கடல்

காற்றிலே அசைகின்ற
நீலப் பட்டு - அதன்
மடிப்பிலே பிறக்கின்ற
வெண்ணுரை மொட்டு..
பட்டுக்குச் சரிகை
சரிதான். ஆனால்
இந்த பரபரப்புதான்
யாருக்கு அழைப்போ?
நீலப்பெண் சிரிக்கின்றாள்
வெண்பற்கள் காட்டி - அந்த
நீல வானை அணைக்கின்றாள்
வெண்மேகம் கூட்டி.
அலையலையாய் அவள்
காட்டும் அவசரம் - அந்த
ஆழ் கடலில் மட்டும்
இல்லை அதிசயம்.
ஏக்கங்கள் நுரையாக்கித்
தள்ளுகிறாள் - அவள்
ஆக்கங்கள் முத்தாக்கி
கொடுக்கிறாள்.
தொடுவானில் மஞ்சளரைத்து
குளிக்கிறாள் - மெல்லத்
தொட்டுவிட்டாலோ உப்பாயெங்கும்
கரிக்கிறாள்.
முழு நிலவு அவள் பார்க்கும்
கண்ணாடி - அதைப்
பறிக்க அவள் சீற்றம்
அம்மாடி.
கருவறையில் வாழும் பல
மீனினங்கள் - அவள்
கருணையினால் வாழும் பல
கருப்பினங்கள்.
மிதக்கவிட்டு பலவழியில்
பாதையாகிறாள் - சிலசமயம்
தவிக்கவிட்டு பலர் வாழ்வில்
பாலையாகிறாள்.
தென்றலை அனுப்புகின்ற
தாயாகிறாள் - திடீரென்று
புயலாய் மாறி கொடும்
பேயாகிறாள்.
பார்க்கப்பார்க்க அலுக்காது
அவள் அழகு - ஆனால்
ஆபத்தும் கலந்திருக்கும்
அபரீத அழகு.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (2-Feb-22, 7:33 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : kadal
பார்வை : 102

மேலே