29 ஆன்மீக வழியில் அமைதி
அத்தியாயம் – 29
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்
சகிப்புத்தன்மை, சகித்துக்கொள்ளுதல் போன்றவற்றை சிலர் தவறாகப்புரிந்து கொள்கிறார்கள். ஒருவருக்கு தலைவலி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தலைவலி எவ்வளவு நேரம் இருக்குமோ இருந்து விட்டுப் போகட்டும் என்று இருக்கக்கூடாது. அதனை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்றால் ஒரு கஷ்டம் துன்பம் துயரம் வந்து விட்டால் நம் சக்திக்கு தக்கவாறு அந்த துன்பத்தை நீக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மனிதர்களுக்கு வரும் துயரங்களைப் பொறுத்துக்கொண்டு சகித்துக்கொண்டு எவ்விதமான முயற்சியையும் மேற்கொள்ளாமல் சோம்பேறியாக வீட்டில் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள், புராணங்கள் போன்றவை கூறவில்லை. அதேபோல் ஒரு கஷ்டம் வருகிறது என்றால் அதனை உனது சக்திக்கு ஏற்றவாறு தாங்கிக்கொண்டு, அதனை நீக்குவதற்கு முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அப்படி கடினமாக முயற்சி செய்தும் அந்தக் கஷ்டம் தீரவில்லை என்றால், மேற்கொண்டும் அந்தக் கஷ்டமோ துயரமோ தொடர்கிறது என்றால் இதுவும் கடந்துபோகும் என்று எண்ணி அதனை சகித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் சாஸ்திரங்கள் கூறுகிறது.
என்னதான் முயற்சி செய்தாலும் துன்பம் இருக்கும் அதனை சகித்துக் கொள்ளவேண்டும் என்ற பொருளில்தான் சாஸ்திரம் சகிப்புத்தன்மை பற்றி கூறுகிறது. எடுத்தக்காட்டாக உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்கிறோம். அவர் மருந்து மாத்திரைகள் கொடுத்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால் ஒரே நாளில் சரியாகிவிடும் என்று கூறுகிறார் என்று வைத்துக் கொண்டால், அந்த ஒருநாள் வரையிலும் அந்த வலியை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
அதேபோல் நமக்கு தீராத துயரங்கள் கஷ்டங்கள் வந்து விட்டால் நாம் சக்திக்குத் தக்கவாறு அவற்றை களைய முயற்சியை மேற்கொள்ள. வேண்டும், அவ்வாறு முயற்சி செய்தும் அந்தக் கஷ்டம் நீங்கவில்லையென்றால் நமது சக்தி மீறிய கஷ்டம் என்று நினைத்து அதனை சகித்துக் கொள்ளுதல் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதற்குப் பெயர்தான் சகிப்புத்தன்மை என்று ஆன்மிகம் கூறுகிறது.
