய்தமிழை நாடவோ

இன்னது பணியென்று இட்டகடன் ஏற்பதற்கே
இன்னது தடையென்று இதுவரை இருந்ததில்லை
இன்பம் இடையறாது என்றுரைத்த வள்ளுவனார்
சொன்ன சொல்கேட்டு என்நெஞ்சோடு கலந்திடு!!

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (1-Feb-22, 4:36 pm)
பார்வை : 56

மேலே