கற்புடையாள் பூண்ட கடன் மூன்று - திரிகடுகம் 64

நேரிசை வெண்பா

நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும்
இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் - தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன் - 64

- திரிகடுகம்

பொருளுரை:

நன்மையான விருந்தினரைப் பாதுகாத்தலால் கணவனுக்கு நட்பினளாம்;

நாடோறும் இல்லறத்தை வழுவாது காத்தலால் பெற்ற தாயாம்;

தன் பழைய குடும்பத்துக்குரிய மக்களைப் பெறுதலால் மனையாளாம்;

விருந்தோம்பல் முதலிய இம்மூன்று செயலும் கற்புடைய பெண் மேற்கொண்ட கடமைகளாம்.

கருத்துரை:

விருந்தோம்பல், மனையறம் போற்றல், மக்கட் பெறுதல் இவற்றைச் செய்யும் பெண்ணே கற்புடைய பெண் எனப்படும்.

மனைக்கிழத்தி - மனைவி. கிழத்தி - கிழமையுடையவள். புறஞ் செய்தல் என்பதில் புறஞ்செய் ஒரு சொல்.

விருந்தினர்க்கு நன்மையாவது, இல்வாழ்வானால் இயன்றவளவு தந்த உண்டி முதலியவற்றை ஏற்று மகிழ்தல்.

தொன்மை குடி - தொல் குடி. தொன்மை - பழைமை, அஃதாவது தொன்று தொட்டு வருவது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-22, 6:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 211

மேலே