இதனைத்தான் கிருஷ்ணபரமாத்மா அருச்சுனனுக்கு வெற்றி கிடைக்கும்வரை பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று கீதையில் இரண்டாவது அத்தியாயம் மூலம் உபதேசம் செய்கிறார். துன்பங்கள் வரும்போது அதனை நீக்குவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது சகிப்புத்தன்மை அல்ல. அதனை ஒரு சோம்பேறித்தனம் என்றுதான் கூறவேண்டும். முயற்சிக்குப் பிறகுதான் நாம் சகிப்புத்தன்மையை மேற்கொள்ள வேண்டும். எந்தவித முயற்சியும் செய்யாமல் இருந்து சகிப்புத்தன்மை மேற்கொள்வது சோம்பேறித்தனம் ஆகும். நமக்கு வரக்கூடிய கஷ்டத்தையும் முயற்சிக்குப் பிறகும் அந்தக் கஷ்டத்தை தவிர்க்க முடியவில்லை என்று தோன்றும்போது அதனை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு சகித்துக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
எடுத்துக்காட்டாக ஒருவர் பக்கத்து வீட்டில் குடியிருப்பவருக்கு ஏதோ ஒருவிதத்தில் தேவையில்லாமல் துன்பத்தைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடம் எவ்வளவு கூறியும் அவர் தன் குணத்தில் இருந்து செயல்பாடுகளிலிருந்து மாறவில்லை என்றால், அவர் ஒரு திருந்தாத ஜென்மம் என்று முடிவு செய்து நாம் அதனை சகித்துக்கொள்வதுதான் நல்ல பண்பாடு ஆகும். அப்படியில்லாமல் அவர் செய்யக்கூடிய துன்பங்களை பொறுத்துக்கொண்டு அவரிடம் எந்தவித எதிர்ப்பும் வெளிப்படையாக அவரிடம் எதையும் தெரிவிக்காமல் இருந்து கொண்டு, மனதில் அவரைப்பற்றி அவர் செய்த துன்பங்களை மனதளவில் முணுமுணுத்துக் கொண்டு இருப்பது, சகிப்புத்தன்மையும் அல்ல. அது ஒரு நல்ல பண்பாடும் அல்ல என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒருவர் நமக்கு செய்யும் துன்பங்களை முழுமனதாக பொறுத்துக் கொள்ளவேண்டும். மேலும் அவர் கொடுக்கும் துயரங்களை பற்றி மனதில்கூட எண்ணாமல் அவரைப்பற்றி அவர் செயல்பாடுகளைப் பற்றி முற்றிலும் மறந்து இருப்பதுதான் சகிப்புத்தன்மை ஆகும். அதேபோல் மற்றவர்களிடம் அவரைப்பற்றி தரக்குறைவாக கூறிவிட்டு ‘இருந்தாலும் நான் அவர் எனக்குச் செய்த துன்பங்களையெல்லாம் பொறுத்துப்போகிறேன்’ என்று கூறுவதும் சகிப்புத்தன்மை அல்ல. அவரை மனப்பூர்வமாக மன்னித்து அவரையும் அவர் செய்த துன்பங்களையும் அப்போதே மறந்து விட வேண்டும். அவ்வாறு அவர் நமக்கு செய்த துன்பங்களை மனத் துயரங்களை பற்றி நாம் மறந்து விடாமல் இருந்தால் மனதளவில் துன்பப்பட்டுக்கொண்டு இருப்போம். அதனால் நாம் மன அமைதியை இழக்க நேரிடும்.
சிலபேர் நம்மிடம் கூறுவார்கள் மன ஆற்றமையில்தான் மற்றவர்களிடம் அவரைப்பற்றி குறைகூறி புலம்புகிறேன் என்று கூறுவதும் சரியல்ல. மற்றவர்கள் மீது மனதில் வெறுப்பு உணர்வு எதுவும் இல்லாமல் இருக்கும் செயல்தான் சகிப்புத்தன்மை என்று சாஸ்திரம் கூறுகிறது. மனதைக் கட்டுபடுத்தி அவரிடம் எந்தவித வெறுப்பும் காட்டாமல் முழுமனதாக பொறுத்துக் கொள்ளுதல் என்பதுதான் சகிப்புத் தன்மை எனப்படும். அந்த நபரை விரும்பவும் வேண்டாம் வெறுக்கவும் வேண்டாம். மனதில் அந்த நபரை நினைத்து மனதிற்குள் புழுங்கி முணுமுணுக்காமல் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
முழுமனதாக மன்னித்து பொறுமையுடன் அவரை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். இன்னாசெய்தாருக்கும் இனியவை செய்தல், மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல் அன்பு காட்டுவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று புராணங்கள் சாஸ்திரங்கள் விளக்கிக் கூறுகிறது. திருவள்ளுவர்
“ இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்,
நாண நன்னயம் செய்து விடல் “
என்று பொறுத்துக் கொள்வதைப் பற்றி திருக்குறளில் எளிமையாக விளக்கியுள்ளார்.
நாம் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்றால் கோபப்படாமல் எதையும் பொறுத்து சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும். ஒருவர் வெற்றி அடைந்து இருக்கிறார் என்றால் அவர் எதோ ஒரு இடத்தில் அவரையும் அறியாமல் மற்றவர்களிடம் கோபப்படாமல் மனதளவில் சகிப்புத்தன்மையுடன் இருந்திருப்பார். எனவே அவர் வாழ்க்கையில் வெற்றி அடைந்து இருப்பார். நமது உயர்வுக்கு முக்கிய பண்பு பொறுமை சகிப்புத்தன்மைதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக இராமாயண காவியத்தில் ஒரு காட்சி. இராவணன் படைகளையெல்லாம் இழந்து, தன்னிடமுள்ள போர் ஆயுதங்களை எல்லாம் இழந்து நிராயுதபாணியாக போர்க்களத்தில் நின்றுகொண்டு இருந்தான். அப்போது இராமன் நினைத்திருந்தால் அவனை ஒரே அம்பில் வீழ்த்தியிருக்கலாம். ஆனால் இராமன் அவ்வாறு அவனை வீழ்த்துவதற்கு நினைக்கவில்லை. இராமன் தன்னோட மனைவி சீதாபிராட்டியை இராவணன் கவர்ந்து சென்றவன் என்று தெரிந்திருந்தும், அவன் மீது கோபப்படவில்லை.
அதற்குமாறாக இராமன் அவனிடம் புன்னகையுடன் பொறுமையுடன் சகிப்புத்தன்மையுடன் “இராவணா அனைத்தையும் போர்க்களத்தில் இழந்து நீ என் முன்னால் நிற்கிறாய். அதனால் நீ இன்று போய் நாளை வா“ என்று கூறினான். இராவணன் மனம் திருந்தி சீதாபிராட்டியை இராமனிடம் ஒப்படைத்து இருந்தால் இராமபிரான் அவனை மன்னிக்கவும் தயாராக இருந்தான். இராவணன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதுபோல் போர்க்களத்தில் ‘இன்றுபோய் நாளை வா’ என்று இராமபிரான் கூறினான். இது இராமபிரானின் பொறுமை என்னும் உயர்ந்த குணத்தை எடுத்துக் காட்டுகிறது. மனிதனுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவை வேண்டும் என்பதை இராமாயணம் என்னும் இதிகாசம் இராமபிரானின் செயல்பாடுகள் மூலம் நமக்கு எடுத்துக் கூறுகிறது.
சில நேரங்களில் ஒரு காரியத்தில் செயலில் ஈடுபடும்போது தோல்வி அடைந்திருப்போம். ஏன் தோல்வி அடைந்தோம் என்பதை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாம் அப்போது பொறுமையோ சகிப்புத்தன்மையோ இல்லாமல் இருந்திருப்போம் அல்லது நம்மையும் அறியாமல் உணர்ச்சி மிகுதியில் பொறுமையை இழந்திருப்போம். யாரிடமாவது கோபத்தில் பொறுமையில்லாமல் பேசி இருப்போம். அதனால் நாம் அந்த காரியத்தில் கிடைக்க வேண்டிய வெற்றியை இழந்திருப்போம். மற்றவர்கள் மீது காரணம் இல்லாமல் கோபப்படுவது நல்ல பண்பு அல்ல. கோபம் மனிதனை சிந்திக்கும் தன்மையை இழக்க வைத்து மிருகத்தின் தன்மைக்கு கொண்டு சென்று விடும். மனிதன் புனிதனாக வேண்டும் என்றால் பொறுமை சகிப்புத்தன்மை போன்றவை வேண்டும் என்று ஆன்மீகம் கூறுகிறது.
நமக்கு வரக்கூடிய துன்பங்களை சகித்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் அல்ல. நமது வாழ்வில் அடையக்கூடிய மகிழ்ச்சி இன்பத்தையும் சகித்துக் கொள்ளவேண்டும் என்று ஆன்மிகம் கூறுகிறது. இன்பத்தில் என்ன சகிப்புத்தன்மை இருக்கிறது என்று நாம் நினைக்கலாம். இன்பத்திலும் சகிப்புத்தன்மை இருக்கிறது. ஒருவருக்கு எதிர்பாராத வெற்றி, பணம் பதவி, புகழ் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதன்பின் அவருடைய பேச்சு, செயல்பாடுகளில் அவரது நடவடிக்கைள் முற்றிலும் மாறி இருக்கும். இதுபோன்ற மனிதர்களை பெரும்பாலும் நாம் உலகில் சந்தித்து இருப்போம். அப்படிப்பட்ட மனிதர்களின் தலைகால் தெரியாமல் ஆடும் ஆட்டம் பாட்டம் எப்போது நிற்கும். அவர்கள் இயல்பு நிலைக்கு வருவார்கள் என்றால் அவர்களது வாழ்வில் ஒரு மிகப்பெரும் தோல்வியை அல்லது இழப்பை சந்திக்கும்போதுதான் பொறுமை பணிவு போன்ற குணங்கள் மீண்டும் அவர்களிடம் வரத்தொடங்கும்.
ஒருவருக்கு திடீரென்று பதவி உயர்ந்து முப்பாதாயிரம் சம்பளம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவன் தனக்குக்கீழ் வேலைபார்க்கும் பணியாளர்களிடம் வரம்பு மீறி தன்னுடைய அதிகாரத்தை காட்டுவது கூடாது. அவ்வாறு அதிகாரத்தை காட்டுவதற்கு அவன் நினைத்தாலும் மனதை அதன் வழியே செல்லவிடாமல் மனதை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு ஆன்மிகம் பலவழிகளில் துணை புரிகிறது. சத்சங்கத்தில் கலந்து கொண்டால் இனிமையான இயல்பான நல்ல பண்புகளை நாம் கடைபிடிப்பதற்குத் தோன்றும்.
வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றி வந்து விட்டால் அவை கல்வியில் பதவியில் புகழ் எது என்றாலும் மகிழ்ச்சியில் தன்னுடைய நிலையை எப்போதும் மறந்து விடக்கூடாது. சிலர் திடீர் பணக்காரராகி விட்டால் நெருங்கிய சொந்தங்களைகூட ஒரு அலட்சியப் பார்வையுடன் பார்ப்பார்கள். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான் என்று பழமொழி கூறுவார்கள். நாம் உயர்ந்த நிலைக்கு வந்தவுடன் செயல்பாட்டில் கர்வத்துடன் நடந்து கொள்ளாமல் இயல்புநிலையில் அனைவரிடம் நடந்து கொள்ள வேண்டும். எதிர்பாராத வெற்றி வந்தாலும் பொருள். புகழ் , பதவி போன்றவை வந்தாலும் நாம் இயல்பு நிலையில் இருந்து நிதானமாக இருப்பதுதான் இன்பத்தில் சகிப்புத்தன்மை என்று சாஸ்திரம் கூறுகிறது.
சிலர் பணம் பதவி புகழ் போன்றவை கிடைப்பதற்கு முன்பு வரை நன்கு பேசி பழகியவர்களைகூட உறவுமுறை வைத்து அழைத்துப் பேசி மகிழ்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எதிர்பாராமல் உயர்பதவி, பணம், புகழ் போன்றவை கிடைத்துவிட்டால், தன்னோட நெருங்கிய உறவுகளைக்கூட உறவு வைத்து அழைப்பதற்கு விரும்புவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தன்னோட வாழ்வில் ஏற்றத்திலும் இறக்கத்திலும் மனநிலையில் செயல்பாடுகளில் சமநிலையில் இருக்க வேண்டும் என்று ஆன்மிகம் வலியுறுத்திக் கூறுகிறது. அவ்வாறு நமது மனமும் செயலும் சமநிலையில் இருக்கும்போது நாம் தேடும் விரும்பும் அமைதி நம்மையும் அறியாமல் வந்து சேரும்.
வாழ்க்கையில் எதிர்பாராமல் வரக்கூடிய வெற்றி புகழ் போன்றவற்றை நிதானமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் அதாவது வெற்றி புகழ் இவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டும். வெற்றியிலும் புகழிலும் சகிப்புத்தன்மை அவசியம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. மனிதன் எந்தநிலையில் இருந்தாலும் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை சாஸ்திரங்கள் வலியுறுத்திக் கூறுகிறது. அவ்வாறு சகிப்புத்தன்மையுடன் இருக்கும்போது நமது மனம் பிறரை தாழ்வாக எண்ணுவதில்லை. அனைவர் மீது அன்புடன் நடந்து கொள்வதற்கு தோன்றும்.
நாம் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வதற்கு ஆன்மீகவழியில் இதிகாசங்கள், புராணங்கள் வழி காட்டுகிறது. மனிதனுக்கு சகிப்புத்தன்மை, பொறுமையெல்லாம் தொடர்ந்து இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவன் சிந்தித்துப் பார்த்து செயல்படவேண்டும். இது நமது அறிவு, அனுபவங்கள் மூலம் வரவேண்டும். அதற்கு பொறுமையாக ஆன்மீக வழியில் தியானம், ஜபம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு கஷ்டம் வருகிறது என்றால் முயற்சி செய்தும் அந்தக் கஷ்டம் நம்மை விட்டு அகலவில்லை என்றால் அறிவுபூர்வமாக சிந்தித்து அந்தக் கஷ்டத்தின் தன்மை அறிந்து அதனை சகித்துக் கொள்வதற்கு பழக வேண்டும்.
சகிப்புத்தன்மைக்கு முதலில் பொறுமை இருக்க வேண்டும். கஷ்டமான சூழ்நிலையில் பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு ஒரு வழியும் இல்லை என்ற முடிவுடன் அந்த கஷ்டத்தை நாம் பொறுத்துக்கொண்டு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவர் செய்த தவறுகளை பலமுறை சுட்டிக்காட்டியும் அவர் திருந்தவில்லையென்றால் அவர் ஒரு திருந்தாத ஜென்மம் என்று நாம் அறிவுபூர்மாக சிந்தித்து சகிப்புத்தன்மையை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மேலும் நமது வெறுப்புத்தன்மையை அவரிடம் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தால், நமக்குதான் அவர் மூலம் நம்மையும் அறியாமல் மனதளவில் துன்பப்பட்டுக்கொண்டிருப்போம். இதனை நாம் அறிந்து பொறுமையுடன் இருப்பதற்கு பழகிக்கொள்ளவேண்டும். ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். இதனை ஆன்மீக வழியில் சிந்தித்துப் பார்த்தால் ‘வாழ்வில் பொறுத்தார் மன அமைதி பெறுவார்கள்’ என்று கூறலாம்.
உலகில் சிலபேர் ஒருவர் செய்த தவறுகளை தன்மையாகக் கண்டித்தும் கேட்கவில்லையானால், நாம் அவரிடம் பொறுமையுடன் நடந்து கொண்டால் அது கோழைத்தனம் என்று கூறுவார்கள். நாம் அவரை ஏதோ ஒருவிதத்தில் பழி வாங்கினால்தான் வீரம் என்று கூறுவார்கள். இதனையெல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இது நமது கோபத்தை தூண்டக்கூடிய தவறான சிந்தனை என்று புரிந்து கொள்ள வேண்டும். அறிவுபூர்வாக சிந்தித்து பொறுத்துக் கொள்ளுதல், ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை வீரத்தைவிட உயர்ந்த பண்பு என்று ஆன்மிகம் கூறுகிறது.
நமது கஷ்ட நிவர்த்திக்காக பரிகாரம் தேடுவதிலும் அறிவுபூர்வமாக நாம் செயல்படவேண்டும். சின்னக்கஷ்டதிற்கு பரிகாரம் என்ற பெயரில் அதாவது அந்த சின்னக்கஷ்டத்துக்கு நிவாரணம் செய்கிறேன் என்ற எண்ணத்தில் வேறு ஒரு பெரிய கஷ்டத்தில் போய் நாம் மாட்டிக்கொள்ளக் கூடாது. எடுத்துக்காட்டாக வாடகை வீட்டில் குடியிருக்கும்போது வீட்டுச்சொந்தக்காரன் வந்து அவருடைய வீட்டினை பராமரித்து வருவதில் சில குற்றச்சாட்டுகளை நம்மிடம் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் அவற்றைக் கேட்டுக்கொண்டு அவர் சொல்வதில் நியாயம் இல்லை என்றாலும் நாம் சகிப்புத்தன்மையுடன் இருந்து அவருக்கு ஏற்றபடி அவர் மனம் திருப்தியடையும்படி பொறுமையாக பதில் கூற வேண்டும்.
அதற்கு மாறாக அவரிடம் வீண்விவாதம் செய்து சண்டை போட்டுக்கொண்டு வேறுவழியில் தீர்வு காணுகிறோம் என்ற எண்ணத்தில், அந்த வீட்டைக் காலி செய்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன்பிறகு வேறு ஒரு வாடகை வீட்டை அவசரமாக பார்த்து குடிபோய் விடுகிறோம். ஆனால் அந்த புதிய வாடகை வீட்டில் சரியாகத் தண்ணீர் வராமல், போக்குவரத்துக்கு வசதி இல்லாமல் இருப்பது போன்ற பெரிய கஷ்டத்தில் போய் மாட்டிக்கொள்வது அறிவுபூர்வமான செயல்கள் அல்ல. இதற்கு காரணம் நமது அறியாமையின் விளைவுதான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். எனவே நாம் எந்தச்செயலையும் உணர்வுபூர்வமாக சிந்திக்காமல் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்புரிய வேண்டும் என்று ஆன்மிகம் கூறுகிறது.நம்
ஒரு கஷ்டம் எதிர்பாராமல் நமக்கு வந்து விட்டால், அந்தக் கஷ்டம் ஏன் வந்தது என்று சிந்தித்துப் பார்க்காமல் அவசரப்பட்டு முடிவு செய்வது அறிவு பூர்வமானதல்ல. சகிப்புத்தன்மை என்பது அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும். ஆன்மீக வழியில் சிந்தித்து வரக்கூடிய சகிப்புத்தன்மை அறிவுபூர்வமாக இருக்கும். சூழ்நிலையறிந்து அறிவுபூர்வமாக சிந்தித்து நாம் சகித்துக்கொள்வதற்கு பழகவேண்டும் அதற்கு அறிவுபூர்வமான சிந்தனைகள் நம் உள்ளத்தில் வரவேண்டும். அதற்கு உயர்ந்த கருத்துக்களைக் கூறும் ஆன்மீக நூல்களை தினமும் படித்து வரவேண்டும்.
உயர்ந்த கருத்துக்களை அடிக்கடி நம் மனதில் பதிவு செய்தால், நமக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். மனதிற்கும் ஒரு ஆறுதல் அமைதியும் கிடைக்கும். ஆன்மீக அன்பர்களை அடிக்கடி சந்தித்து அவர்கள் மூலம் வரக்கூடிய அறிவுபூர்வமான கருத்துக்களை மனதில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அலைபாயும் மனதிற்கு ஆன்மிகம் ஒரு வடிகாலாக அப்போது செயல்படும், சத்சங்கத்தில் ஈடுபட்டு ஆன்மீக அன்பர்களின் அனுபவங்களைக் கேட்டுக்கொண்டு அதன்படி செயல்புரிய வேண்டும். அவ்வாறு செயல்புரியும்போது ஆன்மீகத்தில் முன்னேற்றம், குழப்பம் அடைந்த மனதிற்கு ஒரு நல்ல தீர்வு, மனஅமைதி போன்றவை கிடைக்கும்.
ஒரு செயலில் நாம் ஈடுபடும்போது சூழ்நிலையை அறிந்து செயல்படவேண்டும். சிலர் கஷ்டப்படும்போது அந்த கஷ்டத்திலிருந்து தற்சமயம் மீள்வதற்கு முடியாது என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தபோதிலும் அந்தக் கஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ள தாங்கிக்கொள்வதற்கு மனதில் தைரியம் இருக்காது. அதனால் அவர்கள் கஷ்டங்களிலிருந்து மீளவும் விலகவும் முடியாமல் மனத்துயரில் ஆழ்ந்து விடுவார்கள். அதனால் மன அமைதியையும் இழக்க நேரிடிகிறது.
இதற்குக் காரணம் என்னவென்றால் கடந்தகாலத்தில் நமக்கு சிறுசிறு கஷ்டங்கள் வரும்போது, நம்மையும் அறியாமல் அந்தக் கஷ்டங்கள் ஏதோ ஒருவிதத்தில் நம்மைவிட்டு அகன்றிருக்கும். அதேபோல் இந்தக் கஷ்டமும் அவ்வாறு தங்களை விட்டு அகன்றுவிடும் என்று நம்பிக்கையுடன் இருப்போம். அல்லது எதிர்ப்பார்ப்போம். இதற்கு நாம் அறிவுபூர்வமாக ஆன்மீக வழியில் சிந்தித்து பொறுமையாக எளிதில் தீர்க்கமுடியாத அந்தக் கஷ்டத்தை பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ வேண்டும். இந்த இடத்தில் கண்டிப்பாக நமக்கு சகிப்புத்தன்மை அவசியம் வேண்டும்.
அவன் பசியே தெரியாமல் வளர்ந்திருக்கான். வசதியான வீட்டுப்பிள்ளைகள் அடிக்கடி ஏதாவது சாப்பிடுவதால், பசி என்றால் என்ன என்பதுகூட அவர்களுக்குத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை. சிலபேர் தாங்கள்பட்ட கஷ்டங்களை தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைப்பது தவறு இல்லை. ஆனால் அவர்கள் அளவுக்கு மீறி தங்கள் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்ப்பார்கள். இதனால் உங்கள் குழந்தைகளை சோம்பேறியாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறீர்கள் என்பதை யாரும் உணர்வதில்லை.
ஒரு காலத்தில் நீங்கள் கஷ்டப்பட்டு, அந்த கஷ்டத்தை நன்கு உணர்ந்து வளர்ந்ததால்தான், வாழ்வில் முன்னேற்றம் அடைந்தீர்கள். நீங்கள் கஷ்டத்தை உணர்ந்ததினால்தானே வாழ்க்கையில் முன்னுக்கு வந்தீர்கள். அதேபோல் உங்கள் குழந்தைகளும் ஓரளவு கஷ்டத்தை உணர்ந்தால்தான் அவர்கள் உங்களை விட முன்னேற்றம் காணமுடியும் என்பதை உணர்ந்து, உங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் குடும்பச் சூழல்கூட உங்கள் மன அமைதியை கெடுப்பதற்கு வாய்ப்பு உண்டு.
நம்மிடம் வளரும் குழந்தைகள் கஷ்டங்களை உணரவேண்டும் அப்போதுதான் அவர்களும் எதிர்காலத்தில் வாழ்க்கையில் முன்னேற்றம் காணமுடியும். அளவுக்கு மீறி செல்லம் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் உங்கள் குழந்தையின் முன்னேற்றத்தினை நீங்களே கெடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம் ஆகும். எனவே குழந்தையிலிருந்து கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் மனபக்குவம் குழந்தைக்கு வரவேண்டுமென்றால் அந்தக் குழந்தை கஷ்டப்பட்டால்தான் அதனை எப்படி சமாளிப்பது என்பது பற்றி குழந்தைக்கு இயல்பாக தெரிந்து கொள்வதற்கு முடியும்.
ஆன்மீக அன்பர்கள் பாதயாத்திரை, விரதம் தவம் போன்ற கடுமையான வலிகளை தாங்கிக்கொண்டு ஆனந்தத்துடன் செய்கிறார்கள். குழந்தைகள் விரும்பி ஆடி ஓடி விளையாடும்போது குழந்தைகளுக்கு உடல் வலி எதுவும் தெரிவதில்லை. அதற்கு காரணம் அது விரும்பி வேகமாக ஓடி ஆடி விளையாடுவதால் அப்போது வலி எதுவும் தெரிவதில்லை. அதேபோல்தான் ஆன்மீக அன்பர்கள் பாத யாத்திரை விரதம், தவம் போன்றவற்றை விரும்பி மேற்கொள்வதால் அவர்களுக்கு எந்தவிதக் கஷ்டமும் மனதளவில் தெரிவதில்லை. இதிலிருந்து என்ன உணர்கிறோம் என்றால் எந்தவொரு செயலும் நாம் விருப்பப்பட்டு செய்யும்போது அதில் எந்தவிதக்கஷ்டமும் தெரிவதில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
எந்தவொரு செயலையும் நாம் சந்தோசமாக விரும்பி செய்யும்போது அல்லது ஏற்றுக்கொள்ளும்போது மனதில் எவ்வித வலிகளோ கஷ்டமோ நமக்கு தெரிவதில்லை. இதற்கு ஆன்மீக வழியில் பயிற்சியை தினமும் தவறாமல் செய்ய வேண்டும். சரியான ஞானம் என்பது பொறுமையாக அனைத்து துன்பங்களையும் எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும். இதற்கு ஆன்மீக வழியில் தியானம் செய்வது ஒரு வழிமுறையாகும்.
கஷ்டத்தை உணராமல் இருக்க வசதியாக வாழக்கூடாது. கஷ்டத்தை தாங்கிக் கொள்ள சக்தி வேண்டும். முதியவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால், கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தி முதுமை அடைந்தவர்களுக்கு இல்லாமல் இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு அவ்வாறு இருப்பதில்லை. அவர்கள் விரும்பி ஆன்மீக சாதனைகளை பொறுமையாக செய்யும்போது பூரணமாக அவர்களால் செய்ய முடியும். சிலர் தியானம் போன்ற ஆன்மீக சாதனைகளை செய்யும் ஆர்வத்தில் ஆரம்பித்து விடுவார்கள். அதில் பொறுமையில்லாதவர்கள் சாதனைகளை இடையில் விட்டுவிடுவார்கள். பொதுவாக தியானம் போன்ற ஆன்மீக பயிற்சிகள் ஆரம்பத்தில் சிறிது கஷ்டமாகத்தான் இருக்கும். தொடர்ந்து ஆன்மீக சாதனைகளை செய்து வரும்போது அதில் மன அமைதியைக் காணலாம்.
எடுத்துக்காட்டாக சிலர் கிணறு வெட்ட ஆரம்பித்து விடுவார்கள். குறிப்பிட்ட ஆழம் வரை வெட்டுவார்கள் தண்ணீர் வரவில்லை என்று பொறுமை இழந்து தோண்டுவதை விட்டு விடுவார்கள். அவர் பொறுமையுடன் இன்னும் ஐந்து அடிகள் தோண்டியிருந்தால் தண்ணீர் வந்து விடும். இதற்கு காரணம் பொறுமை இல்லாதுதான். சகிப்புத்தன்மை பொறுமையின் பலன் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால், நாம் எடுத்துக்கொண்ட காரியங்கள் மற்றும் சாதனைகளில் முழுமையாக வெற்றி பெறலாம் என்று இதிகாசங்கள் புராணங்கள் விளக்கிக் கூறுகிறது. பகவத்கீதை மூலம் அர்ச்சுனனுக்கு நீ பொறுமையாக சிந்தித்து செயல்புரிந்தால் வெற்றி அடைய முடியும் என்று பொறுமையைப்பற்றி எடுத்துக் கூறுகிறார். ஆன்மீக வழியில் நமக்கு பொறுமை சகிப்புத்தன்மை போன்றவை இருந்தால் நாம் விரும்பும் தேடும் மன அமைதியை பெறுவதற்கு முடியும். (அமைதி தொடரும்)
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்
வட்டாட்சியர் ( பணி நிறைவு)